கல்கி களஞ்சியத்திலிருந்து... சிவசங்கரி Meets அப்துல் கலாம் - பகுதி 3

ஜூலை 27: ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம்: எழுத்தாளர் சிவசங்கரியின் பேட்டி!
சிவசங்கரி - அப்துல் கலாம்
Sivasankari - A. P. J. Abdul Kalamபடங்கள் மீடியா ராமு
Updated on

24/08/2003 தேதி கல்கி வர இதழில்...

"கணவன் - மனைவி பந்தம் தேவை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" எழுத்தாளர் சிவசங்கரியிடம் மனம் திறக்கிறார் APJ அப்துல் கலாம் அவர்கள். கல்கி களஞ்சியத்திலிருந்து சுவாரசியமான எட்டிக்குப் போட்டி பேட்டி...

'அக்னிச் சிறகுகள்' விற்பனை ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டிவிட்டது. நாடறிந்த தலைவரான அப்துல் கலாம் ஓர் எழுத்தாளராகவும் முத்திரை பதித்துவிட்டார். எழுத்தாளர், தனி மனிதர் என்ற தகுதியில் அவர் சிந்தனைகள் என்ன..? இந்தப் பிரத்யேகப் பேட்டி ஆராய்கிறது...

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

Q

மீண்டும் இதையே வற்புறுத்திக் கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். சில விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. கணவன் - மனைவி பந்தம், உறவு என்பது அலாதியானதுதானே? அந்த பந்தம் தேவை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

A

எனக்கு நேர்ந்ததைக் கூறுகிறேன்; நீங்கள் கதாசிரியர், புரிந்துகொள்வீர்கள். இங்கே மூன்று விஷயங்களைக் குறிப்பிட வேண்டும்.. முதலில் - நான் ஏற்கெனவே சொன்னவிதத்தில் என் குடும்பத்தாருடன் எனக்கிருந்த பந்தங்கள்; என் குடும்பம் மிகப் பெரியது... அதன் மூலம் எனக்குக் கிட்டிய நிறைவைத் தந்த உறவுகள். இரண்டாவது - சிறுவயது முதற்கொண்டே புத்தகங்களுடன் எனக்குண்டான நட்பு. இன்றுவரை எவராலும் அசைக்க முடியாத, அதன் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாத நட்பாக அது இருக்கிறது; மூன்றாவது ஒரு இலட்சியத்தை நோக்கிச் சென்ற என் பணிகள், முதன்முறையாக ஒரு காரியத்தைச் செய்யும் முனைப்பு, ராக்கெட் விடுவது போன்ற வெவ்வேறு ஈடுபாடுகள். இந்த மூன்று விஷயங்களும் ஒரு முக்கோணம்போல அமைந்து, வேறு எந்த விஷயமும், உறவின் தேவை குறித்தும் சிந்திக்கவிடாமல் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன.

Q

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தேவனும் இருக்கிறான், ராட்சஸனும் இருக்கிறான். ராட்சஸ குணங்களை அடக்கிவிட்டு தெய்வத்தன்மையை வளர்த்துக்கொள்வதுதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது என்பார்கள். கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற எதிர்மறைச் சிந்தனைகளை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள்?

A

பொதுவாகத் தோல்வி, அல்லது பிரச்னை வரும்போது, துன்பம் தலையெடுப்பது இயற்கை. இந்தத் துன்பம் என்னை ஆக்கிரமித்து அது எஜமானனாகிவிட்டால்தான் நீங்கள் குறிப்பிட்ட கோபம், ஆத்திரம், பொறாமை உணர்வுகளுக்கு நான் அடிமையாவேன். ஆனால், எந்தச் சூழலிலும், பிரச்னையிலும் அந்தத் துன்பத்தை அடக்கிவிடும் எஜமானனாகிவிட்டால், பிரச்னையே எழாது. 'இடுக்கண் வருங்கால் நகுக' தெரியும்தானே? எப்போதும் நல்லெண்ணங்கள் நம்மை, நம் மனதை, எண்ணங்களை வலம் வந்துகொண்டே இருக்க வேண்டும். நண்பர்களோடு 'வாக்' போகும்போது எப்போதாவது, 'மனசை வருத்தும் வார்த்தைகளை ஒருவர் சொன்னார்; ஆனால் அதை மனசில் வைத்துக்கொள்ளாமல் காற்றோடு கலக்கச் செய்துவிட்டேன்' என்று சொல்லியிருக்கிறேன். விடக் கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளே தங்கி குடைந்துகொண்டே இருக்க அனுமதிக்கக் கூடாது.

Q

பணம், புகழ், பதவி இம்மூன்றும் போதை தரக்கூடியவை. இந்த மூன்றையும் உங்கள் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு என் இளவயதுக்குப் போகவேண்டும். என் பெற்றோரிடம் பணம் இருந்ததில்லை. என்றாலும் வீட்டுக்கு வருபவர்களுக்கெல்லாம் இல்லை என்று கூறாமல் சாப்பாடு போட்டுக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் சந்தோஷமாய் இருப்பதற்குப் பணம் வேண்டும் என்பதேயில்லை. நான் சிறுவனாய் இருந்தபோது காலையில் நான்கு மணிக்கு எழுந்து, அப்பாவுடன் தொழுதுவிட்டு, மதரஸா பள்ளியில் குரான் படித்து; ரயில்வே ஸ்டேஷனில் பேப்பர் கட்டுகளை எடுத்து வினியோகம் செய்து, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, உடை மாற்றி பள்ளிக்குச் சென்று, மாலையில் திரும்பி, பண வசூலுக்குச் சென்று, வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு, சாப்பிட்டுப் படுப்பேன். முச்சுவிட நேரமிருக்காது. என்றாலும் சந்தோஷத்திற்கு அளவேயில்லாமல் இருந்தது. பணம் நல்ல பணமாய், நேர்வழியில் வந்ததாய் இருந்தால், வாழ்க்கை அமைதியாய் இருக்கும்.

அடுத்து புகழ் - இதை நான் ஓர் உதாரணம் மூலம் விளக்குகிறேன். முதன்முதலில் ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் நான் தோல்வியடைந்தபோது, எனக்கு மேலதிகாரியாக இருந்த சதீஷ் தாவன் என்ற அருமையான மனிதர், அந்தத் தோல்விக்குத் தம்மைப் பொறுப்பாக்கிக்கொண்டார். ஆனால், அடுத்த முறை ராக்கெட்டை வெற்றிகரமாய் விண்ணில் செலுத்தியபோது, அந்த வெற்றிக்கு என்னைக் காரணமாக்கினார். இது எப்பேர்ப்பட்ட உயர்ந்த காரியம்! தோல்வியைத் தான் எடுத்துக்கொண்டு, புகழை எனக்குத் தந்த அந்த உயர்ந்த செய்கை, இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அதன்பிறகு ஏதாவது காரியத்திற்காகப் புகழ் வந்தால், உடனே சதீஷ் தாவனைத்தான் நினைத்துக்கொள்வேன். பதவி - வரும், போகும்... அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? (சிரிக்கிறார்)

Q

'பிரார்த்தனை செய்யும்போது ஜாதி, மதம் என்று அனைத்தையும் கடந்து பிரபஞ்சத்தில் கலந்துவிடுகிறோம் என்றும், பிரார்த்தனை செய்தால் புதுமையாக சிந்திக்கும் சக்தி கிடைக்கிறது' என்றும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பிரார்த்தனைக்கென்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கும் வழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?

A

இருக்கிறது. ஐந்து தரம் தொழுகை செய்வேள். பகலில் நேரமில்லை என்றால் இரவில் சேர்த்துச் செய்துவிடுவேன். பிரார்த்தனையிலேயே மிக உன்னதமானது எது தெரியுமா? குடும்பம், நண்பர்கள், சமுதாயம், நாடு, உலகம் - அனைத்தும் சிறப்பாக வாழ வேண்டும் என்று வேண்டுவதுதான் அருமையான பிரார்த்தனை. இப்படிப் பிரார்த்திக்கும்போது மனமும், இறைவனும் ஒரு கணமேனும் ஒன்றாகச் சங்கமிப்பது உறுதி.

Q

இளைய தலைமுறையினரின் ஆக்கபூர்வமான வளர்ச்சியில் உங்களுக்கு நிறைய அக்கறை உள்ளது, குடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களை, திரைப்படம், தொலைக்காட்சி, கதைகளில் கவர்ச்சியாய்ச் சித்திரிப்பது மாணவ சமுதாயத்தைக் கெடுக்கிறது என்று ஒரு கருத்து இருக்கிறது. இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்?

A

இளைய தலைமுறை சிகரெட், குடியின் சுவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நான் ஏற்பதற்கில்லை. முன்பு ஒரு குடும்பத்தில் மூன்று நான்கு நபர்கள் புகைபிடித்தால், இன்று கல்வி, விழிப்புணர்வு வந்துவிட்டதில் ஒருவர்கூட புகை பிடிப்பதில்லை. பெற்றோர் வீட்டில் ஒழுங்காக இருந்தால், குழந்தைகள் கண்டிப்பாகச் சிறந்த குடிமக்களாய் உருவாவார்கள். அப்புறம் பள்ளி, அங்குள்ள ஆசிரியர்கள். ஒரு குழந்தைக்கு முதல் முன்னுதாரணம் அவர்கள்தாம்.

சரியான கல்வியின் நோக்கம், 'நீ எனக்கு என்ன தருகிறாய்?' என்று கேட்கும் குழந்தையை, 'நான் உனக்கு என்ன தரட்டும்?" என்று கேட்கும் விதமாய் மாற்றக் கூடியதாய் இருக்க வேண்டும். சில வருஷங்களாய் இலட்சக்கணக்கான குழந்தைகளைச் சந்திப்பதை ஒரு இலட்சியமாய்ச் செய்து வருகிறேன். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு கனவு! ஒரிஸ்ஸாலில் சந்தித்த சிறுமி, 'நாள் அரசியல்வாதியாகி இலஞ்சத்தை ஒழிக்கப்போகிறேன்' என்கிறாள்! இதுபோன்ற கருத்துகள் இளைய தலைமுறையிடம் உள்ள முதிர்ச்சியைத்தானே காட்டுகிறது?

மீடியாக்களில் சில சந்தர்ப்பங்களில் குடி, சிகரெட் போன்ற விஷயங்களை glamourise செய்கிறார்கள். இது தவறு. மீடியா நெகடிவ்வான விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து பரபரப்புக்காகத் தருவதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

(பேட்டி தொடர்கிறது... பகுதி 4)

logo
Kalki Online
kalkionline.com