சிறுகதை - ‘வாத்தியார்!’

Short Story - 'The  Vathiyar!'
Short Story - 'The Vathiyar!'

-அய்க்கண்

மாலை நேரம். பஸ் ஸ்டாண்டு வழியாக, கவலையோடு நடந்துகொண்டிருக்கிறேன். என்ன கவலை என்று கேட்கிறீர்களா? கவலை என்றால் ஒன்றா இரண்டா, எதைச் சொல்ல? நான் ஒரு நடுத்தரக் குடும்பஸ்தன் என்று சொன்னால் போதுமே, நீங்களே புரிந்துகொண்டு விடுவீர்கள், என்னென்ன கவலைகள் இருக்குமென்று. என் மகன் மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஹாஸ்டலுக்குக் கட்டவும் புத்தகம் வாங்கவும் நூறு ரூபாய் அனுப்புங்கள் என்று நேற்று எக்ஸ்பிரஸ் கடிதாசு எழுதியிருக்கிறான். பணம் அனுப்புவதற்குத்தான் இரண்டு நாட்களாய் முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறேன் - அதாவது இரண்டு நாட்களாய் என்' நண்பர்களிடம் கடன் கேட்டுக் கையிலே அறுபது ரூபாய் இருக்கிறது: இன்னும் நாற்பது ரூபாய்தான் வேண்டும்.

சரக் -

காலில் ஏதோ இடறுகிறது. சட்டென்று கீழே குனிகிறேன். இருட்டியும் இருட்டாமலும் இருக்கிற அந்த நேரத்தில், காலடியில் ஏதோ மின்னுகிறது.

ஆ!... தங்கச் சங்கிலி?....

ஓ! அது தங்கச் சங்கிலியேதான் :

யார் கழுத்திலிருந்தோ அறுந்து கீழே விழுந்துகிடக்கிறது: மூன்று பவுனுக்குக் குறையாது.

சட்டென்று எடுக்கலாமா?...யாராவது பார்த்து விட்டால்?

மூளை, 'ஸூபர்ஸானிக்' வேகத்தில் சிந்திக்கிறது.

கீழே சங்கிலி... வலிய வந்த சீதேவி. 'எடு எடு' என்று பளபளக்கிறதே!... எடுத்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துவிடலாமா? கொடுத்துவிட்டால் நாலைந்து பாராட்டுக்கள். அவ்வளவுதான். நாற்பது ரூபாய்? இதை விற்றால், மூன்று பவுனுக்கு 360 ரூபாய் கிடைக்கலாம். அடேயப்பா! தாராளம்! விற்கும்போது பிடிபட்டு விட்டால்... திருடன்...பிக் பாக்கெட்...ஆளுக்கு ஓர் அடி... 'டேய், திருட்டுப் பயலே! இனிமே திருடுவியாடா? அயோக்கிய ராஸ்கல்! - என் பேச்சின் டேப் ரிக்கார்டர்.....

சுற்று முற்றும் பார்க்கிறேன்....

வலது கால், கீழே கிடக்கிற சங்கிலியை மறைத்து அமுக்கிக்கொள்கிறது. எதையோ கீழே போட்டு விட்டதைப் போல் (எதையோ என்ன? என் கௌரவத்தைத்தான்) என்னைச் சுற்றித் தேடுவது போல் நடிக்கிறேன். கீழே தேடுவது போல், குனிந்தவாறே நாலாபுறமும் பார்க்கிறேன்.

கடைத்தெருவில் அதிகக் கூட்டம் இல்லை.

கிழக்கே காந்தி சிலை அருகில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு 'சென்ஸார்' செய்யாத ஆங்கிலப் படச் சுவரொட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர். என்னை யாரும் பார்க்கவில்லை.

வடக்கே மூன்று 'டைட்ஸ்'கள், ஜவுளிக் கடைக்குள் நின்றுகொண்டிருக்கும் இரண்டு ‘மினி ஸ்கர்ட்'டுகளின் கால் அழகை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை யாரும் பார்க்கவில்லை.

மேற்கே லாட்டரிச் சீட்டு விற்கும் கடை முன்னே இரண்டு மூன்று பேர் கூடி நின்று, எல்லா ராஜ்யங்களையும் பற்றிப் பேசிக்கொண்டு, பாரத ஒருமைப்பாட்டை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை யாரும் பார்க்கவில்லை.

தெற்கே - ஒரு சிறிய தேநீர்க் கடையில் இரண்டு 'கைலி, முண்டாப் பனியன்'கள் தேநீரை உறிஞ்சிக் குடித்தவாறு ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்னை யாரும் பார்க்கவில்லை.

எடுப்பதா, விட்டு விடுவதா ?

நாசமாய்ப்போன கடவுளே! எத்தனை தர்ம சங்கடத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய் ?

பாதையிலே கிடந்தால் அது நமக்கு உரிமையாகுமா? போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க வேண்டாமா ?

போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தால் நாற்பது ரூபாய் கொடுப்பார்களா?

- இவ்வளவும் சொல்வதற்குத்தான் இத்தனை நேரம்: நினைத்தது பத்து இருபது வினாடிகளுக்குள்தான். இந்தமாதிரி இக்கட்டான சந்தர்ப்பங்களில் மனம் எவ்வளவு வேகமாகச் சிந்திக்கும் என்பது உங்களுக்குத்தான் தெரியுமே! ஐயாம் ஸாரி... உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்களும் இதேமாதிரி வழியில் கிடக்கிற பொருளை எடுத்துக்கொள்கிற திருடர்கள் என்று அர்த்தமில்லை. மனம் எத்தனை வேகமாகச் சிந்திக்கக் கூடியது என்ற உண்மை உங்களுக்குத் தெரியும் என்றுதான் சொல்கிறேன்.

கடைசியில் -

'பாரடைஸ் லாஸ்ட்' கதைதான்: சைத்தானுக்கே வெற்றி !

மறுபடியும் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கீழே குனிந்து, ஏதோ என்னுடைய சங்கிலி கீழே விழுந்ததை எடுப்பதுபோல், சகஜமாக எடுத்து, 'பாண்ட்' பைக்குள் சட்டென்று போட்டுக்கொண்டு நடக்கிறேன். கண்கள் தாமாகவே சுற்றுமுற்றும் பார்க்கின்றன. என்னை ஒருவரும் கவனிக்கவில்லை.

அடேயப்பா ! இதென்ன, மூன்று பவுன் சங்கிலி, இப்படி சிமெண்ட் மூட்டை மாதிரி கனக்கிறதே !

உடலெங்கும் குப்பென்று வியர்த்துக் கொட்டி, நான் மறுபடியும் குளிக்கிறேன்.

கால்கள் படபடக்கின்றன... சங்கிலியை எடுத்துப் பைக்குள் போட்ட வலது கை தட தட என்று நடுங்குகிறது.

டிக்... டிக்...

இதென்ன பெரிய கோயில் மணிச் சத்தம் கையில்?  கைக்கடிகாரத்தின்... டிக்டிக்தான் இப்படிப் பயங்கரமாகக் கேட்கிறது. கைக்கடிகாரம்கூட இவ்வளவு சத்தம் போடுமா?

படபடப்போடு ஓடத் துடிக்கும் கால்களை அடக்கி, நிதானமாக நடக்கிறேன்.

பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். தூரத்தில், தேநீர்க் கடையில் நின்றுகொண்டிருந்த இரண்டு ‘கைலி, முண்டாப் பனியன்'களும் எழுந்து நடந்து வருகின்றனர். அவர்களும் எங்கோ, அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். எனக்கென்ன ?

பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். அவர்களும் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறார்கள்.

“ஸார்!"

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். என்னைத்தான் கூப்பிடுகிறார்கள், கைலியும் முண்டாப் பனியனும்.

ஊருக்குப் புதியவர்களோ?  எங்கேனும் வழிகிழி கேட்கப் போகிறார்கள் போலிருக்கிறது! நான் சங்கிலியை எடுத்ததைப் பார்த்திருப்பார்களோ?.... ஊஹும்... பார்த்திருந்தால் அங்கேயே கேட்காமல் இருந்திருப்பார்களா?

அவர்கள் என் எதிரே வந்து நிற்கிறார்கள். இப்பொழுது கடைத்தெருவின் கோடியில் நின்றுகொண்டிருக்கிறோம். பக்கத்தில் யாருமே இல்லை. தூக்கிக் கட்டிய கைலியுடன், அவர்களுக்குப் பிடித்தமான நடிகர் படம் போட்ட முண்டாப் பனியனும், இடுப்பிலே கையகலமுள்ள தோல் 'பெல்ட்'டும், கையிலே புகைந்து நாறிக்கொண்டிருக்கும் பீடியும்....

"என்னா ஸாரு, நம்பளை மறந்திட்டுப் போறே? நம்ம பங்கை வச்சிட்டுப் போ.'

நான் திகைக்கிறேன்: "என்னப்பா, என்ன உளர்றே? பங்காவது?''

மற்றவன் பெரிதாகச் சிரிக்கிறான். இயல்பான சிரிப்பில்லை. சினிமாப் பாணிச் சிரிப்பு. "பார்த்தியா வாத்தியாரே! நம்மகிட்டேயே டபாய்க்கிறாரே ஸாரு!''

வாத்தியாரா? யாருக்கு இவன் வாத்தியார் ? பீடியிலே 'தம்' சுருள் சுருளாகப் பிடித்து, புகை விடுவதைக் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தால், இவனை வாத்தியாராகப் போடலாம்!

இதையும் படியுங்கள்:
இந்த நேரம் நமக்குத் தேவை நோய் எதிர்ப்பாற்றல்!
Short Story - 'The  Vathiyar!'

"ஏன் ஸாரு, வீதியிலே கிடந்த சங்கிலியை எடுத்து, டபக்குனு பைக்குள்ளே அமுக்கிக்கிட்டியே, அது எங்களுக்குத் தெரியாதுன்னு நெனைச்சுக்கிட்டியா? எங்களுக்குத் தெரியாமலே இந்த டவுனிலே ஒரு ஈ காக்கை திருட முடியாது, தெரியுமா?"

எனக்குத் தெரிந்துவிட்டது: சரி, இதை போலீஸ் ஸ்டேஷனிலே கொடுத்து, நாணஸ்தன், ஜெண்டில்மன்' பட்டத்தை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்: வேறு வழியில்லை.

பாதி வருத்தத்தோடும் பாதி நிம்மதியோடும் மெதுவாக  'பாண்ட்'டுக்குள் கையை விடுகிறேன்.

வேண்டாம், ஸாரு! அதை வெளியே எடுக்க வேண்டாம். யாராவது பார்த்திடப் போறாங்க... அது எப்படியும் மூணு பவுனுக்குக் குறையாது. கடையிலே வித்தா, முந்நூத்தி அறுவதுக்கு மேலே கிடைக்கும். அதை நாங்க கொண்டு போய் விக்க முடியாது. போலீசிலே மாட்டிக்குவோம். உங்க மாதிரி பாண்ட், டெரிலின் சட்டை போட்ட பெரிய மனுசங்க கொண்டு போய் வித்தா யாரும் சந்தேகப்பட மாட்டானுவ” என்று கேலி செய்கிறான் 'ஒரு முண்டாப் பனியன்'.

"ஞாயமாய் இந்தப் பணத்தை நமக்குள்ளே மூணு பங்கு வைக்கணும். ஆனால், நீ உடம்பை வளைச்சு, குனிஞ்சு கஷ்டப்பட்டு எடுத்துப் பைக்குள்ளே போட்டு, கடையிலே கொண்டு போய் விக்கப் போறியே, அதுக்காக உனக்கு ஒரு சலுகை - நீ பாதிப் பணத்தை எடுத்துக்கிட்டு, பாதியை மட்டும் எங்களுக்குக் குடுத்தாப் போதும், ஸாரு. நூத்தியெம்பது ரூபாய் இருக்கா? எடு.”

என்ன அழகாக 'பிஸினஸ்' பேசுகிறான், இந்தச் 'சுருள் புகைச் சுருட்டு' ! மீண்டும் என் மனத்துக்குள் திருட்டுப் புத்தி ஊடுருவுகிறதே ! நகையை முழுவதும் தலை முழுக வேண்டாம்: ஏதோ பாதியாவது தேறும்.

"என்கிட்டே அவ்வளவு பணமில்லையே அப்பா !.... வேணுமானால் கடையிலே வித்திட்டுப் பணம் கொண்டு வர்றேன்."

"கடையிலே வித்திட்டு இங்கே திரும்பி வருவேன்னு என்ன நிச்சயம்? அப்படியே நைஸா நழுவிடுவியே ?''

ஆ! கேட்டானே ஒரு கேள்வி, பொட்டில் அடித்த மாதிரி? என்னை எவ்வளவு மட்டமாக நினைத்துவிட்டான்? ஏன் நினைக்கமாட்டான்? இதைவிட என்ன உயர்ந்த 'கௌரவம்' எனக்குக் கிடைக்கும்?

"கையிலே இருக்கிறதைக் குடுத்திட்டுப் போ, ஸாரு.”

பையிலிருந்து அறுபது ரூபாயை எடுத்து நீட்டுகிறேன். முந்நூற்று அறுபதில் அறுபது போக முந்நூறு ரூபாய் லாபம்? என்று 'பாலன்ஸ் ஷீட்' போடுகிறது மனம்.

"சரி, போதும் ஸாரு ! நீ இன்னிக்கு நரி முகத்திலே விழிச்சிருக்கே. உன் பாடு ஜாலிதான்" என்று சொல்லிச் செல்கிறார்கள் அவர்கள்.

வீட்டில் நுழையும்போதே, என்று ‘அடியே!” கனத்த தொண்டையில் கத்திக்கொண்டே வருகிறேன். மடியில்தான் கனமிருக்கிறதே, வாயில் கனத்துக்குக் கேட்க வேண்டுமா? இந்த மாதிரி அதிகாரமாக மனைவியைக் கூப்பிடுகிற சந்தர்ப்பம், ஒரு மனுஷனுக்கு எப்போதோ ஒரு முறைதானே, ஸார், கிடைக்கும்?

' என்னை அதிர்ஷ்டமில்லாதவன்: அதிர்ஷ்டக் கட்டையினு சொல்லிக்கிட்டேயிருப்பியே, இதோ பார், உன் புருஷனுக்கு வழியிலே கிடைத்த அதிர்ஷ்டத்தை!" என்று சங்கிலியை எடுத்து நீட்டுகிறேன். சங்கிலியை வியப்புடன் வாங்கிப் பார்க்கிறாள் அவள். நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன் பெருமையாக.

‘ப்பூ!  வெறும் பித்தளைச் சங்கிலி. மூணு ரூபாய் பெறாது என்று உதட்டைப் பிதுக்கி அலட்சியமாக என்னைப் பார்க்கிறாள்.

நான் திடுக்கிட்டு விழிக்கிறேன். “என்ன சொல்லறே, பித்தளையா?... நல்லாப் பாரு....!'

“நல்லா என்னத்தைப் பார்க்கிறது? சுத்தமான பித்தளைதான். உங்களுக்கு என்ன தெரியும்? முன்னே பின்னே, பெண்டாட்டிக்கு ஏதாவது தங்க நகை வாங்கியிருந்தாத்தானே தெரியும், தங்கம்னா என்னன்னு?.... அவள் வழக்கமான பாணியில் என்னென்னவோ என்னைத் தாக்கிப் பேசுகிறாள். அவள் பேச்சு என் காதிலே விழவேயில்லை. வழக்கம்போல் அல்ல உண்மையாகவே அவள் பேசுவதே காதில் விழாமல் ஸ்மரணையற்று நிற்கிறேன் நான்.

முண்டாப் பனியன்கள், சங்கிலியை விற்கிறதுக்கு முன்னாலே கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு நழுவியது இதற்குத்தானோ? அவர்களே, எனக்கு முன்னாலே அந்தப் பித்தளைச் சங்கிலியைக் கீழே போட்டுவைத்து வலை விரித்துக் காத்திருந்தார்களோ?....

அவர்களுடைய நாடகத்தின் முழுக் கதை வசனம், டைரக்ஷன் எனக்குப் புரிகிறது.

பித்தளைச் சங்கிலி 'ஈஈஈ' என்று என்னைப் பார்த்து இளிக்கிறது!

'சபாஷ்டா, முண்டாப் பனியன்! நீ உண்மையிலே வாத்தியார்தான்: எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்திட்டே!"

 மானசீகமாக என் 'குரு'வைப் பாராட்டுகிறேன் நான்.

நன்றி : (கல்கி இதழ், 8.3.1970)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com