சிறுகதை - திருடன்!

ஓவியம்; தமிழ்
ஓவியம்; தமிழ்
Published on

-ஜெ. ஜெயகுமார்

“பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருக்காமல்” நல்லசேலம் கிராமத்தில் அர்த்த ராத்திரியில் இரவு மூன்று மணி அளவில் ஒரு திருடன் தெருவின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பி மீண்டும் அதையே ஆக்ஷன் ரீப்ளே செய்துகொண்டிருந்தான்.

கிராமத்து மனிதன் போல கட்டிய வேட்டியை அவிழ்த்து ஈர வேட்டியை காயப்போடுவது போல் தலைக்கு மேலே இரு கைகளிலும் காற்றில் ஆட்டிக்கொண்டே இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

மின்சாரம் இல்லா கிராமம். பட்டா, சிட்டா, அடங்கல், ஜமாபந்தி எனப்படும் வருடாந்திர கணக்குகள் தயாரிப்பில் மூழ்கியிருந்த கிராம கர்ணம் நடராஜன், சிறுநீர் கழிப்பதற்காக எதிரே இருந்த பட்டிமனைக்கு சென்று திரும்பி உறக்கம் வராமல் வேட்டி மனிதனின் நடவடிக்கையை அவதானித்துக்கொண்டிருந்தார். 1500 பேர் உள்ள அந்த கிராமத்தில் கிட்டதட்ட அனைவரும் அவருக்கு பழக்கம் பல வருடங்களாக.

எனவே அந்த வேட்டி மனிதனின் முகம் தெரியாது, யார் என்று தன் அறுபது வயது மூளையை கசக்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு கிராம கர்ணத்திற்கே உரிய ஆளுமையில் அதிகார தோரணையுடன் தைரியமாக யாரது? என்று ஆதிமூலம் மளிகை கடை வாசலில் அதட்டலாக அவனை வழி மறித்து கேட்டார் நடராஜன்.

வேட்டிமனிதன் பதில் சொல்வதற்குப்பதிலாக ஓடினான்; ஓடினான்; தெருமுனையின் இறுதிக்கே ஓடி நல்லசேலம் கிராம வாழ்க்கையிலிருந்தே ஓடி விட்டான். அவன் ஓட்டி வந்த சைக்கிள் ஐயருக்கு பதில் சொல்லமுடியாமல் மௌனமாக கடை வாசலில் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.

இதற்குள் சத்தம் கேட்டு எழுந்து வந்த பக்கத்து வீட்டு அப்பாதுரை, எதிர் வீட்டு முத்தையா செட்டியார், சிலோன் துரைசாமி என்று ஒரு சிறிய கூட்டம் கூடி விட்டது.

மளிகை கடையின் முன்னே இருந்த திண்ணையில் அவர்கள் அமர்ந்துகொண்டு அவன் யார்? திருடனா? எதை திருட வந்தான்? என்றெல்லாம் சற்று நேரம் பேசிவிட்டு பூட்டப்படாமல் இருந்த திருடனின் சைக்கிள்ஐ பூட்டி சாவியை , கர்ணம் என்ற முறைப்படி , நடராஜனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு போகலாம் என்று அனைவரும் எழுந்திருக்கும்போது அப்பாதுரையின் கால், இருட்டில் கீழே கிடந்த மளிகை கடையின் கல்லா பெட்டியில் இடறி, தடுமாறி விழுந்து எழுந்தார்.

இப்பொழுது அனைவருக்கும் உறக்கம் தொலைந்து போனது.

நடராஜன், ஆதிமூலம் வீட்டுக்கு ஆள் அனுப்பி அவரை வரச்சொன்னார். கடையின் பூட்டுக்கள் உடைக்கப்படவில்லை. எனவே திருடன் கடையின் மேலே வேயப்பட்டிருந்த ஓடுகளை பிரித்துத்தான் உள்ளே இறங்கியிருக்க வேண்டும் என்று நினைத்து மேலே பார்த்தபோது அவர்கள் ஊகம் சரியாக இருந்தது.

கல்லாப்பெட்டியை வெளியே கொண்டு வந்தவன் அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக தப்பிக்காமல் தெருவில் இங்கும் அங்கும் ஏன் நடமாடிக்கொண்டிருந்தான் என்பது புரியாத புதிர்.

அப்பாதுரை சற்று சிந்தித்து “அனேகமா ரெண்டு பேர் சைக்கிள்ல வந்திருக்கணும், ஒருத்தன் கடைக்குள்ளே போயிருக்கணும், இன்னொருத்தன் வெளியே காவல் காத்திருக்கணும், அவன்தான் ஓடிப்போய்விட்டான்’’ என்றார்;

அவ்வளவுதான், அந்த இடம் போர்க்கள பரபரப்பை அடைந்தது. அவரவர்கள் அரிவாள், கொடுவாள், தடி,கம்பு, என்று எடுத்துக்கொண்டு வந்து விட்டனர். “ உள்ளேயிருந்து யாராவது வெளியே வந்தால் வெட்டிடாதீங்க! அவனை பிடிச்சு போலீஸ்ல கொடுக்கணும்” என்று உத்தரவிட்டார் நடராஜன்.

அதற்குள் கடை ஓனர் ஆதிமூலம் வந்து விட்டார். அவர் கடையின் பூட்டுக்களை திறந்து பதட்டத்துடன் எட்டு மடிப்புக்கதவுகளாக இருந்த கதவின் ஒன்றிரண்டு மடிப்புகளை திறந்தார்.

இதற்குள் இரவு மெள்ள “குட்நைட்” சொல்ல ஆரம்பிக்க அதிகாலை “குட் மார்னிங்” சொல்ல தயார் ஆனது.

“ஒருக்கால் உள்ளே ஒருவன் இருந்து அவன் வெளியே வரும்போது அவன் கொடுவாள், அரிவாளால் நம்மை வெட்டிவிட்டால் என்ன செய்வது” என்ற கொலைக்கிலியுடன் ஆதிமூலம் கதவை திறந்தார். திருடன் மேற்கூரை வழியே தப்பிவிடாமல் இருக்க ஒரு சிலர் ஆயுதங்களுடன் கடையை சூழ்ந்து கொண்டனர். சில நிமிடங்கள் கொலைவெறி மௌனம்.

நல்லசேலம் சிற்றூர் என்பதால் போலீஸ் ஸ்டேஷன் 25 கி. மீ. தள்ளி பாடாலூரில் இருந்தது.

இதையும் படியுங்கள்:
கண்களின் ஆரோக்கியத்தை காக்கும் 7 உணவுகள்!
ஓவியம்; தமிழ்

அப்பாதுரை கடைக்குள்ளே எட்டிப்பார்த்து “டேய்! பத்து எண்ணறதுக்குள்ளே வக்காள்ளி வெளியே வா! லேட் ஆனா அரிவாலாள போட்டுத்தள்ளி கொளுத்திடுவோம், கொளுத்தி! என்று கூக்குரலிட்டுவிட்டு பக்கத்தில் இருந்த சிறுவனிடம் “ தம்பி! ஒண்ணு ரெண்டு மூணு பத்து வரைக்கும் சத்தம் போட்டு சொல்லு! என்று ஆணையிட, சிறுவனும், நடுங்கும் குரலில் உரக்க ஒண்ணு, ரெண்டு என்று ஆரம்பித்தான். கூட்டம் இன்னும் பதட்டம் அடைந்தது.

“ஏழு” என்ற போது, ஆஜானுபாகுவான ஒருத்தன் வேட்டி பனியனுடன் நெற்றியில் வெட்டுத்தழும்புடன் உள்ளேயிருந்து நடுங்கிக்கொண்டே இரு கரம் கூப்பி கூனிக்குறுகி வெளியே வந்தான். ஒரு கணம் ஆதிமூலம் அவன் நெற்றியைப்பார்த்து விட்டு நிலைகுலைந்து போனார்.

நடராஜன் எவ்வளவோ சொல்லியும் அடிகள் சரமாரியாக அவன் மேல் விழுந்தன. மரத்திலே கயிற்றால் கட்டப்பட்ட அவனை, தங்கள் தொலைந்துபோன தூக்கம், கடந்த கால ஏக்கம், ஏமாற்றம், நிறைவேறா ஆசைகள், அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆவேச உணர்வுகள் என்றெல்லாம் அனைத்தையும் அவன் உடலில் வன்மத்தின் வடிகாலாக தீர்த்துக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
தவறுதலாக செயலாற்றுவதை விட, செயலாற்றாமல் இருப்பது மோசமானது!
ஓவியம்; தமிழ்

மரத்தில் கட்டப்பட்டிருந்த அவன் அடிதாங்காமல் மயக்கம் அடைய, அவன் மீது குடம் குடமாக தண்ணீர் கொட்டப்பட்டு, மயக்கம் தெளிய வைத்து தெளிய வைத்து “அவ்வை ஷண்முகி”யில் மணிவண்ணன் அடிப்பதைபோல் அவனை அடித்து நொறுக்கினர். மணிவண்ணனும் ஒரு கிராமத்து மனிதர் தானே! அனுபவம்!

பாடாலூர் வழியே ஊட்டத்தூர் செல்லும் “ரோஸ் பஸ் டிரான்ஸ்போர்ட்” பகல் பனிரெண்டு மணிக்குத்தான் வந்தது. அதுவரை அவ்வப்போது தர்மஅடிகளை வாங்கிக்கொண்டு தாங்கிக்கொண்ட அவன் குற்றுயிரும் குலையுயிருமாய் கொண்டு செல்லப்பட்டான்.

அங்கிருந்த சிறுவர்கள் “திருடன் கடைக்குள் இருந்தபோது எக்கச்சக்கமா கடலை மிட்டாய், சூஸ்பரி, நெய் ரொட்டி, மைசூர்பாக் எல்லாம் சாப்பிட்டு இருப்பானோ என்று பேசிக்கொண்டனர். அவரவர்கள் தான் திருடன் இடத்தில் இருந்திருந்தால் என்னவெல்லாம் சாப்பிட்டு இருப்போம் என்று கற்பனை செய்துகொண்டே பள்ளிக்கு சென்றனர்.

கல்லாப்பெட்டியை கவர்ந்தவன் உடனடியாக தப்பி ஓடாமல் இன்னும் உள்ளே என்ன பண்ணினான் என்பதே நடராஜனின் விடாத சந்தேக குடைச்சல்.

மறுநாள் நடராஜன் ஜமாபந்தி விஷயமாக மும்முரமாக அலுவல் பணியில் இருந்தபோது ஆதிமூலம், அவர் வீட்டிற்கு வந்தார். ஒரு பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் ஒரு கவரில் பணம் என்று ஐயருக்கு மரியாதை செலுத்தினார்.

எதற்கு? என்று நடராஜன் வினவ, ஐயா! உங்களுக்கு இன்னும் கூட நான் கொடுத்தால்தான் நிம்மதி! என்று ஆரம்பித்தார்.

“அந்த திருடன் ஏற்கனவே என் கடைக்கு இரண்டு தடவை வந்திருந்தான்! நன்னாரி சர்பத் குடித்துக்கொண்டே கடையிலிருந்த “தினத்தந்தி” பேப்பர்ஐ ரொம்ப நேரம் அலசிக்கொண்டிருந்தான்.

அப்போது, நானும் என் தம்பி ரகுபதியும் நான் நிலம் விக்கறது பத்தி பேசிக்கொண்டிருந்தோம். பௌர்ணமியன்று செட்டிக்குளத்தில் ரிஜிஸ்டிரேசன் என்று நான் சொன்னேன்!

“பணத்தை கடையிலேயே வச்சிருங்க! வீட்ல ஆளுங்கல்லாம் சுண்ணாம்பு அடிக்கராங்கன்னு தம்பி வெகுளியா சொல்லி தொலைச்சிட்டான்! உங்களுக்கு தெரியாததா? நீங்க தானே செட்டிகுளம் வந்து எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சு கொடுத்தீங்க!”

“நெத்தியிலே வெட்டுத்தழும்புடன் இரண்டு தடவை நன்னாரி சர்பத்தை உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டே, தம்பி சொன்னதை கேட்டுக்கொண்டே என் கடையை நோட்டம் விட்டவனை அப்ப கவனிக்காம வெளியூர்காரன்தானேன்னு அசால்டா விட்டுட்டோம்.”

நிலம் வித்த பணத்தை எல்லாம் ஒரு மஞ்சள் பையில் போட்டு கட்டு கட்டி கடையில் இருந்த பருப்பு மூட்டைக்குள் புதைத்து வைத்திருந்தேன்! நல்ல வேளை, அவன் வெகு நேரம் தேடியும் பணம் அகப்படவில்லை” என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

கடைக்குள் நுழைந்தவன் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஏன் உடனே தப்பிக்கவில்லை என்ற ஐயரின் குடைச்சல் கேள்விக்கு இப்போதுதான் பதில் கிடைத்தது.

“சுவருக்கும் காதுகள் உண்டு” (Walls have ears) என்று பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com