

நமது, கதையின் நாயகன் பாலு பிறந்தது வளர்ந்தது பட்டினத்தில். பெயரில் கிராமம் பெயர் இருந்தாலும் யாராவது கேட்டா, "பட்டினம் தான் சொந்த ஊர்... நான் எங்கள் கிராமத்துப்பக்கம் போனதே இல்லை" என்பான்.
காலையில் பூங்காவில் நடக்கும் பழக்கம்... ஒரு நாள் பணக்கார மாமா ஒருவர் தன் நண்பர்களுக்கு பனி மழை பற்றி சொல்ல, அவன் 'இங்கே வெயில் அடிக்குது... என்ன உளறல்' என்று நினைத்தான். அப்புறம் தான் தெரிந்துது அவர் கலிபோர்னியா பற்றி சொல்கிறார் என்று. அவனது மனதில் தன் பிள்ளைகள் கண்டிப்பா அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
நினைத்தது போலவே இரண்டு குழந்தைகளை அமெரிக்கா அனுப்பி வைத்தான். இருவரும் இங்கே வளர்ந்து அமெரிக்கா சென்றதனால் இவன் பார்த்த பெண்ணையும் பையனையும் மணமுடித்துக் கொண்டனர். இருவருக்கும் மகனும், மகள்களும் அங்கேயே பிறந்தனர்.
அவனது குறும்புக்கார சித்தப்பா தனது 80 வது வயது திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். "நான் உன்னை அடல்ஸ் ஒன்லி மேரேஜுக்கு அழைக்கிறேன்; ஏனென்றால் இங்கு மேரேஜுக்கு வருபவர்களும் 60 வயசுக்கு மேலே தான் இருப்பார்கள்... அதனால் தான்" என்றார்.
அவர் "உனது பேரனுக்கும் பேத்திக்கும் வாஷிங்டனில் திருமணமா? அல்லது வாஷிங்டனுடன் திருமணமா?" என்று கிண்டலாக கேட்டார். நான் பெருமையாக "அவர்கள் அங்கு சங்கீதம் பரதநாட்டியம் எல்லாம் கற்றுக் கொண்டு பாரம்பரிய முறையில் வளர்க்கிறார்கள்" என்றேன்.
அவர் வாய் முகூர்த்தமோ என்னவோ எனது பேத்தி அந்த ஊர்காரனை திருமணம் செய்ய முடிவு செய்தாள்.
எனது மகன், "இங்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் அவர்களுக்கு என்னதான் நமது பாரம்பரியத்தில் வளர்ந்தாலும் அவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லோருடனும் வளர்கிறார்கள். நாமே பட்டினத்தில் வந்ததுக்கப்புறம் நமது ஊர் பக்கம் போனதே இல்லை அதனால் நாமே பட்டனத்து வாசிகளாகி விட்டோம். எங்கிருந்து வந்தது பாரம்பரியம்?" என்றான்.
எனது மனைவி சொல்லிக் கொண்டே இருப்பாள்... "என்னதான் நாம பட்டணத்தில் இருந்தாலும் கிராமத்து பாரம்பரியத்தை விடக்கூடாது அது எப்போதும் அது அம்மாவின் தொப்புள் கொடி உறவு போல, என்னதான் பிரிந்து இருந்தாலும் நாம் அம்மாவை விட்டு பிரிகிறோமா?" என்று.
என் மகன் கேட்டவுடன், எனது மனைவி சொன்னது சுளீர் என்று உரைத்தது. உடனே எனது சித்தப்பா தூரத்து உறவினர்களை தொடர்பு கொண்டு எனது கிராமத்து உறவினை புதுப்பிக்க தயாரானேன். என் மனைவியுடன் புறப்பட்டேன். மனதில் ஒரு நிம்மதி. நான் எனது அம்மாவிடம் திரும்பி சேர்ந்தது போல.