வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விடியோ வெளியானது தேசத்தையே உலுக்கியுள்ளது. இந்த விடியோ வெளியானதை அடுத்து இது நாட்டுக்கே அவமானம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அளிக்கும் இந்த விடியோ வெளியானதை அடுத்து உச்சநீதிமன்றம், இது விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டிக்காவிட்டால் நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என்று எச்சரித்தது. வன்முறைக்கு பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. இத்தகைய செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த இரண்டரை மாதங்களாகவே மணிப்பூர் கொந்தளிப்பான நிலை இருந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் சமூகத்தினர் 53 சதவீதம் பேர் உள்ளனர். குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று மெய்டீஸ் இனமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக உருவெடுத்தது. கடந்த மே 3 ஆம் தேதி நடந்த வன்முறைக்கு 120-க்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஏறக்குறையை 40,000 பேர் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை நடந்து 70 நாட்களுக்கு மேலாகியும் அங்கு அமைதி ஏற்படுவதாகத் தெரியவில்லை. மணிப்பூரில் பிரச்னையை சரிவர கையாள மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.
இந்த நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் சமீபத்தில் வெளியானது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடி, இந்த சம்பவம் இதயத்தை நொறுக்கிவிட்டது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
வன்முறைச் சம்பவம் நடந்து 70 நாட்களுக்கு பிறகு முதன் முறையாக பிரதமர் வாய் திறந்து பேசியுள்ளார். நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பீரேன் சிங் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஹீராதாஸ் உள்பட 6 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மணிப்பூர் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி, இதுகுறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மணிப்பூர் சம்பவத்துக்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும் தற்போதுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. மணிப்பூர் மாநிலம் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. அங்கு அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிலைமையை சரிவர கையாளாததுதான் நிலைமை மோசமானதற்கு காரணமாகும். பெண்களை காப்பற்ற முடியாதவர்கள் தேசத்தை எப்படி காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். மத்திய அரசின் முழு ஆதரவும் உள்ள பா.ஜ.க. ஆளும் மாநிலத்திலேயே நிலைமை இப்படி என்றால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். நாட்டை வழிநடத்திச் செல்ல சரியான தலைவர்கள் இல்லை என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் அமைதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கவும் முன்வர வேண்டும். இவையெல்லாவற்றையும்விட பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியமானது.
மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூர் விடியோ சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அமைச்சர்கள், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடக்கவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்திவிடாது.
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இனமோதல்கள் நீடித்து வருவதை பார்க்கும்போது அங்கு வெறுப்பு அரசியல் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
மாநில முதல்வரை மாற்றுவது, உச்சநீதிமன்றம் தலைமையிலான மேற்பார்வை மூலம் புலன் விசாரணை நடத்துவது, பாதுகாப்புக்கு பெருமளவில் ராணுவத்தை அனுப்புவது ஆகியவற்றின் மூலம் தான் மக்களின் நம்பிக்கையை பெறமுடியும்.