கல்கி களஞ்சியத்திலிருந்து... சிவசங்கரி Meets அப்துல் கலாம் - பகுதி 4

ஜூலை 27: ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம்: எழுத்தாளர் சிவசங்கரியின் பேட்டி!
சிவசங்கரி - அப்துல் கலாம்
Sivasankari - A. P. J. Abdul Kalamபடங்கள் மீடியா ராமு
Updated on

24/08/2003 தேதி கல்கி வர இதழில்...

'மூட நம்பிக்கை' என்று சொல்லப்படும் விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?"

எழுத்தாளர் சிவசங்கரியிடம் மனம் திறக்கிறார் APJ அப்துல் கலாம் அவர்கள். கல்கி களஞ்சியத்திலிருந்து சுவாரசியமான எட்டிக்குப் போட்டி பேட்டி...

'அக்னிச் சிறகுகள்' விற்பனை ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டிவிட்டது. நாடறிந்த தலைவரான அப்துல் கலாம் ஓர் எழுத்தாளராகவும் முத்திரை பதித்துவிட்டார். எழுத்தாளர், தனி மனிதர் என்ற தகுதியில் அவர் சிந்தனைகள் என்ன..? இந்தப் பிரத்யேகப் பேட்டி ஆராய்கிறது...

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

Q

உங்களுக்குக் கர்னாடக சங்கீதத்தில் ஈடுபாடு வந்தது. எப்படி? ராஷ்டிரபதி பவன் தொலைபேசியில் வீணையிசையை ஒலிக்கச் செய்தது நீங்கள்தானா?

A

ஸ்ரீராகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு' என்ற பாட்டு ஸ்ரீராகத்தில் எத்தனை அழகாக ஒலிக்கிறது! ஸ்ரீராகத்தை இசைக்கும் ஆர்வத்தில், ஹைதராபாதில் கல்யாணி என்ற ஆசிரியையிடம் வீணை பயின்றேன். எனக்கு வீணையிசை பிடிக்கும் என்பது தெரிந்து, இங்குள்ள தொலைபேசியில் அதை ஒலிக்கச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Q

நீலநிறச் சட்டையில் அதிகம் உங்களைப் பார்க்கிறோம். நீலம், பிடித்த நிறமா, அல்லது அதிர்ஷ்ட நிறமா?

A

பிடித்திருப்பதால்தான் அணிகிறேன். ஆகாயத்தின் நீலம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

Q

'மூட நம்பிக்கை' என்று சொல்லப்படும் விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

A

'ஜனாதிபதியாகப் பிரமாணம் எடுத்துக்கொள்ள எந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்?" என்று என்னிடம் கேட்டபோது, 'பூமி தன்னைத்தானேயும் சூரியனையும் சுற்றும் எந்த நாளும், நேரமும் எனக்குச் சம்மதமானவை' என்றேன்.

Q

உங்களுடைய தலைமுடியின் அலங்காரம் ஒரு தனித்தன்மையுடன் இருப்பதை விரும்பிச் செய்கிறீர்களா?

A

(பெரிதாய்ச் சிரிக்கிறார்) இதைக் கேட்டுதான் ஒவ்வொரு நாளும் எனக்கு நிறைய ஈமெயில்கள் வருகின்றன! (மீண்டும் சிரிக்கிறார்). நான் இரண்டு மாதத்திற்கொரு முறை தான் முடிதிருத்திக்கொள்வேன். அது பாட்டுக்கு வளர்கிறது, நான் என்ன பண்ணட்டும்!

Q

நீங்கள் இப்படிச் சொல்வதைக் கேட்கும்போது, தயானந்த சரஸ்வதி சுவாமிஜி சொன்ன ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நியூயார்க்கில் ஓர் அமெரிக்கர் சுவாமிஜியிடம், 'ஏன் தாடி வளர்க்கிறீர்கள்?" என்று விடாமல் கேட்க, இவர், 'நான் வளர்க்கவில்லை, அது தானாய் வளர்கிறது!" என்றாராம். (சிரிக்கிறார்) 'கனவு காணுங்கள்' என்று இளைய சமுதாயத்திடம் சொல்வதை விளக்க முடியுமா?

A

ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாய் உழைக்கவேண்டும்; வியர்வை சிந்த வேண்டும். விடாமல் அந்த இலட்சியத்தை அடையும் வரை உழைக்கவேண்டும். Goal, Sweat and Perseverance. இந்த மூன்றும் ஒருங்கிணைந்தால் தான் வெற்றி காண முடியும். இதைத்தான் நான் சுருக்கமாய் 'கனவு' என்கிறேன். இது ஒரு package.

Q

உங்கள் macro ஆசை - 2020ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிட வேண்டும் என்பது. micro ஆசை -ஆசிரியர் வேலை பார்த்துக்கொண்டு, கடற்கரையோரம் ஒரு சிறிய வீட்டில் வசிப்பது - என்று கேள்விப்பட்டேன். இது நிஜமா?

A

ஆசிரியர் தொழிலை நாள் நேசிப்பது உண்மைதான். கடற்கரை அருகே சிறிய வீடு வேண்டும் என்று எண்ணியதில்லை. ஆனால், அப்படி அமைந்தால் சந்தோஷமாய்த்தான் இருக்கும்.

Q

உங்களையே நீங்கள் விமர்சிக்க முடியுமா?

A

எப்போதும் நல்ல மனுஷனாய் வாழ வேண்டும் என்பது என் ஆசை, அதற்கான முயற்சிகளை நான் எப்போதும் நிறுத்துவதில்லை.

Q

ஜனாதிபதி மாளிகையில் ஒரு Official Hostess இல்லாதது உங்களுக்குச் சிரமமாய் இருக்கிறதா?

A

இப்போது நீங்கள் என்னோடு சாப்பிடப் போகிறீர்கள். அதிகாரபூர்வமான எஜமானி இல்லாதது குறையாகத் தெரிகிறதா, இல்லையா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்...

எழுந்து சாப்பிடப் போகிறோம். மொகல் தோட்டத்தைப் பார்த்தபடி சாப்பாட்டு மேஜை. நாலு வகைப் பொரியல், அவியல், சப்பாத்தி, சாதம், முருங்கைக்காய் சாம்பார், ரசம், தயிர், பால் பாயசம் என்று வெகு நேர்த்தியாய்த் தயாரிக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன.

“சாம்பார் நல்லா இருக்கு... சாப்பிடுங்க." என்று ஜனாதிபதி உபசரிக்க, சாப்பிடுகிறேன்.

"மொகல் தோட்டத்தைப் பார்த்தபடி நீங்கள் சாப்பிட வேண்டும் என்று மேஜையை நகர்த்திப் போட்டதிலிருந்து, 'மெனு' சொன்னதுவரை, அனைத்திலும் ஜனாதிபதிக்குப் பங்குண்டு. உங்களுக்காக விசேஷமாய் பால் பாயசம் தயாரிக்கச் சொல்லியிருக்கிறார்" என்று, கூட அமர்ந்து சாப்பிட்ட டாக்டர் ஏ. சிவதாணுப் பிள்ளை, DRDOவின் முக்கிய அதிகாரி, ஜனாதிபதியின் நண்பர் கூறும்போது, மனசு நெகிழ்ந்து போகிறது.

(பேட்டி நிறைந்தது)

logo
Kalki Online
kalkionline.com