
நாம் ஆவலோடு எதிர்பார்த்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் குழு மார்ச் 16 ஆம் தேதி பூமிக்குத் திரும்ப முடியாமல் தாமதமாகிறது.
அவர்களை அழைத்து வருவதற்காக சர்வதேச விண்வெளி நிலையதிலிருந்து செல்லவேண்டிய டிராகன் விண்கலம் தொழில் நுட்பக் கோளாறுகளால் மீண்டும் தாமதமாகப் புறப்பட்டது.
வெள்ளியன்று அதிகாலை புறப்பட்ட அந்த மீட்பு விண்கலம் நேற்று காலை 11.25க்குத்தான் அங்கே சென்று இணைந்தது.
புதிய 10 ஆம் அணியினரிடம் நிலையப் பொறுப்புக்களை ஒப்படைக்க இரண்டு நாட்கள் ஆகலாம்.
எனவே, சுனிதா வில்லியம்ஸும், புச் வில்மோரும் முந்தைய அணியின் இரண்டு வீரர்களோடு வருகிற 19 ஆம் நாள் காலை 8.00 மணி அளவில் பூமிக்குத் திரும்புவார்கள் என்கிறது அண்மைத்தகவல்.
ஆன்னி மக்ளெய்ன் தலைமையிலான புதிய நால்வர் குழுவினரையும் சேர்த்து விண்வெளி நிலையத்தில் இப்போது பதினோரு பேர்கள் இருக்கிறார்கள்.
அடர்த்தியான செம்பட்டைக் கூந்தல் உற்சாகமாகக் 'காற்றில்' அலைந்தாட சுனிதா மிதந்து நீந்தி ஒளிப்படம் எடுத்த காட்சி கண்களுக்கும் மனசுக்கும் கூடப் பெருவிருந்தாக இருந்தது.
நிலையத்துக்குள் நிலவுகிற எடையற்ற நிலையில் அங்கே எல்லோரும் இப்படி 'மிதந்து'தான் இயங்கி ஆகவேண்டும்.
புதிய அணியின் நிக்கோல் ஆயர்ஸும் கூந்தல் பராமரிப்பில் சுனிதாவுக்குச் சளைத்தவரில்லை போலிருக்கிறது.
ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் சுனிதா தன்னுடைய அழகான கூந்தல் பராமரிப்பிலும் எவ்வாறு கவனம் செலுத்தினார் என்பது பற்றி யாரேனும் அவரிடம் கேட்கலாம்.
வாழ்த்தி வரவேற்போம்!