Short story...
Short story...

சிறுகதை - அவர்களை அப்படியே விட்டுவிடு!

-வினோதினி

காலையில் ராஜகோபாலனின் வீடு போர்க்களமாகக் காட்சியளித்தது. பழங்கால தமிழ்நாட்டுப் பெண்கள் புலியை முறத்தால் விரட்டுமளவுக்கு வீரம் கொண்டிருந்தனர் என்றும், இப்பொழுது தமிழ்ப் பெண்களுக்கு வீரமில்லை என்பதும் எவ்வளவு அபத்தம் என்பது ராஜகோபாலனின் மனைவியைப் பார்த்தால் தெரியும்!

அமுதாவின் கையில் வாளும் கேடயமும் இல்லை அவ்வளவுதான் - மற்றபடி அவள் சமையலறையிலிருந்து ஹாலுக்குக் கணவனுக்கு காப்பி கொடுக்க ஓடுவதிலும், அங்கிருந்து வராந்தாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவை குளிக்கக் கூப்பிட்ட சப்தமான குரலிலும், அங்கிருந்து மொட்டை மாடிக்குத் தாவி ஏறி, படிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஜப்பான் குஸ்தி போட்டுக் கொண்டிருந்த குழந்தைகளை விலக்கிச் சமாதானப்படுத்திய லாகவத்திலும் - ஒரு நுட்பமான போர் வீரனின் குணாதிசயங்கள் தெரிந்தன.

ஏழுக்கு முதல் வண்டி - அதாவது ராஜ கோபாலன் - கிளம்பியது. ஏழரைக்கு பஸ்ஸை பிடித்தால்தான் பெரியகுளத்திற்கு 'பாங்'கிற்கு நேரத்தில் போய்ச்சேரமுடியும். எட்டு மணிக்கு இரண்டாவது வண்டி குழந்தைகள். அவர்களைக் கிளப்புவதற்குள் அமுதா பட்ட பாடு! அவளுடைய தந்தை வீரகுமரேசன், மகள் படும்பாட்டைப் பரிதாபமாகப் பார்த்தார்.

அவள் சொல்வதைக் குழந்தைகள் சட்டை செய்த மாதிரியே தெரியவில்லை. குளிக்க மாட்டேன் என்று சொன்ன மகனை தாஜா பண்ணிக் குளிக்க வைத்தாள். அவனைத் துவட்டிவிட்டு மகளைத் தேடும்போது, அவன் மறுபடியும் தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். அவனுக்குப் பச்சைத் தண்ணீர் ஆகாது. இந்த லட்சணத்தில் தலைக்கு ஊற்றிக் கொள்வதென்றால்...'

இனி நிச்சயம் மாலை அவள் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். கணவன் வர எட்டு மணியாகிவிடும். அவள்தான் ஓடவேண்டும். கோபம் மேலிட முதுகில் பளார் என்று ஒன்று வைத்தாள். அவன் இதுதான் சாக்கென்று பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.

அவனைச் சமாதானப்படுத்தி முடிக்கும்போது மகள் யுத்தத்தை ஆரம்பித்தாள். அவளுக்காக வைத்த பூ நீளம் குறைவாம் - பூ தலையிலிருந்து இடுப்பு வரைக்கும் வரணுமாம். இப்போது பூவுக்கு அமுதா எங்கே போவாள்?

"கண்ணில்லே... நான் சாயங்காலம் வரும்போது நல்ல பூவாக் கொண்டு வர்றேன். இது சரியில்லே... நீளமா வச்சா உனக்கு நல்லாருக்காது.."

இதையும் படியுங்கள்:
உடலை முடக்கும் சர்கோபீனியா பற்றித் தெரிந்து கொள்வோம்!
Short story...

மகள் ஓரளவு சமாதானமடைந்தாள். எல்லாம் ரெடியாகும்போது மகன் காப்பியைச் சட்டையில் கொட்டிக்கொண்டான். அவனுக்கு வேறு உடை மாற்றும்போது ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ வரும்போது தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் போய்விடுவான். அவள் அப்பாவிடம் சொல்லி ஆட்டோவைத் தாமதப்படுத்தினாள். ஒரு வழியாகக் குழந்தைகள் ஆட்டோவில் ஏறினர்.

ணியைப் பார்த்தாள் - எட்டு பத்து! அவள் கிளம்புவதற்கு இன்னும் நாற்பது நிமிடங்கள் இருந்தன. அதற்குள் துணி துவைத்து, குளித்து, பக்கத்துத் தெருவில் இருந்த ஆபீஸ் தோழி லீவ் லெட்டர் கொண்டு வர, அவளைச் சிரித்தமுகத்துடன் வரவேற்று, டப்பாவில் ஏதோ கொஞ்சம் அடைத்து வைத்துக்கொண்டு கிளம்ப ஒன்பது மணி ஆகிவிட்டது.

பக்கத்துத் தெருவில் இருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ் இப்பொழுது போயிருக்கும். மூன்று தெருக்கள் தள்ளியிருந்த பஸ் ஸ்டாண்டுக்குப் பதினைந்து நிமிடங்கள் நடந்து சென்று பஸ் ஏற வேண்டும்.

பஸ்ஸில் போகும்போது அமுதா தன்னுடைய நிலையை நினைத்துப் பரிதாபப்பட்டாள். குழந்தைகளை நினைக்கும்போது கோபமாக வந்தது. அமுதா சிறு வயதில் எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தாள்! தன்னுடைய பெற்றோருக்கு ஒரு சிரமமும் கொடுத்ததில்லை. சொன்ன பேச்சைக் கேட்பாள், அந்த மாதிரி அவளுடைய குழந்தைகள் இருந்தால் இந்த அவசர யுகத்தில் எவ்வளவு நன்றாக இருக்கும்!

மாலை வந்ததும் எல்லோருக்கும் டிஃபன் செய்து கொடுத்துவிட்டுக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். இருவருமே பாடத்தில் கவனம் செலுத்தாமல் விளையாட்டாய் இருக்க, அமுதாவுக்குத் தாங்க முடியாமல் கோபம் வந்தது. இருவரும் புரோகரஸ் கார்டு கொண்டு வந்திருந்தனர். மிகக் குறைந்த மார்க்கைப் பார்த்ததும் அவளுக்குப் பகீரென்றது. எவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுத்திருந்தாள். இப்படிப் பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே!

அன்று அலுவலகத்திலும் ஆபீஸரிடம் அமுதா திட்டு வாங்கியிருந்தாள் தாமதமாகப் போனதற்கு. எல்லாம் சேர்ந்துகொண்டது. கோபம் தலைக்கு ஏறியது. பென்ஸிலுக்காகச் சண்டை போட்ட இரண்டு குழந்தைகளையும் இழுத்து நன்றாக அடிக்க ஆரம்பித்தாள். வீரகுமரேசன் வந்து தடுத்தார்.

"என்னம்மா... இப்படிப் போட்டு அடிக்கிறே...?"

"பின்னே என்னப்பா! காலையிலிருந்து நீங்களும் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கீங்க? சொன்னால் ஒரு வார்த்தையாவது கேக்குறாங்களா? அதெல்லாம் போகட்டும். பரீட்சையிலாவது நல்ல மார்க் வாங்கலாமில்லே? உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியுமில்லே. நான் எவ்வளவு அடக்கமா இருந்தேன். சின்ன வயசிலே உங்களை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருப்பேனா..? இதுக எவ்வளவு தூரம் என்னைப் படுத்துது! உங்க மாப்பிள்ளையும் சாதுவான டைப்தான்... எங்களுக்கு எப்படிப்பா இப்படி கொழந்தைங்க பிறந்தது..?"

வீரகுமரேசன் அவளைப் பார்த்துச் சிரித்தார்.

"சிரிக்காதீங்கப்பா... எனக்கு கோபமா வருது...”

"சாரிம்மா... ஏதோ ஞாபகத்திலே சிரிச்சுட்டேன்... நீ உன்னையும்... உன்னைச் சுத்தி இருக்கிற உலகத்தையும் சரியாகப் புரிஞ்சுக்கல்லேம்மா... அதுதான் உன் கோபத்துக்குக் காரணம்..."

இதையும் படியுங்கள்:
நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் தமிழர்களின் அதிசய சிற்பக்கலை ரகசியங்கள்!
Short story...

"என்னப்பா சொல்றீங்க...?"

''ஆமாம்மா... நாங்க அந்தக் காலத்திலே வாழ்ந்த வாழ்க்கை ஆர்ப்பாட்டமில்லாத, திருப்தியான வாழ்க்கை... அந்த மனநிலையிலே பிறந்த நீங்களும் அமைதியாக இருந்தீங்க... ஆனால் இப்போ உங்க வாழ்க்கை பரபரப்பா இருக்கு... உங்களைச் சுத்தி எண்ணற்ற அநியாயங்கள் நடக்குதுன்னு நீங்க நினைக்கிறீங்க... பஸ்ஸிலே உன்னை இடிச்சிட்டுப் போறான்... வெயில் காலத்திலே எப்படி நீங்க தண்ணிக்காக ஆலாப் பறக்கிறீங்க? யாரும் அதுக்காக ஒண்ணும் செய்யக் காணோம்... போஸ்டர்லே பெண்களை அவமானப்படுத்துறாங்க. இப்படி எத்தனையோ. இதையெல்லாம் எதிர்க்கிற மனநிலை இருக்கு... ஆனா ஒண்ணும் செய்ய முடியல்லே என்கிற தோல்வி உணர்ச்சி. இந்தச் சூழ்நிலையிலே பிறக்கிற குழந்தைகளும் மனக்குமுறலோடு இருக்கு. இனம் பிரிச்சு எதிர்க்கிறதுக்குத் தெரியல்லே ... அதனாலே அம்மா பேச்சைக் கேக்க மாட்டேங்கிறான். அக்கா தம்பியை, தம்பி அண்ணனை காரணமில்லாமெ அடிக்குது... உங்ககிட்டே இருக்கிற ஒரு மனக் கலக்கம் அவங்ககிட்டேயும் தங்கியிருக்கு .. அதனாலே 'ரெஸ்ட்லெஸ்ஸா' இருக்கு... இதைப் புரிஞ்சுக்கிட்டா குழந்தைகளை நீ அடிக்க மாட்டே... அவங்களைத் திருத்தறதுக்கு என்ன வழின்னு யோசிக்க ஆரம்பிப்பே..."

அமுதா குழந்தைகளைக் கனிவுடன் பார்த்தாள்.

பின்குறிப்பு:-

கல்கி 01  நவம்பர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com