சிறுகதை - “வனமாலி ஜி. நான் கர்ப்பமா இருக்கேன்!”

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்

“வனமாலி ஜி. நான் கர்ப்பமா இருக்கேன்” என்று கைப்பேசியின் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு பெண் கூறியபோது, அனந்தசயன பிரம்மாண்ட தூக்கமெல்லாம் கலைந்து, ஒரே விநாடியில் கொட்டக் கொட்ட முழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் வனமாலி. 

அப்போது அதிகாலை 5 மணி. வனமாலியின் கைப்பேசி ஒலித்தது. யாருடா இந்த அதிகாலை வேளையில் கூப்பிடுகிறார்கள் என்று வனமாலி பதறி அடித்துக்கொண்டு, அந்தக் கைப்பேசியை எடுத்தான். அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவனது மனைவி மாலினியும் கூட, அந்த அழைப்பைக் கேட்டு பதறிக் கொண்டு எழுந்தாள்.  கைப்பேசியில் எண் மட்டுமே வந்தது. யாரென்று தெரியவில்லை. எடுத்தவுடன் தான், இவ்வாறு அவனது காதில் மறுமுனையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது. 

"வனமாலி ஜி. நான் கர்ப்பமா இருக்கேன்." என்றது அந்தப் பக்கத்து குரல்.

"எ... என்... என்ன... என்னது? க... க... கர்... கர்ப்பமா இருக்கீங்களா? நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது" என்றான் வனமாலி. 

அருகிலிருந்த மாலினி கண்களில் திடீரென்று விஸ்வரூபக் கோபம் பரவி, அந்த அதிகாலையிலும், இரண்டு தீப்பொறிகளைக் கக்கின.

"கர்ப்பமான சந்தோஷமான விஷயத்தை இப்பத்தான் என்னோட ஹஸ்பண்டுகிட்ட சொன்னேன். அடுத்தது உங்கக் கிட்டத்தான் சொல்றேன். இன்னும் மாமியார்கிட்டக்கூட சொல்லல. காலைலதான் சொல்லணும்" என்றது அந்தப் பக்கத்து குரல்.

வனமாலி நடுங்கிப் போனான். அந்தக் குளிர்சாதன அறையிலும், தலை முதல் கால்வரை வியர்வை மழையில், வனமாலி குளித்தான். 

"என்னங்க சொல்றீங்க. எனக்கு எதுக்கு இத போன் பண்ணி சொல்றீங்க? நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. உங்க நம்பர்கூட என்கிட்ட கிடையாது" என்றான் வனமாலி.

"என் பேர் கோமளவல்லி. நானும் உங்க கம்பெனிலதான் வேலை பாக்கறேன். பக்கத்து பில்டிங். நான் உங்கள பாத்துருக்கேன்" என்றாள் கோமளவல்லி.

சரி. சந்தோஷம். அதுக்கு எதுக்கு இந்தக் காலங்கார்த்தால நேரத்துல எனக்கு போன் பண்ணி சொல்றீங்க?" என்றான் வனமாலி.

"இல்ல நேத்திக்குத்தான், வீட்டுலேர்ந்து வேலை பார்க்க லேப்டாப் கொடுக்கற பொறுப்பு உங்களுக்கு கொடுத்துருக்காங்கன்னு என்னோட பிரண்டு பிரியா நேத்து சாயந்திரம் சொன்னா. நான் கர்ப்பமானதால, மத்தவங்களுக்கு முன்னாடி, எனக்கு லேப்டாப் கொடுக்கறதுக்குத்தான், இப்பவே உங்களுக்கு போன் போட்டேன். லேப்டாப் இருந்தாதான் என்னால வீட்டுலேர்ந்து வேல செய்யமுடியும். லிஸ்டுல என் பேர முதல்ல வச்சுக்கோங்க. மறந்துடாதீங்க வனமாலி. நேரமாயிடுச்சு. மாமியார்கிட்ட இந்த நல்ல செய்திய சொல்லப்போறேன். பை பை!" என்றாள் கோமளவல்லி.

வனமாலி கைப்பேசியை வைத்தவுடன், மாலினி வனமாலியைப் பார்த்த ருத்ரபார்வையில் வனமாலி வெடவெடத்தான். 

"யாருங்க அந்தப் பொண்ணு? காலங்கார்த்தால கர்ப்பமாயிட்டேன்னு உங்களுக்குப் போன் பண்ணிசொல்லறா? என்ன நடக்குது? உண்மையச் சொல்லுங்க" என்றாள் மாலினி.

"மாலினி. உன்னோட கோபம் எனக்குப் புரியுது. அந்தப் பொண்ணு எனக்கு யாருன்னே தெரியாது. நேத்திக்கு சாயந்திரம்தான், எனக்கு பிரமோஷன் வந்ததைச் சொன்னேனே. அதுல வீட்டுலேர்ந்து வேல பாக்கறத்துக்கு ஆபிஸ் லேப்டாப் கொடுக்கற பொறுப்பும் இருக்கு. லேப்டாப் கம்மியாத்தான் இருக்கு. பயங்கர போட்டின்னு கேள்விப்பட்டுருக்கேன். இவ்வளவு போட்டியா இருக்கும்னு தெரியாது. அந்தப் பொண்ணுக்கு முன்னாடி ஏற்கனவே, பல பேரோட பேர் அந்த லிஸ்டுல இருக்கு. அந்தப் பொண்ணு தன்னோட பேர சேக்கறதுக்காக, எனக்கு போன் பண்ணியிருக்கா. உன்னத் தவிர வேற எந்தப் பொண்ணையும் ஏரெடுத்தும் பாக்காத ஆளு நான். மத்தப் பொண்ணுங்கள்ளாலாம் எனக்கு சிஸ்டர் மாதிரி. என்ன நம்பு” என்றான் வனமாலி. 

மாலினி நிம்மதி அடைந்து, வனமாலியின் அருகே மறுபடி தூங்கத் தொடங்கினாள். 

ன்று வனமாலி அலுவலகம் சென்றபோது, அவனுக்கு முன்பாக ஒரு நாரீமணிகளின் கூட்டம் வந்து அமர்ந்தது. எல்லோரின் கைகளிலும், ஒரு இனிப்புப் பொட்டலம் இருந்தது. எல்லாரும் பரபரப்பாக குனிந்து, எதையோ எழுதினார்கள். வனமாலி அமர்ந்தவுடன், எல்லாரும் பதறி அடித்துக்கொண்டு, வனமாலிக்கு முன்பு, பல காகிதங்களை நீட்டியபோதுதான், எல்லாம் திருமண அழைப்பிதழ்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. 

“வனமாலி சார். என்னோட கல்யாண இன்விடேஷன நீங்கதான் முதல்ல வாங்கணும்” என்றாள் ஒரு பெண்மணி.

“இருடி. நான்தான் முதல்ல வந்தேன். என்னோட கல்யாண இன்விடேஷனதான் வனமாலி முதல்ல வாங்குவாரு” என்றாள் மற்றொரு பெண்மணி.

அங்கு வனமாலியின் முகத்தை மறைப்பதுபோல், பல்வேறு திருமண அட்டைகள் முகத்தினருகே வந்தபோது, கண்ணுக்கு முன்பு ஒரு வானவில்லைப்போல பல்வேறு வண்ணங்கள் இருக்க, பெண்களின் முகங்களே அவனுக்குத் தெரியவில்லை. 

“இருங்க. சண்ட வேண்டாம். எல்லாரும் என்னோட டேபிள்ல வச்சுருங்க. அங்க நிறைய லேப்டாப் இருக்கு. லேப்டாப் பத்திரம்” என்றான் வனமாலி. 

“எங்களோட லேப்டாப் பத்திரம் வனமாலி சார்” என்று ஒருமித்த குரலில், பெண்மணிகளின் கூக்குரல் வனமாலியின் அறையின் கூரையைப் பிளந்தது.

அவர்கள் இனிப்புகளை வனமாலியின் வாயில் திணிக்க முயல, வனமாலி திக்குமுக்காடிப் போனான். அவனது சிறிய வயதில்கூட, யாரும் இவ்வளவு வாஞ்சையாக இனிப்புகளைக் கொடுத்ததில்லை. 

“வனமாலி சார். காஜூகத்லி இந்தாங்க” என்றாள் ஒருத்தி.

“வனமாலி ஜி. அது நார்த் இண்டியா ஸ்வீட். நம்ம ஊரு திருநெல்வேலி அல்வா இந்தாங்க. நான் அல்வா கொடுத்ததால, எனக்கு லேப்டாப் கொடுக்காம அல்வா கொடுத்துடாதீங்க” என்றாள் மற்றொருத்தி அசடு வழிய சிரித்துக்கொண்டே! 

“அதனாலதான். நான் பால்கோவா கொண்டுவந்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா. அவருக்கு அல்வா கொடுக்காதடீ. பால்கோவா சாப்பிடுங்க வனமாலி சார்” என்றாள் இன்னொருத்தி. 

“வனமாலி அண்ணா. ரசகுல்லா சாப்பிடுங்க” என்றாள் இடது பக்கத்திலிருந்த ஒரு பெண். 

“அதவிடுங்க வனமாலி ஜி. குலாப் ஜாமூன் சாப்பிடுங்க. நானே கைப்பட செஞ்சது” என்றாள் வலது பக்கத்திலிருந்த இன்னொரு பெண்.

“வனமாலி. சந்திரகலா சாப்பிடுங்க.”

“வனமாலி. சூரியகலா சாப்பிடுங்க. சந்திரனுக்கு சூரியன்கிட்டருந்துதான் வெளிச்சம் வருது. சூரியகலாதான் பெருசு.”

“வனமாலி. சோன்பப்டி சாப்பிடுங்க.”

“வனமாலி. மைசூர்பாக் சாப்பிடுங்க. அக்மார்க் நெய்யால செஞ்சது.”  பல்வேறு குரல்கள் எட்டுத் திக்குகளிலிருந்து ஒலிக்க,  வனமாலி மேலே நோக்கியபோது, மின்விசிறிகூட, ஜாங்கிரியைப்போல் ஒரு விநாடி தோன்றி மறைந்தது. வனமாலி பதிலளிக்காதபடி, அவனது வாயில் பல்வேறு இனிப்புகள் திணிக்கப்பட்டன. நல்லவேளையாக வனமாலியால் மூச்சு விட முடிந்தது.

வனமாலியின் உடையில் ரசகுல்லா ஜீரா, குலாப் ஜாமூன் ஜீரா என பல்வேறு சர்க்கரைக் கரைசல்கள் கொட்ட, வனமாலி சர்க்கரைக் கரைசல் மழையில் தொப்பலாக நனைந்தான். உடம்பெல்லாம் இசகுபிசகாக இருந்தது. கைகளைச் சேர்த்தபோது, பெபிகால் போல் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது. உடையைச் சுத்தம் செய்ய, வனமாலி கழிப்பறையை நோக்கி ஓடினான்.

ஒருவழியாக, வனமாலி வெளியே வந்தபோது, கழிப்பறைக்கு வெளியே அங்கு அவனுக்காக, பல்வேறு இளம் காதல் ஜோடிகள் அணிவகுத்து நின்றனர். 

“வனமாலி சார். நீங்க பாக்க அனுமார் மாதிரி இருக்கீங்க. ராமரையும் சீதையையும் அனுமார் சேத்து வச்ச மாதிரி, எங்க இரண்டு பேரையும் சேத்து வச்சு, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணணும்” என்றான் ஒரு சின்னப் பையன்

“வனமாலி சார். கல்யாணம் மத்திரம் இல்ல. லேப்டாப்பும் நீங்கதான் ஏற்பாடு பண்ணணும். லேப்டாப் முக்கியம். கல்யாணத் தேதியோட, லேப்டாப் தேதியையும் நீங்க முடிவு பண்ணுங்க” என்றாள் சின்னப் பையனின் அருகிலிருந்த அவனது காதலி சின்னப் பொண்ணு. 

இருவரும் சேர்ந்து வனமாலியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அதற்குள் பல்வேறு காதல் ஜோடிகள், தாங்களும் வனமாலியிடன் நல்ல பேர் பெற வேண்டி, வனமாலியை நோக்கி ஓடி வர, அங்கு ஒரு தள்ளு முள்ளு ஏற்பட்டது. வனமாலி அந்தத் தள்ளுமுள்ளுவின் நடுவில் அகப்பட்டுக் கொண்டான். வனமாலி “நிறுத்துங்க” என கூவியதும்தான், அந்த இளவட்டங்கள் வனமாலியைச் சுற்றி இளமை வட்டமாக நின்றனர். 

“சார். நம்ம கம்பெனியோட இளவட்டங்கள் சார்பா வர்ற காதலர் தினத்தன்னிக்கு, பீச்சுல ஒரு  விழாவுக்கு ஏற்பாடு பண்ணப்போறோம். நீங்கதான் தலைமை தாங்கணும். காதலர்களோட நம்பிக்கை நட்சத்திரம் நீங்க. இந்தாங்க இன்விடேஷன். உங்க பேருதான் தலைமையுரை, முன்னுரை, நடுவுரை, பின்னுரை எல்லாமே. நன்றியுரை மட்டும் நாங்க. லேப்டாப் கொடுக்கப்போற உங்ககிட்ட என்னிக்கும் நாங்க நன்றியோட இருப்போம். வாங்கடா நம்ப தலைவர் வனமாலியை ஊர்வலமாக அவரோட இடத்துக்கு கூட்டிட்டு போவோம்” என்றான் ஒரு ஒல்லிக்குச்சி தம்பி.

வனமாலி சுதாரிப்பதற்குள், அந்த ஒல்லிக்குச்சி தம்பி வனமாலியை தூக்க முடியாமல் தூக்க முயல, வனமாலி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பல திசைகளில் கீழே விழுமாறு குடைசாய, ஒல்லிக்குச்சிப் பையன் “தூக்குங்கடா வனமாலி ஜியை” என்று கத்த, பல தாடிவைத்த இளவட்டப் பசங்களின் கூட்டம் வனமாலியைத் தலைக்கு மேலே தூக்கியது. 

“காதல் வானின் நம்பிக்கை நட்சத்திரம் வனமாலி. வாழ்க. வாழ்க” என்ற கோஷம் விண்ணைப் பிளக்க, வனமாலியை அவனது அலுவலகத்திற்கு தூக்கிச் சென்றனர். 

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!
ஓவியம்: பிரபுராம்

னமாலி அவனது அலுவலகத்தில் நுழைந்தபோது, அங்கு சில கர்ப்பிணிப் பெண்கள் அமர்ந்திருந்தனர். 

வனமாலியின் மேலாளர் முருகனும் நுழைந்தார். முருகனைக் கண்டவுடன், அங்கிருந்த பெண்கள், தாங்கள் பின்னர்  வனமாலிக்கு கண்ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். 

“சார். தயவு செஞ்சு ஆபிஸ் லேப்டாப் கொடுக்கற பொறுப்பை எனக்கு கொடுக்காதீங்க. இன்னிக்கு காலைலேர்ந்து ஆபிஸ்ல அங்கயும் இங்கயும் என்னப் போட்டு எல்லாரும் பந்தாடறாங்க” என்றான் வனமாலி

“நேத்திக்குத்தான் இந்தப் பொறுப்பு உங்களுக்கு வந்துருக்கு. அதுக்குள்ள இப்படி சொல்றீங்க. லேப்டாப் இல்லன்னா நிறைமாச கர்ப்பிணி பொண்ணுங்க லீவு போட வேண்டியிருக்கு. லேப்டாப் வேற தட்டுப்பாடா இருக்கு“ என்றார் முருகன்

“சார். எதுக்கு லேப்டாப்? அவங்களோட ஆபீஸ் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையே வீட்டுக்குக் கொண்டு போயிடலாம். அவங்க ஆபீஸ் வேலைய வீட்டுலேர்ந்து பண்ணிக்கலாமே. நமக்கும் லேப்டாப் செலவு மிச்சம்” என்றான் வனமாலி

“அருமையான யோசனை. இப்பவே, உங்களோட ரூமுக்கு வெளிய இத அறிவிப்பா போட்டுருங்க” என்றார் முருகன்

றவனமாலி அறிவிப்பை ஒட்டியபோது, அது தாய்மார்களுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் அமைதிக்கான அறிவிப்பை வழங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com