
இன்றைய அவசர உலகில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்க பெரும்பாடுபட்டு வருகின்றனர். அதுவும் பணிக்குச் செல்லும் பெற்றோராக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
குழந்தைகளின் கல்வி, ஒழுக்கம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை செதுக்குவது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
குழந்தைகளின் வளர்ப்பு முறையினைக் குறித்து அன்றே அதாவது, 1942 ஆம் ஆண்டே, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கல்கி வார இதழில் தொடராக எழுதியுள்ளார். கல்கி களஞ்சியத்திலிருந்து அத்தொடர் இதோ உங்களுக்காக…
குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலும் மற்ற மேல்நாட்டு பாஷைகளிலும் வெளியாகியிருக்கின்றன. உடலும் உள்ளமும் எவ்வாறு வளர்ச்சி பெறுகிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிப் பயன் முழுதும் எல்லாருக்கும் எட்டும் வழியில் மிகவும் அழகிய புத்தகங்கள் மேல்நாட்டு எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நம் நாட்டுத் தாய் தகப்பன்மார்களுக்கு உதவும்படியாக இத்தகைய நூல்கள் இன்னும் எழுதப்படவில்லை.