
சரியான விளையாட்டுகள் குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வாத்தியார் சொல்லித் தரும் கணக்கும் எழுத்தும் குழந்தையின் குணத்தைச் சீர்படுத்த மாட்டாது. இயற்கை வேகங்களுக்குத் திருப்தியளிக்கும் வேலையும் விளையாட்டுமே குழந்தையின் முக்கியமான படிப்பு.
விளையாட்டு விளையாட்டாகவே இருக்கவேண்டும்; வேதனையாக இருக்கக்கூடாது. குழந்தை விளையாடும் விளையாட்டுகள் மூன்று வகையாகும். குழந்தை தானாகவே ஏதேனும் உண்டாக்கும் விளையாட்டு ஒரு வகை. இது பிறவி வேகங்களில் ஒன்றாகிய ஆக்க வேகத்திற்குத் திருப்தியளிக்கும். மற்றொரு வகை, பலருடன் சேர்ந்து கூடி மற்றவர்களுடைய ஆதீனத்தில் அடங்கி விளையாடும் விளையாட்டு. இதுவும் பிறவி வேகங்களில் ஒன்றாகிய சமுதாய வேகத்திற்குத் திருப்தி கொடுக்கும். மூன்றாவது, தான் தலைமை வகித்து நடத்தும் விளையாட்டு. இது மனிதனுடைய பிறவி வேகங்களில் இன்னொன்றாகிய யாஜமான்ய வேகத்திற்குத் திருப்தியளிக்கும். மூன்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏதுவாகும்.