

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தாக்கல் செய்துள்ளார். உற்பத்தியை அதிகரிப்பது, போட்டியிடும் திறனை வளர்ப்பது, மக்களின் திறன்களை மேம்படுத்துவது என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற 'மூன்று கர்தவ்யா' எனப்படும் 'கடமை'களின் அடிப்படையில் இந்த வருட பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2047-இல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை வைத்து மட்டுமே 2026-2027 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காத பங்கு சந்தைகள் பிப்ரவரி 1 பட்ஜெட் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இயங்கியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த 2026-2027 பட்ஜெட்டில் தமிழகம்(Tamil Nadu budget 2026) குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையே அதிவேக பயணியர் ரயில் பாதைகள் உருவாக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. சுற்றுலாப் பயணிகளுக்காக அகழ்வாராய்ச்சி தலமான ஆதிச்சநல்லூர் திறந்து விடப்பட இருக்கிறது. மேலும் இதற்காக தனி நடைபாதை அமைக்கப்படுவதோடு, பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உதவும் வகையில் நவீன கதை சொல்லும் திறனுடன் கூடிய தொழில்நுட்பங்கள் ஆதிச்சநல்லூரில் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலையேற்ற பயிற்சியாளர்களுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.
4. பறவைகள் சரணாலயமான பழவேற்காட்டில் உள்ள புலிகாட் ஏரியில் பறவை ஆர்வலர்களின் வசதிக்காக பறவைகள் கண்காணிப்பு பாதைகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கனிம வளம் மிகுந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகியவற்றில் இத்துறைக்காக பிரத்யேக வழித்தடங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 2025 ல் அரியவகை காந்தங்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
6. கோவில் நகரங்கள் மீதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்கள் மீதும் கவனம் செலுத்தப்படும். நகர பொருளாதார மண்டலங்கள் பல்வேறு வளர்ச்சி காரணிகளின் அடிப்படையில் வரையறுக்கப்படும். ஒரு மண்டலத்துக்கு ஐந்து ஆண்டுகளில் 5000 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் மதுரை, காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் போன்ற பல கோவில் நகரங்களைக் கொண்ட தமிழகம் இந்த திட்டத்தால் மிகுந்த பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே பிரதமர் அதாவது நரேந்திர மோடியின் கீழ் ஒன்பதாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வரலாறு படைத்தது போல் இந்த பட்ஜெட்டும் வரலாற்றுச் சிறப்பு பெற வாழ்த்துவோம்.