ஊமை டீச்சர், கதை: ராஜேஷ்குமார், முடிவு: ராஜேஷ்குமார்

ஊமை டீச்சர், கதை: ராஜேஷ்குமார், முடிவு: ராஜேஷ்குமார்
ஓவியம்: தமிழ்
Published on

‘ஊமை டீச்சர்’ என்ற இந்த கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த கதைக்கு ராஜேஷ்குமாரின் முடிவு என்னவென்று கேட்டு நிறைய மின்னஞ்சல்களும் குறுந்தகவல்களும் வாசக நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றோம். அவர்களுக்காகவே  ‘ஊமை டீச்சர்’ கதைக்கான தன்னுடைய முடிவை ராஜேஷ்குமார் அவர்கள் இங்கு பதிவு செய்கிறார்.

“அய்யா!”

குரல் கேட்டு படித்துக் கொண்டிருந்த நாளிதழினின்றும் தலையை உயர்த்தினார் எழுபது வயது நிரம்பிய பெரியவர் சாம்பசிவம்.

அறையின் கதவருகே வேணி நின்றிருந்தாள். முகம் முழுக்க நிறைய கவலை பரவியிருக்க, உடுத்தியிருந்த சேலையிலும், இடது, வலது, முழங்கைகளிலும் காய்ந்து போன மாட்டுச் சாணத் தீற்றல்கள் தெரிந்தன.

சாம்பசிவம் புன்னகையோடு அவளைப் பார்த்தபடி கேட்டார்.

“என்ன வேணி… அந்த சின்ன கோசாலையை சுத்தம் பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன்யா.”

“சரி, சாயந்தரமா வந்து கூலியை வாங்கிக்க. பணம் கொடுக்கிற அக்கவுண்ட்டண்ட் வெளியே ஒரு வேலைக்கு போயிருக்கிறார். மத்தியானம் ரெண்டு மணிக்கு மேல்தான் வருவார்.”

‘சரி’ என்பது போல் தலையசைத்த வேணி அங்கிருந்து நகராமல் மறுபடியும் “அய்யா” என்று சொல்லி குரலை இழுத்தாள்.

சாம்பசிவம் நரையோடிய தன் புருவங்களை சற்றே வியப்பில் உயர்த்தினார்.

“என்ன வேணி?”

“அய்யா… நேத்து மத்தியானத்திலிருந்து நம்ம லட்சுமி ஒண்ணுமே சாப்பிடலை. சோர்வா படுத்துட்டே இருக்கு.”

“அப்படியா… நேத்திக்கு அதுக்கு என்ன தீவனம் வெச்சே..?”

“மத்தியானம் வைக்கோலும், கோதுமைத்தவிடும் போட்டேன்… ஒரு வாய் கூட சாப்பிடலைங்கய்யா.”

சாம்பசிவம் சிரித்துவிட்டு சொன்னார்.

“லட்சுமியைப் பத்தி உனக்கு சரியா தெரியலை வேணி! அதுக்கு எள்ளுப் புண்ணாக்கும், துவரம் பருப்பும், உளுத்தம் பருப்பும் கலந்த தீவனத்தைத்தான் வெக்கணும்… இப்ப போய் வெச்சுப் பாரு… அஞ்சு நிமிஷத்துல எல்லாத்தையும் காலி பண்ணிடும்.”

சாம்பசிவம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோசாலையின் முகப்பில் இருந்த போர்டிகோவில் அந்த ‘நெக்ஸா’ கார் க்ரே நிற உடம்போடு பளபளப்பாய் வந்து நின்றது.

“அய்யா… யாரோ வர்றாங்க போலிருக்கு…” சொன்ன வேணி சட்டென்று அந்த இடத்தைவிட்டு, நகர்ந்து போய்விட சாம்பசிவம் உட்கார்ந்த நிலையிலேயே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

காரினின்றும் இரண்டு பேர் இறங்கி படிகள் ஏறி உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் வயதானவர். இன்னொரு நபர் இளைஞன். முப்பது வயதுக்குள் இருக்கலாம். இருவருமே நல்ல உடல்வாகோடு இருந்தார்கள். கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலிகள் மினுமினுப்போடு புரண்டன.

“யார் இவர்கள்?” சாம்பசிவம் தன்னுடைய முன் வழுக்கையை வருடியபடியே யோசிக்க, அவர்கள் அறைக்குள் நுழைந்தார்கள். ஒரு சேர கைகளைக் குவித்தார்கள்.

“அய்யா வணக்கம்.”

பதிலுக்கு ‘வணக்கம்’ சொன்ன சாம்பசிவம் தனக்கு எதிரேயிருந்த நாற்காலிகளைக் காட்டினார்.

“உட்காருங்க.”

அவர்கள் உட்கார்ந்ததும் கேட்டார்.

“நீங்க யார்ன்னு தெரியலையே?”

இளைஞன் சொன்னான்.

“அய்யா..! என் பேரு விமல்ராஜ், இவர் என்னோட அப்பா; பேரு மருதமுத்து. நாங்க ரெண்டு பேரும் பாலக்காட்டுல ‘பெஸ்ட் கேட்டில் ஃபீட்’ என்கிற பேர்ல கால்நடை தீவனங்களுக்கான கம்பெனி ஒண்ணை ஆரம்பிச்சு நடத்திட்டு வர்றோம். அஞ்சு வருஷமாச்சு.”

“அப்படியா… ரொம்ப சந்தோஷம்… உங்க கம்பெனியில மாடுகளுக்கு எது மாதிரியான தீவனங்களை தயாரிக்கறீங்க?”

“அய்யா..! நாங்க எல்லாவகையான கால்நடைத்தீவனங்களையும் தயாரிக்கறோம். குறிப்பா மக்காச்சோளம், ஓட்ஸ், பார்லி மாதிரியான தானியங்களை பயன்படுத்தி தரமான உணவுக் கலவையை தயார் பண்றோம். கேரளா பூராவும் சப்ளை பண்றோம்.”

“கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு. நான் நடத்திட்டு வர்ற இந்த காமதேனு கோசாலையில் ஆயிரம் பசு மாடு, அறுநூறு காளை மாடு, இருநூறு கன்னுக்குட்டி இருக்கு. அதையெல்லாம் நல்லமுறையில் பராமரிச்சுட்டு வர்றோம். அதுக்கான தீவனங்களை நாங்களே தயார் பண்ணிக்கிறோம். மொத்தம் 29 ஷெட். ஐம்பது பேர் வேலை பார்க்கிறாங்க… நாங்க வெளியிலிருந்து கால்நடைத்தீவனம் வாங்கறது இல்லை..!”

விமல்ராஜின் அப்பா மருதமுத்து மெல்லச் சிரித்துவிட்டு சொன்னார்.

“அய்யா மன்னிக்கணும்… நானும் என் மகனும், உங்ககிட்ட மாட்டுத்தீவன வியாபாரத்தைப் பத்தி பேசறதுக்காக வரலை. நாங்க வந்தது வேற ஒரு விஷயத்துக்காக.”

“அப்படியா சரி… சொல்லுங்க என்ன விஷயம்?”

விமல்ராஜ் பேசுவதற்கு தயங்க, மருதமுத்து மெலிதான குரலில் பேச்சை ஆரம்பித்தார்.

“அய்யா… கடந்த ரெண்டு வருஷ காலமாய் நாங்க இந்த மாட்டுத்தீவன பிசினஸோடு, இன்னொரு பிசினஸையும் ஆரம்பிச்சு நடத்திட்டு வற்றோம்… அதை உங்ககிட்ட சொல்றதுக்கு ஒரு மாதிரியா இருக்கு. இருந்தாலும் சொல்லியாகணும்.”

சாம்பசிவம் முகம் லேசாய் மாறியது.

“அப்படியென்ன பிசினஸ் பண்றீங்க?”

“அது வந்து… துடியலூர் சந்தைக்கு வர்ற அடி மாடுகளை விலைக்கு வாங்கி, கேரளா ஸ்டேட்ல இருக்கிற முக்கியமான ஊர்களுக்கு சப்ளை பண்றோம்… மொதல்ல ரொம்பவும் லாபகரமா போயிட்டிருந்த அந்த பிசினஸ் இப்ப பயங்கர டல். மாட்டுத்தீவன பிசினஸ்லேயும் அவ்வளவு பெரிய லாபமில்லை.”

அதுவரைக்கும் மென்மையாய் பேசிக் கொண்டிருந்த சாம்பசிவம் சற்றே குரலை உயர்த்தினார்.

“நீங்க இப்ப பேசின விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”

“சம்பந்தம் இருக்கய்யா… அதனாலதானே நாங்க இங்கே வந்து, உங்க முன்னாடி உட்கார்ந்துட்டிருக்கோம். கடந்த ஒரு வருஷ காலமாகவே துடியலூர் சந்தைக்கு அடிமாடா வர்ற எல்லா மாடுகளையும் நீங்களே விலைக்கு வாங்கி, உங்க கோசாலைக்கு கொண்டு வந்து அதையெல்லாம் பராமரிக்கிறதாய் கேள்விப்பட்டோம். நீங்க இப்படி பண்ணினா அது நாங்க பண்ணிட்டிருக்கிற தொழிலுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும்ன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“நான் அந்த அடிமாடுகளை வாங்கறதால உங்களுக்கு என்ன பாதிப்பு?”

“போன வருஷம் வரைக்கும் நாங்க அடிமாடுகளை விக்கிற அந்த வியாபாரிகளிடமிருந்து, ரொம்பவும் குறைஞ்ச விலைக்கு வாங்கி, நல்ல விலைக்கு வெளியே வித்து, கணிசமான லாபத்தைப் பார்த்துட்டு இருந்தோம். ஆனா நீங்க இப்ப அந்த சந்தைக்குப் போய் அங்கே விக்கிற அடிமாடுகளுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிடறதனாலே எங்களால வாங்க முடியறதில்லை.”

சாம்பசிவம் சிரித்தார்.

“ஏன் நீங்களும் நல்ல விலை குடுத்து மாடுகளை வாங்க வேண்டியதுதானே?”

“உங்க அளவுக்கு விலை குடுத்து வாங்கி அதை வெளியே விற்க முடியாது. அப்படியே வித்தாலும் லாபம் பார்க்க முடியாது.”

“அதுக்கு நானென்ன பண்ண முடியும்?”

“நீங்க இனிமே எந்த மாட்டுச் சந்தைக்கும் போய் மாடுகளை வாங்கக் கூடாது.”

“என்ன மிரட்டல் மாதிரி தெரியுது?”

“மிரட்டலேதான்… எங்க தொழிலுக்கு ஒரு பாதிப்புன்னா நாங்க சும்மா இருப்போமா?”

சாம்பசிவம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் மெளனமாய் இருக்க மருதமுத்து சீறினார்.

“இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?”

“நிறைய அர்த்தம் இருக்கு… நீங்க ரெண்டு பேரும் இந்த வயதான அடிமாடுகள் விஷயத்தை ஒரு வியாபாரமா பார்க்கறீங்க. நான் அதை ஒரு புண்ணிய காரியமா பார்க்கிறேன். என்னோட தாத்தா காலத்திலிருந்தே இந்த கோசாலை இருக்கு. அப்ப ரெண்டு ஏக்கர் நிலத்துல ஒரு சிறிய அளவில் இருந்த கோசாலை இன்னிக்கு நாற்பது ஏக்கர் பரப்பளவில் பரவி, ஒரு புண்ணிய இடமா மாறியிருக்கு. ஒவ்வொரு மாட்டுப் பொங்கல் அன்னிக்கும் கோமாதா பூஜை பண்ணுவோம். அன்னிக்கு இந்த இடமே ஒரு திருவிழா மாதிரி இருக்கும். பக்கத்து ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கில் ஜனங்க வருவாங்க. அவங்க எல்லாருமே இந்த கோசாலையை ஒரு கோயிலாத்தான் பார்ப்பாங்க.”

சாம்பசிவம் பேசிக் கொண்டிருக்கும்போதே விமல்ராஜ் கோபத்தோடு இடைமறித்தான். பேச்சில் மரியாதை காணாமல் போயிருந்தது.

“யோவ் பெரிசு… உன்னோட கோசாலையோட சுயபுராணத்தை இத்தோடு நிப்பாட்டிக்க. பால் வத்திப் போன பசு மாடுகளையும் வயசாகி தளர்ந்து போன காளை மாடுகளையும், பராமரிக்கிறது தேவையில்லாத ஒரு வேலை. அதுகளை வெட்டி கூறு போட்டு வித்தா, ஒரு ஊரே பசியாறும். இதுல பாவம் என்ன புண்ணியம் என்ன? நாங்க ரெண்டு வருஷமா இந்த வேலையைத்தான் பண்றோம். நிறைய சம்பாதிக்கிறோம். சம்பாதிச்ச பணத்தையெல்லாம் ரியல் எஸ்டேட் பிசினஸ்ல போட்டோம். அந்த பிசினஸிலேயும் ஒண்ணுக்கு பத்தாய் லாபம்… நீ நினைக்கிற மாதிரி இது பாவப்பட்ட தொழிலாய் இருந்தா எங்களுக்கு இந்த ராஜவாழ்க்கை கிடைச்சிருக்குமா என்ன?”

சாம்பசிவம் மையமாய் தலையை ஆட்டிவிட்டு ஒரு சிறிய சிரிப்போடு சொன்னார். “இன்னிக்கு நீங்க லட்சக்கணக்கில் பணம் சம்பாதிச்சு ஒரு ராஜ வாழ்க்கை வாழலாம். ஆனா காலம் ஒரு ஊமை டீச்சர். சரியான நேரம் வரும்போது அது பேசி நமக்கு பாடம் நடத்தும். உங்களுக்கும் அப்படியொரு நாள் வரும். இப்ப போயிட்டு வாங்க. நீங்க செய்யறது தொழில். நான் செய்யறது தொண்டு. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு.”

“இந்த தத்துவ பேச்செல்லாம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். நீ இனிமே எந்தச் சந்தைக்கும் போய் அடிமாடுகளை வாங்கக் கூடாது. மீறி வாங்கினா விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.”

“வேற மாதிரின்னா..?”

“நாங்க எதையுமே சொல்லமாட்டோம். செஞ்சுதான் காட்டுவோம்.”

“ரொம்ப நேரமா கத்தி கத்தி பேசிட்டிருக்கீங்க. கொஞ்சம் தண்ணி சாப்பிடறீங்களா?”

சாம்பசிவம் மேஜையின் மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க, மருதமுத்து அதை வாங்கி ஆவேசத்தோடு எறிய அது சுவரில்பட்டு தெறித்து விழுந்து உருண்டது.

“யோவ்..! இன்னும் ரெண்டு நாள்ல எங்களுக்கு பதில் வேணும். இல்லேன்னா இந்த கோசாலையை நடத்தறதுக்கு நீ உயிரோடு இருக்க மாட்டே!”

ஆட்காட்டி விரல்களைக் காட்டி எச்சரித்துவிட்டு இருவரும் கோபத்தோடு வெளியேறினார்கள்.

ந்த வியாழக்கிழமையின் விடியற்காலை மூன்று மணி.

நிசப்தமாய் இருந்த அந்த ஜி.ஹெச்சுக்குள் நுழைந்த போலீஸ் ஜீப் அரையிருட்டான பார்க்கிங்கில் போய் நின்று முகப்பு விளக்குகளை அணைத்துக் கொண்டது.

அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் பாலகுரு தூக்கம் கெட்ட கண்களோடு ஜீப்பினின்றும் இறங்க, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஒரு சல்யூட்டோடு எதிர் கொண்டார். “ஸார்.”

“என்ன ராஜேந்திரன்! நிலைமை எப்படியிருக்கு பெரியவர் பிழைப்பாரா?”

“சந்தேகம்தான் ஸார்… மொத்தம் எட்டு இடத்துல அரிவாள் வெட்டு விழுந்திருக்கு.. கழுத்துலதான் ஆழமான வெட்டு.”

“சம்பவத்துக்கு என்ன காரணம்?” பாலகுரு கேட்டுக் கொண்டே ஐ.ஸி யூனிட்டை நோக்கி நடந்தார்.

“துடியலூர் சந்தையில அடிமாடுகளை வாங்கற விஷயத்துல பிரச்னை ஏற்பட்டிருக்கு ஸார்.”

“எத்தனை பேரை அரஸ்ட் பண்ணியிருக்கீங்க?”

“ஆறு பேரு ஸார்… இன்னும் ரெண்டு பேரைத் தேடிட்டு இருக்கோம்.”

“சம்பவத்தைப் பார்த்த ‘ஐ விட்னஸ்’ இருக்காங்களா?”

“ஒரு பொண்ணு பார்த்திருக்கு ஸார்”

வராந்தாவில் வேக நடை போட்ட பாலகுரு ஹாஸ்பிடலின் ஐ.ஸி யூனிட்டை நெருங்கிய விநாடி, டாக்டர் தாமோதரன் களைத்து போன முகத்தோடு கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டார்.

“குட்மார்னிங் டாக்டர்… ஹெள ஈஸ் ஹி?” டாக்டர் பெருமூச்சோடு கைகளை விரித்தார்.

“ஸே பேட்மார்னிங். எவ்வளவோ முயற்சி பண்ணியும் பெரியவர் மருதமுத்துவைக் காப்பாத்த முடியலை. கும்பலா சேர்ந்து வெட்டியிருக்காங்க.”

“அவரோட பையன் விமல்ராஜோட நிலைமை இப்போ எப்படியிருக்கு?”

“உயிர்க்கு ஆபத்தில்லை. ஆனா முதுகு தண்டுவடத்துல அரிவாள் வெட்டு விழுந்ததால ‘எஸ். ஸி. ஐ’ங்கிற ஸ்பைனல்கார்ட் இன்ஜுரி பாதிப்பு ஏற்பட்டு இருக்கு. இந்த பாதிப்பு காரணமாய் பர்மனன்ட் பேராலிஸிஸ் ஆஃப் த மஸல்ஸ், லாஸ் ஆஃப் ஃபீலிங் இன் ஆல் ஆர்கன்ஸ் என்கிற நிலைமை உருவாகலாம். சுருக்கமா சொல்லப் போனா விமல்ராஜ்க்கு சுய நினைவு வரும். போகும். சுய நினைவு இருக்கிற நேரங்களில்  அவராலே சுண்டு விரலை கூட அசைக்க முடியாது. ஜஸ்ட் லைக் ஏ வெஜிடேட்டீவ் ஸ்டேஜ். டாக்டர்ஸ் ஆர் ஹெல்ப்லெஸ் இன் திஸ் ஸ்டேஜ்.”

டாக்டர் சொல்லிவிட்டு நகர்ந்து போய்விட பாலகுரு இன்ஸ்பெக்டரை ஏறிட்டார்.

“ராஜேந்திரன்…”

“ஸார்.”

“சந்தையில் அடிமாடுகளை வாங்கற விஷயத்தில் மருதமுத்து விமல்ராஜ்க்கு பரம எதிரிகளாய் இருந்தது ஜெகா, வீரபத்ரன், கோஷ்டிதான்ங்கிற விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?”

“தெரியும் ஸார்… ஆனா இப்படி ஒருத்தர்க்கு ஒருத்தர் வெட்டிகிட்டு சாகிற அளவுக்கு எதிரிகளாய் இருப்பாங்கன்னு நினைக்கலை. இனிமே சந்தை கூடற நாட்கள்ல எக்ஸ்ட்ராவா நாலு கான்ஸ்டபிள்களை அனுப்பி வெக்கணும் ஸார். அப்பத்தான் இனிமே இதுமாதிரியான வெட்டு,குத்து சம்பவங்கள் நடக்காமே தடுக்க முடியும்”

“மொதல்ல அதைச் செய்யுங்க.” என்றார் பாலகுரு.

‘கதை இங்கே! முடிவு எங்கே?’ என்ற தொடர் இத்துடன் முற்று பெறுகிறது. பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் கல்கி குழுமத்தின் சார்பாக நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். ஆறு சிறுகதைகளுக்கான மிகச் சிறந்த முடிவுகளை எழுதி வெற்றி பெற்றவர்கள் விரைவில் திரு. ராஜேஷ்குமாரை நேரில் சந்திக்க உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com