உடலின் எல்லா பாகங்களும் புத்துணர்ச்சி பெற  உதவும் சூர்ய நமஸ்காரம்

உடல் நலம் / யோகா
உடலின் எல்லா பாகங்களும் புத்துணர்ச்சி பெற  உதவும் சூர்ய நமஸ்காரம்

 யோகா பயிற்சி வகுப்புகளில் சூர்ய நமஸ்காரம் என்பது அதி முக்கியமானது என்பதை எல்லோரும் அறிவார்கள். எந்தப் பயிற்சி செய்தாலும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் செய்யவில்லையென்றால் அன்றைய யோகா வகுப்புகள் திருப்தியடையாது என்பது திண்ணம். சூர்ய நமஸ்காரம் இல்லாத யோகா வகுப்புகளே இல்லை என்றே சொல்லலாம். புதியவர்களுக்கும், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குமே மிகக் குறைவான எண்ணிக்கையில் ஆரம்பித்துத்தான் (அதாவது பத்துத் தடவை மட்டும்)  இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

கடைசியாகப் பிராணாயாமத்தோடு நிறைவுபெறும். எந்த வகுப்பிலும், ஆரம்ப நிலைப் பயிற்சிகளுக்கு அடுத்துதான் சூர்ய நமஸ்காரம் இடம்பெறும். புதியவர்களாலேயே குறைந்த பட்சம் பத்து முறையாவது இந்த சூர்ய நமஸ்காரப் பயிற்சியைச் செய்துவிட முடியும்/

சூரிய நமஸ்காரம் என்கிற பொதுவான உடற்பயிற்சி இன்றைய சூழ்நிலையில் அவசியமானது. இதனால் பலன் பெற்றவர்கள் பலர்.  

சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆணைகளை, அதாவது command களைக் கொண்ட பயிற்சி ஆகும்.

அவை வருமாறு :

நமஸ்கார் ஆசனா, அர்த்த சந்த்ராசனா, பாதஹஸ்தாசனா, அஷ்டசஞ்சாயனா, (Left Leg forward) மேரு ஆசனா, அஷ்டாங்க நமஸ்காரம், புஜங்காசனா, திரும்பவும் மேரு ஆசனா,  அஷ்டசஞ்சாயனா (Right leg forward)  அர்த்த சந்த்ராசனா, கடைசியாகத் திரும்பவும் நமஸ்காராசனா.

இந்தப் பன்னிரெண்டு ஆணைகளிலும் உடம்பிலுள்ள எல்லா பாகங்களும், இணைப்புகளும் இழுத்து விடப்பட்டு, எலும்புகள், நரம்புகள், ரத்த நாளங்கள், முதுகெலும்புகள், மூச்சுக் குழாய்கள் என்று  புத்துணர்ச்சி பெறுகின்றன. எந்த யோகப் பயிற்சிக்கான வகுப்புகளிலும்  எடுத்த எடுப்பில் சூர்ய நமஸ்காரம் இடம் பெற்றுவிடுவதில்லை. முதலில் சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்த தியானப் பயிற்சியில் ஆரம்பித்து, பிறகு ”பிரம்மரி” செய்து (நாக்கை உள்புறமாக மடித்து “ம்” சவுன்ட் மூன்று முறை) பிறகு Dog Briething  செய்து சுவாசக் குழாய்கள், தொண்டை வழிகளைச் சரி செய்து கொண்டு, பிறகு எழுந்து நின்று கைகளை முன்னே நீட்டி சிலவிதமான மூச்சுப் பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகுதான் சூர்ய நமஸ்காரத்திற்கு வருகிறோம். இந்த ஆரம்பப் பயிற்சிகள் அங்கங்கே சற்று மாறுபடுவதும் உண்டு. ஆனால் இந்தப் பயிற்சிகளை முடித்த பிறகுதான் சூர்ய நமஸ்காரத்திற்குச் செல்வோம் என்பதே முறைமை. எந்த யோகா வகுப்புகளிலும் இதுவே நடைமுறையாக இருக்க முடியும்.    

மொத்தம் பத்து அல்லது பன்னிரெண்டு முறை (ஒவ்வொரு முறைக்கும் மேற்கண்ட 12 ஆணைகளும் உண்டு) செய்வதோடு முடிந்து பிறகு சாந்தி ஆசனத்தில் படுத்திருக்கும் நிலைக்குச் செல்லும். இந்த சூர்ய நமஸ்காரத்தின் முழுப் பலனை சாந்தி ஆசனத்தில் நிமிர்ந்து படுத்திருக்கையில் வயிறு நன்றாக மேலெழும்பிக் கீழே இறங்கும் நீண்ட, அகலமான, ஆழமான மூச்சுப் பயிற்சியின் மூலமாய் நாம் அடைய முடியும்.

அதாவது முதல் மூன்று முறை மெதுவாகச் செய்தல் பிறகு இரண்டு நிமிடங்கள் ஓய்வாக நின்றிருத்தல், அதாவது கண்களை மூடி மூச்சினை இழுத்து உள்வாங்கி வெளிவிடுதல், பிறகு அடுத்து மூன்று முறை ஒவ்வொரு கட்டளைக்கும் சற்று நேரம் எடுத்துக் கொண்டு அதனை இயன்றளவு நூறு சதவிகிதம் சரியாகச் செய்து முடித்தல், பிறகு மூன்று நிமிடங்கள் நின்ற நிலையில் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு விட்டு, மூன்றாவது முறையாக சற்றே வேகமாக சூர்ய நமஸ்காரத்தை நான்கு முறையாகச் செய்து முடித்தல். ஆக மொத்தம் பத்து எண்ணிக்கை வருவதன் மூலம் சூர்ய நமஸ்காரம் நிறைவு பெறுகிறது. நமக்கும் அன்றைய நாளின் சுறுசுறுப்பான காரியமாற்றும் பலன் வந்து சேருகிறது. 

இந்த சூர்ய நமஸ்காரப் பயிற்சி அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கை கூடுவதுமுண்டு. அம்மாதிரி நேரங்களில் மற்ற பயிற்சிகள் குறையும். காரணம் சூர்ய நமஸ்காரத்தின் மூலம் மட்டுமே மற்ற பயிற்சிகளைச் செய்ததற்குச் சமமான பலனை நாம் பெறுகிறோம் என்பதுதான். உடம்பிலுள்ள எல்லா பாகங்களும் அப்படிப் புத்துணர்ச்சி பெறுகின்றன.   

 பத்தே பத்து முறை செய்வதன் மூலம் மொத்த 45 நிமிடங்களில் குறைந்த பட்சம் 20 நிமிடங்களே இந்த சூர்ய நமஸ்காரப் பயிற்சிக்காகச் செலவாகும். புதியவர்களுக்கு இதைச் செய்வதும் கண்டிப்பாகக் கஷ்டமாக இருக்காது என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com