

17/08/2003 தேதி கல்கி வர இதழில்...
"அறிவியலை ஏன் தமிழில் படிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்?" எழுத்தாளர் சிவசங்கரியிடம் மனம் திறக்கிறார் APJ அப்துல் கலாம் அவர்கள். கல்கி களஞ்சியத்திலிருந்து சுவாரசியமான எட்டிக்குப் போட்டி பேட்டி...
'அக்னிச் சிறகுகள்' விற்பனை ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டிவிட்டது. நாடறிந்த தலைவரான அப்துல் கலாம் ஓர் எழுத்தாளராகவும் முத்திரை பதித்துவிட்டார். எழுத்தாளர், தனி மனிதர் என்ற தகுதியில் அவர் சிந்தனைகள் என்ன..? இந்தப் பிரத்யேகப் பேட்டி ஆராய்கிறது...
இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
கல்லூரியில் படித்தபோது இலக்கியத்தின்பால் உங்களுக்கு ஈடுபாடு உண்டானது என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். மனசைத் தொட்டு சிந்திக்க வைக்கும்படியான கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். படைப்பாளியாக வேண்டும் என்பது உங்கள் சின்ன வயசுக் கனவா? எப்போது எழுதத் துவங்கினீர்கள்?
எழுத வேண்டும் என்கிற ஆசை எனக்கு எப்போதும் உண்டு. அது, எப்போது, எப்படி வளர்ந்ததென்று சொல்லத் தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் படித்தபோது என்னை வெகுவாகப் பாதித்த ஒரு பாதிரியாரின் செயல்பாடுகளை ஒரு கனவுபோல வர்ணித்து எழுதினேன். கல்லூரி மலரில் பிரசுரமான அந்தக் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு. அதுதான் துவக்கம்.
அந்தக் கட்டுரையின் தலைப்பு, உள்ளடக்கம் என்ன?
எங்கள் கல்லூரியின் ரெவரண்ட் ஃபாதர் தினமும் ஹாஸ்டலில் இரண்டு, மூன்று நான்கு மாடிகள் ஏறி ஒவ்வொரு மாணவரையும் பரிவோடு விசாரித்து கவனிப்பார்.
ஒரு சமயம், வெகு நாட்களாகப் பெற்றோருக்குக் கடிதம் எழுதாமலிருந்த பையனிடம் இன்லாண்ட் தபால் கவரைத் தந்து, கிட்டத்தில் நின்று எழுதவைத்து, அதை அவரே மடித்து ஒட்டி, தபாலில் சேர்த்தார்.
இன்னொரு சமயம், ஒரு பையனின் முகம் தலைவலியால் வாடியிருந்ததைக் கவனித்து, என்னவென்று விசாரித்து, உடனே மாத்திரை கொடுத்து போட்டுக் கொள்ளச் செய்தார். கரிசனத்துடன் கூடிய இந்த நடவடிக்கைகள் என்னைப் பாதித்ததில், 'ஒரு உண்மைத் தந்தை' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையை எழுதினேன்.
பிறகு எம்.ஐ.டி.யில் படித்தபோது தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் நான் எழுதிய 'ஆகாய விமானம் கட்டுவோம்' என்ற கட்டுரைக்கு முதல் பரிசு கிடைக்க, அதை அன்றைய ஆனந்தவிகடன் ஆசிரியர் தேவன் கையால் வாங்கினேன். அதற்குப் பிறகுதான் தமிழின்பால் உண்மையான ஆர்வம் பிறந்து, வளர்ந்து, இலக்கிய, விஞ்ஞானக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவது என்று தொடர்கிறது.கவிதை, கட்டுரைகளை நீங்கள் சிந்தித்து எழுதுவது தமிழிலா, அல்லது ஆங்கிலத்திலா ?
கவிதை, கட்டுரைகளை நீங்கள் சிந்தித்து எழுதுவது தமிழிலா, அல்லது ஆங்கிலத்திலா?
கவிதைகளைத் தமிழில்தான் சிந்தித்து எழுதுவேன். தேவையென்றால் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன். ஆனால், விஞ்ஞானக் கட்டுரைகளை ஆங்கிலத்திலேயே சிந்தித்து எழுதுவேன்.
நீங்கள் பேசும்போது பல சந்தர்ப்பங்களில் திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டுகிறீர்கள். திருக்குறள் மீது உங்களுக்கு இத்தகைய ஈர்ப்பு வரக் காரணம் ஏதும் உண்டா?
ராமநாதபுரம் ஸ்வாட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, வெங்கடசுப்ரமணியன் என்றொரு தமிழாசிரியர் இருந்தார். அவர் தினமும் ஒரு குறளை கரும் பலகையில் எழுதி விளக்கம் கொடுப்பார். ஒரு நாள், 'வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம் உள்ளத் தனைய(து) உயர்வு' என்ற குறளை எழுதிவிட்டு, மாணவர்களை அவரவர் கற்பனைக்கேற்ப விளக்கம் கொடுக்கச் சொன்னார். முதிர்ச்சி இல்லாத அந்த வயதில் நான் கொடுத்த விளக்கத்தை அவர் மிகச் சிறந்தது என்று பாராட்டியது இப்போது நினைவுக்கு வருகிறது.
அன்று நீங்கள் கொடுத்த விளக்கம் நினைவிலிருக்கிறதா?
ஆறு, குளங்களில் ஆழம் அதிகமாயிருக்கும்போது, தெளிவாக, சுத்தமாக இருக்கும் தண்ணீர், நீர் வற்றி, ஆழம் குறைந்துவிட்டால் சேறும் சகதியுமாகி அசுத்தமாகிவிடும். நீர் சுத்தமாக இருந்தாலும் அசுத்தமாக இருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், அதில் முளைத்திருக்கும் அல்லி, பூ மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். இதேபோல, எந்தச் சூழ்நிலையிலும், எந்தப் பிரச்னை வந்தாலும், நாம் மன உறுதியுடன் இருந்தால், வெற்றி என்கிற பூ நம்மை வந்து சேரும் - என்றேன். திருக்குறள்பால் எனக்கு ஈர்ப்பு வந்தது இப்படித்தான்.
ஜப்பான், சீனா, ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்று பட்டம் பெற்றுள்ளதால், சர்வதேச அளவில் வியாபார ரீதியாகத் தொடர்பு கொள்வதற்கு இயலாது போகிறது. இதை உணர்ந்து பலரும் அண்மைக் காலத்தில் ஆங்கிலமும் பயில முன்வந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. நிலைமை இப்படி இருக்கையில், எந்த நோக்கத்தில் அறிவியலைத் தமிழில் படிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?
நான் பள்ளியிறுதி ஆண்டுவரை தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். கல்லூரிக்கு வந்ததும், மீடியம் ஆங்கிலத்துக்கு மாறிவிட்டது. அங்கும் ஐம்பெருமான் கோனார் என்ற ஆசிரியர் தமிழ் வகுப்புகளை எடுத்தார். கம்பராமாயணத்தை அருமையாய்ச் சொல்லிக் கொடுத்தார். இந்த வகையில்தான் அனைவருக்கும் கல்வியைப் போதிக்கவேண்டும் என்பது என் கருத்து. ஆரம்பத்தில் தமிழில்தான் படிக்கவேண்டும். பிறகு மாற்றிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால், தமிழை விட்டுவிடக் கூடாது. அது பாரம்பரியமுள்ள ஓர் அருமையான மொழி.
(பேட்டி தொடர்கிறது... பகுதி 2)