

உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருந்தவர் ராக்ஃபெல்லர். அவர், தான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெயை சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தை செய்து வந்தார்.
1872இல் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்டது. அமெரிக்கா முழுவதும் எண்ணெய் வியாபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக ராக்ஃபெல்லரின் ‘ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி’ இருந்தது. அமெரிக்காவில் இதற்கு போட்டியாக நிறுவனம் எதுவும் இருக்கவில்லை. எனவே, பணம் இவரிடம் ஏராளமாக சேர்ந்தது. விரைவில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார் ராக்ஃபெல்லர். ஆனால், அவர் மிகப்பெரிய கஞ்சனாக இருந்தார். உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை அவர் உணரவில்லை. பணம்… பணம் என்று அலைந்த மனிதர், 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதியானார்.
ஆனால், திடீரென, வியாபாரத்துக்காக அவர் செய்த சில முறை தவறிய செயல்கள் பத்திரிகைகளில் கசிந்தன. அவை பரபரப்பாக ஊடகங்களில் வெளியானதால் அவர் அமெரிக்க மக்களின் அதிக வெறுப்புக்குள்ளானார்.
சமூகத்தின் தொடர் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை ஒரு மனநோயாளியாக்கியது. ஒரு நிலையில் அவருக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. பரிதாபகரமான இந்த நிலையில் அவர் இருந்த போது, அவரது நண்பர் ஒருவர் அவரது இல்லத்துக்கு வந்தார். அவர் தன்னுடைய ஊருக்கு வந்திருக்கும் இந்து மதத் துறவி ஒருவரைக் காண வரும்படி அழைத்தார். இவரோ மறுத்துவிட்டார்.
அந்தத் துறவி வேறு யாருமல்ல. சுவாமி விவேகானந்தர் தான். அவரைப் பார்ப்பதென்றால், அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனால், ராக்ஃபெல்லருக்கு அதற்கான நேரம் வாய்த்தது என்றே சொல்லலாம்.
முதலில் மறுத்தவர், பிறகு தன் நண்பருக்குக்கூடத் தகவல் சொல்லாமல், அவரது வீட்டுக்கு வந்தார். திடீரென்று சுவாமிஜி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.
உள்ளே சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். எல்லோரையும் போல அவர் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. தலையைக் கவிழ்த்த வண்ணம் அப்படியே படித்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட ராக்ஃபெல்லர் நிச்சயம் வியந்திருப்பார்.
அதுமட்டுமல்ல… ராக்ஃபெல்லரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரிந்த, மற்ற யாருக்குமே தெரியாத அவருடைய வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் சுவாமிஜி அவரிடம் கூறினார்.
அவரிடம் இருக்கும் பணம் கடவுள் கொடுத்தது என்றும், அதை மக்களுக்கான சேவைகளுக்குச் செலவு செய்வதற்காகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் அவரிடம் கூறினார். ஆண்டவன் அளித்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவரை அறிவுறுத்தினார்.
மற்றவர்கள் தன்னிடம் சொல்வதற்கு அஞ்சும் விஷயங்களை, சுவாமிஜி தன்னிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் அதிர்ந்து போனார் ராக்ஃபெல்லர்.
சட்டென அறையை விட்டுக் கிளம்பி வெளியே போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின், மீண்டும் பழைய மாதிரியே விருட்டென சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்த ராக்ஃபெல்லர், ஒரு காகிதத்தை சுவாமிஜி முன் வீசி எறிந்தார்.
அப்போதும் சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். “அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எனக்கு நன்றி கூறுவீர்கள்” என்றார் ராக்ஃபெல்லர். அவர் அளித்த நன்கொடைகளின் விவரங்கள் அந்தக் காகிதத்தில் இருந்தன.
அதைப் பார்த்த சுவாமிஜி, “நல்லது! இப்போது நீங்கள் கொஞ்சம் திருப்தி அடைந்திருப்பீர்களே! இதற்கெல்லாம் நீங்கள்தான் எனக்கு நன்றி கூறவேண்டும்” என்றார். சுவாமி விவேகானந்தருடனான இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பின்னர், அதுவரை மிகப்பெரிய கஞ்சனாக இருந்த ராக்ஃபெல்லர் பெரும் கொடையாளியாக மாறினார்.
மனித குலத்துக்குப் பெரும் நன்மைகள் ஏற்படக் காரணமானாவராக மாறினார். ‘பென்சிலின்’ மருந்தைக் கண்டுபிடிக்க அவர் பணத்தை அள்ளி வழங்கினார். தனக்கென்று பணத்தை சேர்த்து வைத்தபோது அடையாத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் பிறருக்கென ராக்ஃபெல்லர் கொடுத்தபோது அடைந்தார். ஒரு புத்துயிர் பெற்று ஆரோக்கிய மனிதராகி, அந்நிகழ்வுக்குப் பிறகு, தனது 93 வயது வரை வாழ்ந்து மறைந்தா சுவாமி விவேகானந்தரின் அன்பினாலும் கருணையினாலும் ஆட்கொள்ளப்பட்ட ராக்ஃபெல்லரை இன்றும் மனித குலம் நன்றியோடு நினைவு கூறுகிறது.