சமூக   ஊடகங்களின் சமூகக் கடமை

சமூக   ஊடகங்களின் சமூகக் கடமை
Published on

ன்றைய உலகம் செய்திகளால் நிறைந்தது. விரல் நுனியில் விரிகிறது உலகம்  ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே  அதை உங்கள் கைபேசி சொல்லுகிறது.  அது தொடர்பான  தகவல்கள் உடனுக்குடன் கொட்டுகிறது. பல சமயங்களில் ஒரே செய்தி, வாட்ஸ்-அப், டிவிட்டர்,  பேஸ்புக் என  சில வினாடிகளில் பலருக்குப் பறக்கிறது.

தனக்கு  வந்த தகவலை அனுப்பியவர் யார், அது சரியாக இருக்குமா என்று எண்ணிப் பார்க்காமல், நண்பர்களுக்கு பகிர்பவர்கள் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.   பல சமயங்களில்  நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக இருக்கும் இந்தத் தகவல்களை தொலைக்காட்சி சானல்களும்  செய்திகளாகவே வெளியிடுகின்றன.

இதனால் சமூகத்தில் தேவையின்றி குழப்பங்கள், சர்ச்சைகள் பிரச்னைகள் எழுகின்றன. சமூகவலை தளங்களில் பரவும்  தகவல்களால் ஆட்சியாளர்களே மிரண்டு  போயிருக்கிறார்கள் என்பதின் வெளிப்பாடுதான் அண்மையில் சமூகவலைதளங்களுக்கு மத்திய அரசு  கொண்டுவந்திருக்கும் கட்டுப்பாடுகள். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் முதலில் பதிவு செய்பவர்களை கண்டறிந்து அதை 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். யார் பதிவு செய்தார்கள் என்பதை கண்டறியும் வசதியை ஏற்படுத்தி அவற்றை நீக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.   இதனால் மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிறுவனத்துக்கும் மோதல் கூட உருவானது.

அடுத்த கட்டமாக பிரஸ் கவுன்சில் கட்டுப்பாடு மற்றும் சட்டங்கள் சமூகவலைதளத்தில் செய்தி வெப்போர்ட்டல்களுக்கும், கேபிள் டிவி சட்டங்கள் சமூகவலைதள ஊடகத்துக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ.டி.டி, அமேசான், பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் சான்றிதழ்கள் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது இந்திய அரசியல் சாசனம் அளித்திருக்கும் கருத்துரிமைச் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு எதிரானது என்ற குரல்  எழுந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம். டிவிட்டரில் கருத்துவெளியிட்டதற்காக பத்திரிகையாளர் சமூக செயற்பாட்டாளர் மாணவ இயக்கத்தினர் தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டதாகக்  குற்றம் சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டது தான். “அரசியல் சாசனம் அளித்திருக்கும் கருத்து  சுதந்திரம் எனது உரிமை” என்று காதுக்கு கிடைத்த தகவல்களை எல்லாம் கற்பனை கலந்து சமூகவலைதளங்களில் வெளியிடுவது எவ்வளவு தவறோ, அதேபோல் அதை வெளியிட்டவர்களின் பின்னணியை சரிவர ஆராயாமல்   அரசு அவசரமாக அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்வதும் தவறு.

இன்றைக்கு உலகின் கண்களாகவும் காதுகளாகவுமிருக்கும் வலிமை வாய்ந்த சமூக ஊடக அங்கங்களை ஒரு ஜனநாயக நாட்டில் தடை செய்ய முடியாது. ஆனால்,  அது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இயங்குவதை தவிர்க்க முடியும். அதை வெறும் சட்ட விதிகளால் செய்துவிட முடியாது.  தனி மனித சுதந்திரத்திற்கும் சமூகப்பொறுப்புக்கும் உள்ள வேறுபாட்டை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதை அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் செய்ய வேண்டும்

இந்தக் கட்டுபாடுகள் இருபுறமும்  நன்கு தீட்டபட்ட கூரான கத்தியைப் போன்றது. இந்தக் கத்தியைப் பயன் படுத்தி ஆட்சி செய்வோரால் வதந்திகளைப் பரப்பி மக்களிடையே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வக்கிரம நெட்டிசன்களை களையவும் முடியும். தங்கள் கருத்துக்களை ஏற்காமல் மாற்று கருத்துச் சொல்பவர்களை  எளிதாக களையவும் முடியும்.

அது அந்தக் கத்தியை கையில் வைத்திருப்பவர்களின் சீர் தூக்கிப் பார்க்கும் திறனையும் கண்ணியத்தையும் பொறுத்தது.

அத்தகையோரிடம் மட்டுமே  அந்த கத்தியைக்கொடுக்கவேண்டியது மக்களின் கடமை!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com