சிறுகதை - இரண்டாவது பேருந்து!

ஒவியம்: கரோ
ஒவியம்: கரோ

-திருவாரூர் பாபு

னுவை பி. ஏ - விடம் கொடுத்துவிட்டு, எதிரே நின்ற கூட்டத்தைப் பார்த்து வணங்கினார் அமைச்சர்.

சைரன் ஒலித்துக்கொண்டு, வேகமாக வந்து நின்ற காரில் அமைச்சர் ஏற முயன்றபோது, கூட்டத்திலிருந்த ராமைய்யா, போலீஸ் வளையத்தை உடைத்துக்கொண்டு முன்னே வந்தார்.

"ஐயா...." என்றார் சத்தமாக.

காரில் ஏற முயன்ற அமைச்சர் திடுக்கிட்டுத் திரும்ப, சுதாரித்துக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், ராமைய்யாவைப் பிடித்துத் தள்ளினர். அதைக் கண்ட கூட்டம் உணர்ச்சி வசப்பட்டு அமைச்சரை நோக்கி முன்னேற,   "விடுங்க அவரை" என்றார் அமைச்சர் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் நோக்கில்.

ராமைய்யா அமைச்சருக்கு முன்னால் வந்தார்.

கும்பிட்டு விட்டுப் படபடப்பாகப் பேசினார் .

"நாங்களும் மனு கொடுத்துக்கிட்டுத்தாங்க இருக்கோம். ஒரு நடவடிக்கையும் இல்லீங்க. உங்களுக்கே பல தடவை மனு அனுப்பிட்டோம். எங்க ஊருலேந்து டவுன் பன்னிரண்டு கிலோமீட்டருங்க. எங்க ஊர்ல கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் இருக்கோம். பள்ளிக்கூடம் போறதுக்கு மட்டும் கிட்டத்தட்ட நூறு புள்ளைங்களுக்கு மேல தினமும் டவுனுக்கு வர்றாங்க. ஒரே ஒரு பஸ்... அதுவும் பிரைவேட் பஸ்ஸுதாங்க ஓடுது. ஒன்பது மணி டிரிப்புல கூட்டம் தொங்கிக்கிட்டுத்தாங்க வரும். வழியில பள்ளிக்கூடம் போற புள்ளைங்க ஏறவே முடியாதுங்க. ஆம்புளப்புள்ளைங்க சைக்கிள்ல வந்துடும். பொம்பளப்புள்ளைங்க என்ன பண்ணும்....?

"அரசாங்க விதிப்படி ஒரு நாள் கலெக்ஷன் ரெண்டாயிரத்த தாண்டினா அந்த ஊருக்கு இன்னொரு பஸ் விடலாம்னு இருக்கு.... ஒரு நாள் கலெக்ஷன் மூவாயிரம் ஆகுதுங்க. ஆனா எங்க ஊருக்கு ஒரு பஸ்ஸே இல்லைங்க. தாலுக்கா ஆபீஸ் முன்னாடி போராட்டம் நடத்தினா, ரெண்டு நாள் பஸ் வரும். மூணாவது நாள் மழை பேஞ்சா வராதுங்க. ரோடு மோசமா இருக்குன்னு டிரைவருங்க இந்த ரூட்டுல வர பயப்படறாங்க. அதுக்கப்புறம் பஸ் வரவே வராதுங்க... ரோடு மோசமாத்தான் இருக்கு. நாங்க என்ன செய்ய முடியும். அரசாங்கம்தான் ரோடு போடணும். எங்க ஊர்லயிருந்து பொம்பளைங்க டவுனுக்கு வர முடியலைங்க. வழியில இருக்கிற எட்டு கிராம மக்களும் படற கஷ்டம் கொஞ்சமில்லைங்க. விசேஷ நாளுன்னா நடந்தே டவுனுக்கு வர்றாங்க..."

ராமைய்யா மூச்சு விடாமல் பேசி முடிக்க, அமைச்சர் அவரை ஆதரவாகப் பார்த்தார்.

"இந்தத் தடவை கண்டிப்பா நான் நடவடிக்கை எடுக்கறேன். கூடிய சீக்கிரம் உங்க ஊருக்கு நிரந்தரமா பஸ் விட ஏற்பாடு பண்றேன். போதுமா...?"

கூட்டம் மகிழ்ந்தது.

"அமைச்சர்..." "வாழ்க!" கூட்டம் முழங்கியது.

கார் சீராக சென்றுகொண்டிருக்க, பெட்டிஷனை நிதானமாகப் படித்து முடித்தார் அமைச்சர். மனசுக்குள் எண்ணங்கள் ஓடின. சரசரவென்று

''ஏன்யா பெருமாளு...." பக்கத்தில் அமர்ந்திருந்த வட்டம், ''ஐயா" என்றது பவ்யமாய்.

"இப்ப ஓடிக்கிட்டு இருக்கிற பஸ்ஸு யாரோடதய்யா...?”

"ரத்னசாமி செட்டியாரோடதுங்க. பஸ்ஸா அது... தகர டப்பா... ஆனா கலெக்ஷனுக்குக் கொறைச்சல் இல்லைங்க. காசை அள்ளிக் கொட்டறாருங்க!"

''அப்படியா... ரூட்டையும் பஸ்ஸையும் நம்மகிட்ட கொடுப்பானா அந்த ஆளு...?" என்றார் குரலைத் தழைத்து. பெருமாள் அமைச்சரை வியப்பாகப் பார்த்தான். "தெரியலங்க!" என்றான்.

"ஆளு எப்படி...? என்ன கட்சி...?"

''நல்ல மனுஷங்க. ஊர்ல மரியாதை உள்ள ஆளுங்க. அவரு பஸ் மட்டும்தான் ஓடுது. அதுவும் என்னதான் மழை பேஞ்சாலும் புயல் அடிச்சாலும் நிறுத்தாம ஓட்டறாரா,  ஊர் ஜனங்க அவர தெய்வமா மதிக்கிறாங்க. அவரு அப்பா சுதந்திரப் போராட்ட வீரருங்க. இவரு எந்தக் கட்சியும் இல்லைங்க... நாம டொனேஷன் கேட்டாலும் கொடுப்பாரு. எதிர்க்கட்சிக்காரன் கேட்டாலும் கொடுப்பாரு... ''

டுத்த நாள் செட்டியார் வயலிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டு வாசலில் அந்த மாருதி கார் அழகாக வந்து நின்றது.

கதவைத் திறந்துகொண்டு, இரண்டு பேர் இறங்கினார்கள். இருவர் கையிலும் பெரிய பெரிய சூட்கேஸ்கள்.

செட்டியார் அவர்களைப் பார்த்து யோசித்து, பிடிபடாமல் குழம்பினாலும் "வணக்கம்.. வாங்க..." என்றார் மரியாதை கருதி.

பதிலுக்குத் தலையை ஆட்டியவர்கள், "உள்ள போயிடலாமா?" என்றார்கள்.

"ம்" என்றவர் குழப்பமாக உள்ளே வந்தார்.

அமர்ந்தார்கள்.

யார் நீங்கள்? என்ன விஷயம் என்பது மாதிரி செட்டியார் அவர்களைப் பார்த்தார்.

இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். ஒருவன் நேடியாக விஷயத்துக்கு வந்தான்.

"உங்க பஸ்ஸும் ரூட்டும் வேணும். இதுல பன்னிரண்டு லட்சம் இருக்கு. ரூட்டுக்கு பத்து லட்சம், பஸ்ஸுக்கு ரெண்டு லட்சம்."

செட்டியார் ஏகமாய்க் குழம்பினார். யார் இவர்கள்? திடீரென்று காரில் வந்து இறங்குகிறார்கள்... பஸ் என்கிறார்கள். ரூட் என்கிறார்கள்... பன்னிரண்டு லட்சம் என்கிறார்கள்...?

செட்டியார் புருவம் முடிச்சிட அவர்களைப் பார்த்தார்.

அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். ஒருவன் நிதானமாய்ப் பேசினான்.

இதையும் படியுங்கள்:
இந்தக் கலைக்கு இத்தனை சிறப்பா?
ஒவியம்: கரோ

''நேரடியாப் பேசறேன்... எங்கள நம்ம மாவட்டத்து அமைச்சர் அனுப்பிச்சாருங்க. உங்க பஸ்ஸும் ரூட்டும் அவருக்கு வேணும்னு ஆசைப்படறாரு....

பணத்தைக் கையோட கொடுத்துட்டு வரச் சொன்னாருங்க. பணத்தை வாங்கிக்கிட்டு இதுல ஒரு கையெழுத்துப் போட்டுட்டிங்கன்னா... ஆர்.டி.ஓ. நேரா இங்கயே வந்து மத்த விஷயத்தைப் பார்த்துப்பாரு" என்றவன், சூட்கேஸை பிரிக்க, உள்ளே கட்டுக் கட்டாய் நூறு ரூபாய்கள். செட்டியார் அவ்வளவு பணத்தைச் சேர்த்துப் பார்த்ததில்லையானதால் நெஞ்சை அடைத்தது.

"நான் யாருக்கும் பஸ்ஸ விக்கிறதாச் சொல்லலியே...."

''நீங்க சொல்லலதான். ஆனா அமைச்சர் ஆசைப்படறாரே..."

'அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும். இதுதான் எனக்கு நிரந்தர வருமானம். கிட்டத்தட்ட இருபது வருஷமா இந்த ரூட்டுல என் பஸ் ஓடுது. அத நம்பித்தான் நான் இருக்கேன். என் சொத்து, ஆஸ்தி எல்லாமே அதுதான். அதையே கொடுன்னா.. எனக்குப் புரியலியே...."

''சரி... உடனே சொல்ல வேணாம். யோசிச்சிச் சொல்லுங்க.... இதுவரையும் தான் அதைப்பத்தி நினைக்கல... இப்ப நினைச்சிப் பாருங்க. ரெண்டு லட்சம் கூட பொறாத ரூட்டுக்குப் பத்து லட்சம் தர்றோம்... அம்பதாயிரம் பொறாத கூட பஸ்ஸுக்கு ரெண்டு லட்சம் தர்றோம். நிதானமா யோசிச்சிப் பாருங்க... நாங்க அடுத்த வாரம் வர்றோம்."

"நீங்க என்னைக்கு வந்தாலும் என் முடிவு ஒண்ணுதாங்க. நான் பஸ்ஸைக் கொடுக்கிறதா இல்லே..."

"அப்ப அமைச்சரைப் பகைச்சுக்கிறதா முடிவு பண்ணிட்டிங்க...?"

"ஐயய்ய... பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க. நான் எப்ப அமைச்சரைப் பகைச்சுக்கிறதாச் சொன்னேன்! நீங்க கேட்டிங்க. நான் இஷ்டம் இல்லேன்னுட்டேன். அவ்வளவுதான்! இதுல எங்க பகை வந்துச்சி...?"

"இதுதான் உங்க முடிவா...?” ஒருவன் மிரட்டும் தொனியில் கேட்டான்.

செட்டியார் அவர்களைப் பார்த்து மென்மையாகச் சிரிக்க, வேகமாகச் சென்று காரில் ஏறிக்கொண்டு, கதவைப் 'படார் படார்' என்று அறைந்து சாத்திக்கொண்டு ஆத்திரமாய்ச் சென்றார்கள்.

ப்படியா...?" என்றார் அமைச்சர் ஆத்திரமாய்.

"ஆமாங்க..."

"கொஞ்ச நாள் கெடு கொடுக்க வேண்டியதுதானே....?"

"எத்தினி நாள் கழிச்சி வந்தாலும் இந்த முடிவுதான்னு சொல்லிட்டாருங்க!"

"ஓஹோ..." அமைச்சர் தீவிரமாய் யோசித்தார்.

யோசிப்பின் இறுதியில் டெலிபோனை அவசரமாய் அணுகினார்.

டுத்து வந்த தினங்களில் துந்தகுடி செல்லும் சாலை அவசர அவசரமாய்ச் செப்பனிடப்பட்டது.

செட்டியார் பஸ் நேரத்திற்குப் பத்து நிமிடம் முன்னதாக, புத்தம் புதிய அரசுப் பேருந்தும் பத்து நிமிடம் பின்னதாக ஒரு பேருந்தும் விடப்பட்டன.

எக்காரணத்தைக் கொண்டும் பேருந்தை நிறுத்தக்கூடாது என்றும், என்னதான் மழை பெய்தாலும் புயல் அடித்தாலும் பேருந்தைக் கண்டிப்பாய்த் தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் நிர்வாக இயக்குநர் பணிக்கப்பட்டார்.

பத்து வருடம் போராடியும் கிடைக்காத பேருந்து வசதி அமைச்சரின் கோபத்தால் உடனே கிடைத்தது. அவர் கோபத்தால் முதன்முதலாக ஒரு கிராமத்திற்கு நன்மை கிடைத்தது.

பேருந்து கலெக்ஷன் சுத்தமாகக் குறைந்துவிட்டாலும் செட்டியார் அதற்காக வருந்தவில்லை.

பின்குறிப்பு:-

கல்கி 11  ஜூலை 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com