பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்குக் கவிதாஞ்சலி!

நான்கு மொழிகளில் 400 படங்களை கடந்து சாதனை படைத்த பழம்பெரும் நடிகைக்கு கவிதாஞ்சலி!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி
Updated on
Kalki Strip
Kalki Strip

காவியத் தலைவிக்குக் கவிதாஞ்சலி!

தொண்ணூற்று நான்குவரை 

சுவைபட வாழ்ந்தவரே!

நானூறு திரைப்படங்களில் 

நடித்து உயர்ந்தவரே!

முன்னூறு நாடகங்களில் 

முத்திரை பதித்தவரே!

தென்னக மொழிகளிலே

சிறந்து வாழ்ந்தவரே!

தெலுங்கில் தேன்தமிழில் 

தெவிட்டாத மலையாளத்தில் 

காந்தக் கன்னடத்தில் 

கதாநாயகியாய் நின்றவரே!

பிந்தைய தலைமுறைக்கும் 

பிறழாத நல்நடிப்பைக்

கொடுத்து வாழ்ந்தவரே!

குவலயத்தில் சிறந்தவரே!

இளவல் கிருஷ்ணகுமாரியும் 

எழிலான வைஷ்ணவியும் 

உங்கள் வழிநின்றே

உதிர்த்தனர் நல்நடிப்பை!

இருகோடுகள் திரைப்படத்தில் 

இமயமாய் உயர்ந்துநின்றீர்!

‘லைப்’க்கும் ‘பைல்’க்கும் 

நல்லர்த்தம் கற்பித்தீர்!

புதிய பறவையிலே

புளகாங்கிதம் பெறச் செய்தீர்!

நீர்க்குமிழி எதிர்நீச்சல் 

காவியத் தலைவியென்று 

எத்தனையோ படங்களிலே 

இறவாத நல்நடிப்பை

எம்முன்னே வைத்து

எம்முளத்தில் இடம் பிடித்தீர்!

ஆங்கிலத்தின் உச்சரிப்பை

அகிலமும் மறக்காதே!

பத்மஶ்ரீ முதற்கொண்டு 

பலநல்ல விருதுகளை

அள்ளிவந்த நாட்களெல்லாம் 

ஆனந்தத் திருநாட்கள்!

நூறினைத்தாண்டி நீங்கள்

நுண்மான்நுழை புலத்தோடு 

நிற்பீர்கள் என்றே

நின்றிருந்த வேளையிலே

இரக்கமில்லா எமனும் 

இடையில் புகுந்தானோ?

ஆறாண்டுகளே குறைவான

அற்புத நேரத்தில் 

சித்திரகுப்தனும் கணக்கை

முந்திரிக்கொட்டை அவசரத்தில்

முடித்தே வைத்தானோ?

ஆனாலும் நீங்கள்

அதற்கு முன்னாலே

சாதித்து விட்டீர்கள்!

சரித்திரத்தில் இடம்பிடித்தீர்!

பாரதி ராஜா 

பாக்கிய ராஜாவோடு

இணைந்து ஒருபடத்தை

எடுத்தே எமனையும் 

அசத்தி விடுங்கள்

அங்குள்ள அனைவருமே

ஆனந்தத்தில் திளைத்திடவே!

சரித்திர நாயகர்கள்

சாவதில்லை எந்நாளும்!

இதையும் படியுங்கள்:
ஒரு கதை - ஒரு கவிதை - ஒரு கதைக்கவிதை!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி

திரைப்பட நாயகிகள்

உருவால் குரலால் 

ஒவ்வொரு நாளுமே

ரசிகர்கள் கண்களிலே 

நின்றே இலங்கிடுவர்!

மரணமில்லாப் பெருவாழ்வு

முழுதாய் அவர்களுக்கே

முகிழ்க்கும் உலகினிலே!

உங்களுக்கும் மரணமில்லை

ஒருநாளும் அழிவில்லை!

நின்று நிலைத்திடுவீர் 

நீளுலகில் புகழுடம்பில்!

logo
Kalki Online
kalkionline.com