சிறுகதை - கொட்டிய ஜூஸீம் சிதறிய கைபேசியும்!

ஓவியம்; பிரபுராம்
ஓவியம்; பிரபுராம்
Published on

"தம்பி! அங்க போறான் பாத்தீங்களா? அவனால எனக்கு ஒரு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம்" என்றார் அருகில் இருந்த ஆசாமி.

அவர் கைக்காட்டிய திசையில் , வயதில் சிறிய ஒரு ஆசாமி பழரசங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தான். ஐயப்ப பக்தரைப் போல் காவி வேட்டியை அணிந்து , மேலும்  வேட்டியை மடித்துக் கட்டியபடி கைகளில் ஒரு பெரிய வட்டத்தட்டை ஏந்திய படி பழரசங்கள் நிரப்பப்பட்ட காகித கோப்பைகளை அங்கங்கு விநியோகம் செய்து கொண்டிருந்தான். அவனது முகத்தில் அமைதி தாண்டவமாடியது. இவரை அவன் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. கண்டும் காணாதது போல் இருந்தானா என்றும் தெரியவில்லை.

ஒரு கல்யாணத்தில் எனது அருகே இருந்த அந்த நபரை அப்போதுதான் கவனித்தேன். பார்க்க வாட்டசாட்டமாக ஆறடி உயரத்திலிருந்தார். அவரது நெற்றியில் ஒரு பெரிய சந்தனப் பொட்டிருந்தது அதன் நடுநாயகமாக ஒரு குங்குமப் பொட்டு இருந்தது. கொஞ்சம் அருகில் இருந்து பார்த்தால் போக்குவரத்து விளக்கு போல் நிறுத்து என்று சொல்வதைப் போன்று வெளிர் சிவப்பு நிறத்தில் இருந்தது. கட்டையான கயிறு மீசை வைத்திருந்தார். பார்த்தால் இராணுவத்தில் வேலை செய்து கொண்டு விடுப்பிற்கு கல்யாணத்திற்கு வந்ததைப் போல் இருந்தார். 

"தம்பி! என்ன பேசவே மாட்டேங்கிறீங்க! நீங்க பையனுக்கு சொந்தமா? பொண்ணுக்கு சொந்தமா?" என்றார் அந்த ஆசாமி.

"பையனுக்குத்தான் சொந்தம். பையன் என்னோட அத்தைப் பையன்" என்றேன் நான். 

"சரி. நீங்க என்னமோ அம்பதாயிரம் ரூபாய் நஷ்டம்னு சொன்னிங்களே? என்ன விஷயம் சார்? வருத்தப்பட்டு சொன்னீங்க. முழுசா சொல்லுங்க." என்றேன் நான்.

"தம்பி! அதப்பத்தி அப்புறமா விவரமா சொல்றேன். அவன் ஒரு டேஞ்ஜரஸ் பெல்லோ" என்றார் அவர். "தம்பி! உங்க பேரு என்ன? என்ன வேலை பாக்குறீங்க?"

"பேரு நாராயணன். நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன்" என்றேன் நான்.

"தம்பி! என் பேரு சுப்பிரமணியன். நான் சொந்தமா மளிகைக் கடை வச்சிருக்கேன். நான் பொண்ணுக்கு சொந்தம்" என்றார் சுப்பிரமணியன்.

"தம்பி! உங்களுக்கு சம்பளம் ஒரு 50,000 இருக்குமா?" என்றார் சுப்பிரமணியன்.

"கிட்டத்தட்ட இருக்கும் சார்" என்றேன் நான்.

"என் மளிகைக் கடையில சம்பளம் எல்லாம் கொடுக்க போக, அவ்வளவுதான் நிக்குது தம்பி. என்னோட ஒரு மாசப் பணம் போயிடுச்சு தம்பி அவனால" என்றார் சுப்பிரமணியன்.

"அவர் உங்க கடையில் வேலை பார்த்தவரா? எதாவது தப்பு பண்ணிட்டாரா ? உங்களுக்கு நஷ்டமாயிடுச்சா?" என்றேன் நான்.

"இல்ல தம்பி. அவனை எனக்கு முன்ன பின்ன தெரியாது. அவனை இன்னிக்கு தான் இரண்டாவது தடவையா பார்க்கிறேன்" என்றார் சுப்பிரமணியன்.

அப்போது எனக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிய உடன் எனது கால் சராயின் பாக்கெட்டில் வைக்கப் போனேன். 

"சரி. இப்பவாவது சொல்லுங்க. அவரால உங்களுக்கு எப்படி ஐம்பதாயிரம் ரூபாய் போச்சு?"என்றேன் நான்.

"அது பெரிய கதை தம்பி. அத அப்புறம் சொல்றேன்"என்றார் சுப்பிரமணியன்.

"தம்பி உங்க போன் பாக்க புதுசா இருக்கு. எப்ப வாங்கினீங்க?"என்றார் சுப்ரமணியன். 

"இப்பதான் ஒரு வாரம் ஆச்சு" என்றேன் நான்.

"என்ன கம்பெனி? ஆண்ட்ராய்டா,  ஐ போனா?" 

"ஆண்ட்ராய்டு. சாம்சங்"

"நல்லா வேலை செய்யுதா? கேமரா நல்லா இருக்கா?"

"நல்லா இருக்கு" 

"குடுங்க பார்க்கிறேன். நான் கூட இந்த மாதிரி ஒன்னு வாங்கலாம்னு பாத்துட்டு இருக்கேன்" 

நான் சுப்பிரமணியனிடம் எனது கைப்பேசியை கொடுத்தேன். 

இதையும் படியுங்கள்:
இந்தக் கலைக்கு இத்தனை சிறப்பா?
ஓவியம்; பிரபுராம்

"தம்பி. அன்லாக் பண்ணிட்டு குடுங்க. உள்ள எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்க வேண்டாமா? அப்பதான் இதே மாதிரி நானும் வாங்கலாமான்னு பார்க்க முடியும்" என்றார் சுப்ரமணியன்.

நான் கைப்பேசியின் பூட்டை எடுத்து விட்டு அவரிடம் கொடுத்தேன். அவர் அதை அங்கங்கு அழுத்தி ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பழரச ஆசாமி எங்கள் அருகே நெருங்கினான். எங்களது அருகே தட்டை நீட்டி பழரசத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டான். அப்போதும் அவனது முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்தான். நான் சுப்ரமணியனைப் பார்த்தபோது அவரது கண்களில் சற்று கோபத்தை பார்த்தேன். 

நான் பழரசக் கோப்பையை எடுத்துக் கொண்டேன். அப்பொழுது சுப்ரமணியனும் ஒரு பழரசக் கோப்பையை எடுத்தப்போது, அவன்  தட்டை நகர்த்தினான். அப்பொழுது பழரசமானது அவர் கையில் இருந்து நழுவி அவரது வேட்டியில் கொட்டியது.

"போன வாரம்தான் கல்யாண வீட்டில ஜூஸ என் மேல கொட்டாதன்னு சொன்னேன்ல.திருத்திகவே மாட்டியா?  டேய். என்ன நீ மறுபடியும் கோபப்படுத்திட்ட. " என்றார் சுப்பிரமணியன்.‌

நான் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் சுப்பிரமணியன் தனது கையில் இருந்த எனது கைப்பேசியைச் சிதறு தேங்காய் உடைப்பது போல் படார் என்று தரையில் ஓங்கி வீசி உடைத்தார். அது சுக்கு நூறாக உடைந்தது.

"தம்பி. இதே மாதிரி தான் போன வாரம் எங்க பெரியப்பா பேத்தி கல்யாணத்துல என் மேல ஜூஸ் கொட்டி என்ன கோபப்படுத்தி என் செல்போனை கோபத்துல உடைக்கிற மாதிரி ஆயிடுச்சு. என்னோட பணம் அம்பதாயிரம் ரூபாய் போச்சு தம்பி. இன்னும் இவன் திருந்தல" என்றார் சுப்பிரமணியன்.

கீழே விழுந்து சிதறி இருந்த எனது கைப்பேசியை எடுக்க அந்த அமைதியான மனிதன் குனிந்து உதவி செய்ய முயன்ற போது அதற்குள் அவனது மேலாளர் அவனை அவசரமாக பழரசத்தை விநியோகிக்க அழைத்தார். அவன் விர்ர் என்று மேலாளரை நோக்கி நகர்ந்து விட்டான். அவன் முகம் அமைதியாக சலனமின்றி இருந்தது.

"தம்பி. நான் சொன்னேன்ல. அவனால எனக்கு அம்பதாயிரம் ரூபா நஷ்டம். உங்களுக்கும் அம்பதாயிரம் இப்ப நஷ்டம். உங்க போனும் அம்பதாயிரம் ரூபா இருக்குமில்லையா?" என்றார் சுப்பிரமணியன்.

என் கண் முன்னாடி சிதறிக் கிடந்த கைப்பேசியின் சுக்கல்கள் ’’என்னய்யா, என் மதிப்பு அம்பதாயிரம்தான் இருக்குமா? என்று என்னைப் பார்த்து ஏளனத்துடன் கேட்பது போன்று ஒரு வினாடி என் மனதில் தோன்றி மறைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com