சிறுகதை; வரன்!

Short Story in tamil...
Short story Image
Published on

-மதுமிதா

க்காவின் குரல் பெரிதாகக் கேட்டது. ஆச்சர்யமாக இருந்தது. அக்கா அதிர்ந்து பேசமாட்டாள். குரல் உயர்த்தினாள் எனில் ஏதோ முக்கிய விஷயமாகத் தானிருக்கும்.

அவசரமாய் ஸ்டிக்கர் பொட்டு பிரித்து தமயந்தி நெற்றிக்கு இட்டாள். ஒற்றைநொடி கண்ணாடியில் பிம்பம் பார்த்து வெளியே வந்தாள்.

இப்போது அக்கா பேச்சு தொலைத்து அழுதுகொண்டிருந்தாள். ஊஞ்சல் கம்பியை பிடித்துக்கொண்டு அம்மா மௌனமாக. எதிரே அப்பா ஒருவித குற்ற உணர்ச்சியுடன். தமயந்தி பதறினாள். அக்கா தோளைத் தொட்டாள்.

"என்னம்மா... ஏன் அக்கா அழறா...?"

அக்கா நிமிர்ந்தாள். இவளைப் பார்த்ததும் அழுகை பெரிதானது.

"என்ன சந்து... என்னம்மா...?"

அவள் கண்ணீர் துடைத்தாள். கைகொடுத்து தூக்கினாள். தோளை அணைத்து உள்பக்கம் அழைத்துப் போனாள்.

அம்மா நகர முயற்சித்தாள். அப்பா கைநீட்டி தடுக்க, நின்றாள். அக்காவை உட்கார வைத்தாள்.

"என்னக்கா... சின்னக் குழந்தை மாதிரி அழறே...?"

அக்கா பார்வை தாழ்த்தினாள். முகவாய் தொட்டு நிமிர்த்தினாள். கண்மீன்கள் மழைத்தன.

"சொல்லுப்பா... அம்மா என்ன சொன்னா...?"

இவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.

"நான் என்னடி பண்ணுவேன்...? வர்ற மாப்பிள்ளை எல்லாம் என்னை வேண்டான்னு சொல்லிட்டு போறான்னு அம்மா என்கிட்ட கத்துறா...!"

பேச முடியாமல் தவித்தாள்.

கடவுளே!

அம்மாவா?

ஆறுதல் சொல்ல வேண்டியவள் காயப்படுத்துகிறாள்.

"ஹேய்...இதானா.... சியர் அப் மேன்... அவங்க கிடக்கிறானுங்க முட்டாப் பசங்க...!"

இவள் பேச்சு பார்த்து அக்கா புன்னகைத்தாள்.

"ராஜகுமாரன் வருவான்... என் அக்காவை குதிரைல ஏத்திட்டுப் போவான் தெரியுமா...?"

அக்கா விழி துடைத்தாள்.

"இல்லே தமயந்தி... நான் உனக்கு தடையா நிக்க விரும்பலை... முதல்ல உனக்கு பண்ணச் சொன்னேன்... அதான் அம்மா கத்தறா...!"

தமயந்தி பெரிதாகத் தலையசைத்தாள்.

"நோ... நோ... உன் பையனை கொஞ்சி ஸ்கூல்லே கொண்டு விட்டுட்டுதான் எனக்கு கல்யாணம்... தத்து பித்துன்னு உளறாதே... வா... சாப்பிடலாம்...!"

அம்மா மௌனமாய் டிபன் பரிமாறினாள்.

நடுநடுவே தமயந்தி ஜோக் அடித்தாள்.

முதலில் அம்மா மசியவில்லை.

பின்பு அம்மா தணிந்தாள்.

இளகினாள்.

"கோச்சுக்காதடி... செல்லம்... என்ன பண்றது.... வயசாய்டுச்சுல்ல...!"

அக்காவின் தலையைக் கோதினாள்.

அக்கா அம்மாவின் இடுப்பில் முகம் புதைத்தாள்.

யாரோ தோளைத் தொட்டார்கள்.

ஸ்வர்ணா.

"தமு... உன் அப்பா வந்துருக்கார்...!"

அதிர்ந்தாள்.

அப்பா அலுவலகம் வர மாட்டார். எனில் எதுவும் அவசரம்? ஃபைலை மூடி விட்டு எழுந்தாள்.

“என்னப்பா... என்ன...?"

''பதறாதம்மா... நல்ல விஷயம்தான்!"

இவள் பதற்றம் பார்த்து அப்பா சிரித்தார்.

"தரகர் வந்தார்... திடீர்னு ஒரு வரன் வந்துருக்கு... அக்காவை உடனே பாக்கணும்னு சொல்றாங்க...!"

"பையன் என்ன பண்றார்.?"

"சிவில் இன்ஜீனியர்... சிங்கப்பூர்ல ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை பாக்குறார். ஒரு மாசம் லீவுல வந்துருக்கார்... உடனே பாக்கணும்னு சொல்றாங்க!"

"சிங்கப்பூரா"

"அழச்சிட்டுப் போய்டுவாராம்... அஞ்சு வருஷத்துல காசு சேத்துட்டு இங்க வந்து தொழில் செய்யற ஐடியால இருக்காராம்... நல்ல பையன்தான்...

அப்பாவுக்குப் பிடித்துப் போய்விட்டது.

"அரை நாள் லீவு சொல்லிட்டு வாம்மா...!"

தலையசைத்தாள்.

வந்து விட்டார்கள்.

பையனின் கண்கள் அலைபாய்ந்தன.

பையனின் தாய், தந்தை, சகோதரன் வந்திருந்தார்கள்.

அப்பா பேசுவது கேட்டது.

"இவருதான் பையன்... பெரியவர்... அது அவர் தம்பி... ஸி.ஏ. முடிச்சுட்டு கம்பெனில இருக்கார்!"

அப்பா உள்ளே வந்தார்.

''தமு... அக்காவை அழைச்சிட்டு வா...!"

அக்கா மெலிதாக அலங்காரம் பண்ணியிருந்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; தண்டனை!
Short Story in tamil...

அக்காவை அழைத்துக்கொண்டு போனாள்.

அக்கா தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள்.

தமயந்தி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள்.

மாப்பிள்ளை பையனின் பார்வை ஒருமுறை இவள் மேல் மோதியது.

அக்காவை அழைத்துப் போகச் சொன்னார்கள்.

உள்ளே போனார்கள்.

தமயந்தி வெளியே வந்து நின்றாள்.

அவர்கள் ரகசியமாக ஏதோ பேசிக்கொண்டார்கள்.

அப்பா கை பிசைந்து விலகி நின்றார்.

தரகர் தயக்கமாய் அப்பாவிடம் வந்தார்.

"சித்த உள்ற வாங்க...!"

போனார்கள்.

"என்ன சார்?"

அப்பா கேட்டார்.

"அவங்களுக்கு உங்க சம்பந்தம் பிடிச்சிருக்கு... ஆனா... உங்க சின்னப் பொண்ணைக் கொடுப்பீங்களான்னு கேக்கறாங்க...!"

அப்பா அதிர்ந்தார்.

"ஏன்...?"

"சின்னப் பொண்ணு நல்ல அழகு... நல்ல படிப்பு...!"

அக்காவின் கண்களில் நீர் துளிர்த்தது.

தமயந்தி தடக்கென வெளியே வந்தாள்.

இவள் வேகம் பார்த்தவர்கள் புருவம் சுளித்தார்கள்.

"தரகர் எல்லாம் சொன்னார்... உங்க மருமகளா வர்றதுக்கு எனக்கு இஷ்டம்தான்... சின்ன மாறுதல்... பெரிய மருமகளா அல்ல... சின்ன மருமகளா... என்ன சம்மதமா...?"

மாப்பிள்ளை பையன் சட்டென எழுந்தான்.

அவன் முகம் கறுத்திருந்தது.

எல்லோரும் கிளம்பி விட்டார்கள்.

“ஏம்மா... இப்படிப் பேசினே...?"

அப்பா தளர்வாய்க் கேட்டார்.

"உங்க பாஷைல பேசினா அவங்களுக்குப் புரியாதுப்பா... அதான் அவங்க பாஷைல பேசினேன்... சட்டுனு புரிஞ்சுக்கிட்டாங்க...!"

அக்கா இவளைப் பார்த்து சின்னதாய் சிரித்தாள்.

பின்குறிப்பு:-

கல்கி 09  ஏப்ரல் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com