* சிறுகதை – ‘துணை வளைகாப்பு’ – தேவிபாலா!

ஓவியம்: வேதா
ஓவியம்: வேதா

காலையில் வசுமதி கண் விழித்ததும், காலிங் பெல் அடித்தது. அம்மா ராஜம் போய் கதவை திறந்தாள். வெற்றிலை பாக்கு பழங்கள் என தாம்பூல தட்டுடன் ஒரு தம்பதி வாசலில் நிற்க, ராஜம் கடுப்பாகி விட்டாள்.

“வசுமதி இல்லையா?”

கேட்ட நொடியில் வசு வேகமாக வெளியே வந்தாள்.

“வாங்க. ஒக்காருங்க.!”

“இருக்கட்டும்மா. காயத்ரிக்கு நாளைக்கு வளைகாப்பு. காலைல அஞ்சு மணிக்கு வளையல் போடறோம். துணை வளைகாப்புக்கு நீதான்மா ஒக்காரணும். இதை வாங்கிக்கோ. உனக்கான மற்ற மரியாதைகளை சபைல செய்யறோம்.!”

“நிச்சயமா வர்றேன்!”

அவர்கள் போனதும் அம்மா ராஜம் கோபமாக கதவை சாத்தினாள்.

“ துணை வளைகாப்புக்கு போறதை நீ நிறுத்த மாட்டியா?”

“எதுக்கும்மா நிறுத்தணும்? என்னை தேடி வந்து அழைச்சு மரியாதை செய்யும் போது, நான் ஏன்மா அதை மறுக்கணும்?”

வசுமதிக்கு கல்யாணம் முடிந்து ஒன்பது வருஷங்கள் ஆகி விட்டது. கணவர் பாஸ்கர் நல்ல வேலையில். ஆனால் குழந்தைகள் இல்லை. போகாத கோயில் இல்லை. பார்க்காத டாக்டர் இல்லை. குழந்தை பாக்யம் கிட்டவில்லை. முதலில் சில வளைகாப்புகளுக்கு அவளை மாற்று மணையில் உட்கார வைத்தார்கள். அதை தொடர்ந்து அந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் அமைய, நாளா வட்டத்தில் வசுமதி மாற்று மணையில் அமர்ந்தால், அது ராசி என பேர் வர, உள்ளூர் தாண்டி வெளியூர்களிலும் இது பரவ, வசுவுக்கு மார்க்கெட் ஏறி விட்டது.

அவளுக்கும் வளையல் போட்டு, தாம்பூலம், சேலை என மரியாதை செய்து ஆயிரம் ரூபாய் பணமும் தர, வசுமதிக்கு இது உற்சாகமாக, இன்று ஆயிரம் ஐந்தாயிரமாக உயர, குழந்தை வேண்டி பலர் ஏங்க, வசுமதி மாற்று மணையில் உட்கார்ந்தால் பத்தாயிரம் கூட தரத்தயாராக இருந்தார்கள். மாதம் ஆறு புக்கிங் குறைந்த பட்சம் வர, ஆன் லைனில் வசுவை பதிவு செய்ய, அவளது தேதி கேட்டு கர்ப்பிணி பெண்களின் பெற்றோர் நின்றார்கள். இது பற்றி யூ ட்யூபில் பதிவும், சமூக வலை தளத்தில் வசுமதி பற்றிய பதிவு, நேர் காணல் என நிறைய வந்து, வசு மாற்று மணையில் உட்காரும் வளைகாப்புகளை கவர் செய்ய, காமிராவும் கையுமாக வந்து நின்றார்கள். இது வசு உட்காரும் நூறாவது வளைகாப்பு என கணக்கிட தொடங்கி விட்டார்கள்.

“வளைகாப்பு வசுமதி” என்ற பட்டம் வேறு.

அம்மாவுக்கு சுத்தமாக இது பிடிக்கவில்லை.

“ அம்மா! நான் இதுல சராசரியா மாசம் அறுபதாயிரம் சம்பாதிக்கறேன். அவருக்கு கார் வாங்கி தந்தாச்சு. என் ராசியை நான் காசாக்கறேன். என்ன தப்பு? குழந்தையில்லாத என்னை யாரும் மலடின்னு பேசலை. நான் பக்கத்துல ஒக்காந்து, வளையல் போட்டுக்கிட்ட அத்தனை பெண்களும் குழந்தையோட ஆரோக்யமா இருக்காங்க. என் ராசி உலகம் முழுக்க பேசப்படுது. அப்புறமா என்னம்மா?”

இதோ வசு புறப்பட்டு விட்டாள். அவளுக்கு தலை சுற்றியது. வாந்தி வருவது போல இருந்தது. உள்ளே போய் வாந்தி எடுத்தாள். அம்மா வந்து கேட்க, நேற்று சாப்பிட்ட பஜ்ஜி சரியில்லை என்றாள்.

“ அதானே பார்த்தேன். ஒன்பது வருஷமா வராத குழந்தை இப்ப வந்துட போகுதா?”

ஆனால் நாள் தள்ளியிருப்பது வசுவுக்கு தெரிந்தது. நாற்பது நாட்களை கடந்து விட்டது. வளை காப்புக்கு நேரமாகி விட்டதால் புறப்பட்டாள் அவசரமாக. அங்கே போய் வளைகாப்பு நல்லபடியாக முடிந்து, தட்சணையாக பத்தாயிரம் பணமும், சேலையும் கிடைக்க, சாப்பிட அழைத்தார்கள். யாரோ பேசுவது வசுவின் காதில் விழுந்தது.

“ஒரு கர்ப்பிணியை துணை வளைகாப்புக்கு ஒக்கார வைக்க மாட்டாங்களா?”

“இல்லைம்மா. துணை வளைகாப்புல ஒக்காரக்கூடிய பெண்கள், அந்த ராசில கர்ப்பம் ஆவாங்கனு சொல்லுவாங்க.!”

“நூறு முறை மாற்று மணைல ஒக்காந்த வசுமதி, ஏன் கர்ப்பம் தரிக்கலை?”

இதையும் படியுங்கள்:
'மசாலா’ என்ற சொல் எப்படிப் பிறந்தது தெரியுமா?
ஓவியம்: வேதா

“அவ ராசி, அவ ஒக்காந்தா, வளைகாப்புல உள்ள கர்ப்பிணிகளுக்கு ராசியா இருக்கே. அதனால இவ கர்ப்பமாக கூடாதுன்னு வேண்டிக்கிறவங்க நிறைய!”

சுருக்கென்றது வசுமதிக்கு. நான் கர்ப்பம் தரிக்காமல் இருக்க இது தான் காரணமா? பல பேரின் சாபமா?”

நேராக டாக்டரிடம் வந்தாள். சிறுநீர் பரிசோதனை நடக்க, கர்ப்பம் உறுதியானது.

“ இனி மாற்று மணையில் நான் உட்கார முடியாது. வருமானம் போகும். அய்யோ இவ கர்ப்பமாயிட்டாளே என பல பேர் ஆவேசப்படுவார்கள். சாபம் உட்பட தருவார்கள். அந்த பெருமூச்சில் என் குழந்தை வளர வேண்டுமா?”

“ டாக்டர்! இந்த கர்ப்பம் எனக்கு வேண்டாம். கலைச்சிடுங்க.!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com