
குழந்தையின் சேஷ்டைகளை கவனித்து, அந்த இயற்கை வேகம் வேறு தகுந்த வழியில் செல்லும்படி செய்வது சிசு பாலனத்தில் முக்கிய சாமர்த்தியம். தீக்குச்சி கிழித்து எதற்காவது நெருப்பு வைக்கப் பார்க்கும் குழந்தையைத் தோட்டத்தில் உலர்ந்த குப்பைக்குத் தீ வைக்கும்படி காட்ட வேண்டும். செடிகளைப் பிய்க்கப் பார்க்கும்போது உபயோகமற்ற பூண்டுகளைப் பிடுங்கிக் காட்டித் தரவேண்டும். இயற்கை வேகங்களை துஷ்டத்தனமாகக் கருதி அடக்கப் பார்க்காமல் சரியான வழியில் உபயோகப்படுத்துவதே குழந்தையை வளர்க்கும் முறை.
குழந்தை சுவரில் படம் எழுதப் பார்க்கும். இது தாயாருக்கு பிடிக்காது. சுவரில் கிறுக்கிப் பாழ்படுத்தக் கூடாது என்று திட்டியோ, பயமுறுத்தியோ அடக்குமுறையினால் சுவரைக் காப்பாற்றுவதினால் சுவர் பிழைக்கும்; ஆனால் குழந்தைக்கு ஓரளவு தீங்கு செய்வதாகும். முதல் தடவை எழுதியதைப் பார்த்து "படம் நன்றாயிருக்கிறது. இப்படியே இந்தக் காகிதத்தில் எழுது. அப்பாவுக்குக் காட்டலாம்" என்று சொல்லிக் காகிதத்தில் வரைந்த படத்தை மறக்காமல் பிறகு அப்பாவுக்குக் காட்டி அதைப் பற்றி இருவரும் மகிழ்ச்சி தெரியப்படுத்த வேண்டும்.