சிறுகதை - 10 தடவை சொல்லியாச்சு!

ஓவியம்; ஜெயராஜ்
ஓவியம்; ஜெயராஜ்

- புஷ்பா தங்கதுரை

ப்படி ஒரு அத்துவானத்திலா வீடு கட்டுவார்கள்? காலையில் கிரகப்பிரவேசம்! இரவில் விருந்து! ஆறு மணிக்குள் அவள் வந்திருக்க வேண்டும். தாமதமாகி விட்டது. இப்படி இருட்டில் சிக்கிக் கொண்டு...

திரும்பவும் அந்தக் கடைக்குப் போய்க் கேட்க வேண்டியதுதான்! ஏற்கெனவே இரண்டு முறை கேட்டாயிற்று. சுமதி திரும்பினாள். பளீர் என்ற வெளிச்சத்தில் சற்று தூரத்தில் அவள் கடந்த கடை இருந்தது.

"ஏங்க! ரோடே வரல்லைங்க! எங்கே இருக்கு?" என்றாள் கெஞ்சலாக.

முதலாளி கணக்குப் பார்க்கும் நேரம்! ஒரே எரிச்சல்!

"ஏம்மா பத்து தடவை சொல்லியாச்சு! புரிஞ்சுக்காட்டி என்னம்மா! இந்தா! பிரகாசம், நீ அந்த ரோட்டைக் காட்டு..." என்றார்.

நல்லவேளை. ரோட்டைக் காண்பித்துவிட்டு பிரகாசம் திரும்பிப் போனான்.

நடந்தாள். ரோடு பாதி தெரிந்தும், தெரியாமலும் இருந்தது. சுற்றி வர வீடு கிடையாது.

அந்தச் சப்தம் அவளை உலுக்கியது. யாரோ பின்னால் வரும் கால் தடம்.

திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தொலைவில் அந்தக் கறுப்பு உருவம் தெரிந்தது.

யார் அது? யாராவது சாதாரண ஆளாக இருக்கும். வீண் பயம் எதற்கு?

மேலே நடந்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பிப் பார்த்தாள். பக்கென்றது மனம்! நிச்சயம் அந்த உருவம் பின்னால் வந்து கொண்டிருந்தது.

'கடவுளே இப்படி மாட்டிக்கொள்ள வேண்டுமா!'

தூரத்தில் பழம் கோயில் அவள் கண்களில் பட்டுவிட்டது. அதன் பக்கம் போனால், அந்த பங்களா வெளிச்சம் தெரிந்துவிடும் என்றார் கடைக்காரர். வேகமாக நடந்தாள். திரும்பிப் பார்த்தாள். கடவுளே! அந்த உருவம் அவள் போகும் வழியில் திரும்பிவிட்டது. வலுவான ஆண் உருவம்.

கத்தலாமா! யாருக்குக் கேட்கும்!

கோயில் நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தாள்.

திடீரென்று ஸாரி இழுபட்ட உணர்ச்சி! ஒரு செடிக் கிளைதான் அவளை இழுத்திருக்கிறது.

ஸாரியை மெள்ள விடுவித்தாள். பின்புறம் பார்த்தபோது அந்த ஆள் சற்று எட்டத்தில் வந்து விட்டான்.

ஓட்டமாக ஓட கோயில் நெருங்கி விட்டது. கோயிலில் வெளிச்சம் இருந்தது. உள்ளே யாராவது இருக்க வேண்டும். ஓடி வந்து வாசலில் நிற்க, குருக்கள் வெளியே வந்துகொண்டிருந்தார். ஆசுவாசமாகி, திரும்பியபோது, அந்த ஆள் அவளை நோக்கி வருவது தெரிந்தது. அவள் இப்போது பயப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
மனிதனை மேன்மைப்படுத்துவது எது தெரியுமா?
ஓவியம்; ஜெயராஜ்

பாண்டும், சட்டையும் போட்டிருந்தான். களைத்திருந்தான். இழைத்தவாறு அவள் அருகே வந்து நின்றான்.

 "மிஸ்டர் என்னை ஏன் பின்பற்றி வந்தீங்க?"

"ஸீ-ஃபுட்' கம்பெனி டைரக்டர் வீட்டுக்குப் போறீங்களா? கிரகப்பிரவேசத்துக்கு...?" என்றான் அவன்.

அவளுக்கு எரிச்சல் மண்டி வந்தது.

"ஆமாம்."

"ஸாரி மேடம்! வர வழியிலே அந்தக் கடையிலே கேட்டேன்! 'ஸார்! நூறு பேருக்குச் சொல்லியாச்சு! ஒவ்வொருத்தருக்கும் பத்துத் தடவை சொல்லியாச்சு!

இப்பத்தான் ஒரு பெண் போனாங்க! அவங்க பின்னாலே போங்க! அவங்க அங்கேதான் போறாங்க! அவங்ககிட்ட விவரமா வழி சொல்லியிருக்கோம்'னு சொன்னாங்க! அதனாலேதான் உங்களைப் பின்பற்றினேன். ஸாரி!"

பின்குறிப்பு:-

கல்கி 30  அக்டோபர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com