

1. போகி பேசினால்..!
‘போக்கி’ என்பதன் எளிய சுருக்கமே
‘போகி’ப் பண்டிகை என்றே ஆனது!
எவற்றைப் போக்கி எவற்றை நாமும்
ஏற்றிட வேண்டுமென்பதே போகியின் கருப்பொருள்!
உழைத்துத் தேய்ந்த உடைமைகள் அனைத்தையும்
உதவாத எதனையும் உள்ளுக்குள் அடுக்காமல்
வெளியேற்றும் நாளே விரும்பிடும் இந்நாள்!
அந்நாள் தன்னில் அத்தனை பொருளையும்
தீயில் இடுவதைத் திறம்படச் செய்தனர்!
அப்பொழுது இந்த அண்டம் முழுவதும்
தூய காற்றே சுற்றுலா வந்தது!
மக்கட் தொகையும் மகிழ்வாய்ச் சிறிதே!
வாகனப் புகையும் வளரும் தொழிற்சாலைகளின்
கழிவும் பிறவும் கலந்து வந்தே
மனித வாழ்வை வாட்டி வதைப்பதை
தலைநகரைப் பார்த்தே தக்கதாய் அறியலாம்!
தூய காற்றைச் சுவாசிக்க முடியாமல்
துன்பம் ஏந்தும் அவர்கள் வாழ்வை
கண்டு நாமும் கவலையே அடைகிறோம்!
இங்கு மட்டும் என்ன பெரிதாய்வாழ்கிறது?
காற்று ஏனோ கழிவுகளுடனே கூட்டணிபோட்டு
மூக்குக்கு ஏற்றதாய் முறையாய் இல்லாமல்
பண்டிகை காலங்களில் பயந்தோடச் செய்கிறது!
உன் வாழ்க்கை உன் கையில்
என்பதை இப்போது எல்லோரும் உணர்தல்நலம்!
நமக்குப் பழையது நானிலத்தில் பலருக்கு
வேண்டிய ஒன்றாய் விளங்குதல் உண்மை!
கொடுப்பதால் உளத்தில் பொங்கிடும் மகிழ்ச்சி
கொடுப்போர் தமக்கே புரிந்திடும் உணர்ச்சி!
கொளுத்தலே மரபென்று நினைப்போர் தாமும்
கொஞ்சமாய் நிலைமையைச் சிந்தித்தல் நலமே!
சங்கராந்திப் பொங்கலின் நான்குநாள் பண்டிகை
போகி உடன்தான் தொடங்குது என்றும்!
மார்கழி தையை இணைத்தே வைக்கும்
இனிதான பண்டிகை இந்தப் போகியே!
போகியைப் போற்றுவோம்!புனிதமாய்க் கொண்டாடுவோம்!
நெருப்பில் பொருட்களை எரிப்பதை நிறுத்தி
புதுமையாய்ப் போகியைப் புரிந்தே அனுசரிப்போம்!
பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகி என்றே புகல்வது உண்மையென்றால்
தீயில் கொளுத்தும் தீய பழக்கத்தை
விட்டே ஒழிப்போம் விரைந்தே நாமும்!
காற்றை நாமும் கண்ணியம் மிகுந்தே
காத்திடல் ஒன்றே களிப்பை நல்கும்!
போகியும் இங்கு பேச ஆரம்பித்தால்
‘நெருப்பும் புகையும் வேண்டாம்!’ என்றே
நம்மிடம் கூறி நம்மை எச்சரிக்கும்!
2. பொங்கட்டும் பொங்கல்!
பொங்கிடும் வாழ்வைத் தந்திடும் தைப்பொங்கலே
புளகாங்கிதம் தரவே வந்திடு நீயும்!
தைபிறந்தாலே வழி பிறக்கும் என்று
தரணியோர் உன்னைத் தன்மையாய் அழைப்பர்!
புதுப்பானை தன்னைத் தனியடுப்பில் ஏற்றி
புத்தரிசியைக் களைந்து அதில் இட்டு
உற்றார் உறவினர் ஒன்றாய்ச் சேர்ந்து
பொங்கியே அதுவும் வழிந்திடும் போது
பொங்கலோ பொங்கலென்று ஓதும் குரல்களில்
உண்மை மகிழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும்!
உள்ளம் முழுவதும் இன்பம் தேங்கும்!
கரும்புத் துண்டைக் கடித்த படியே
காளையைப் பிடிக்கும் நுணுக்கங்கள் தனையே
இளைஞர்கள் நன்கு எண்ணிய படியே
இளவட்டக் கல்லைத் தூக்கியே போடுவர்!
மாட்டுப் பொங்கலை மகிழ்ந்தே கொண்டாட
காலை முதலே களைகட்டும் சாவடி!
கோரையைச் சிலபேர் கொண்டு வந்து
வகிந்தே அதனையும் வாட விடுவர்
மாட்டின் கழுத்தில் கட்டிட ஏதுவாய்!
நெட்டியில் மாலைகள் வண்ண மயமாய்
பனை ஓலையில் அவையோ பகட்டாய்
காகித மாலைகள் வேப்பிலை மாலைகள்
கால்நடை அனைத்தின் கழுத்தை அலங்கரிக்கும்!
எண்ணெய் தேய்த்து அரப்பும் வைத்து
தண்ணீர் தெளித்துத் தன்மையாய் அவற்றை
புதுக் கயிறிட்டுப் பிடித்தே வந்து
மைதானத்தின் நடுவில் நிறுத்தியே வைத்து
மூன்று சுற்று முறையாய் அனைவரும்
சுற்றிய பிறகு சுகம்பெற அவற்றை
எரியும் நெருப்பைத் தாண்ட வைத்து
கொட்டிலில் கட்டி கொடுப்பர் புல்லை!
காணும் பொங்கலில் கன்னியர் காளையர்
உறவுகள் தேடி ஒவ்வொரு வீடாய்
ஆசி வாங்கவென்று அலைந்தே திரிவர்
அதிலும் ஒருசுகம் அடிமனத்தைக் கிள்ளும்!
ஆண்டுதோறும் பொங்கல் அடுத்தடுத்து வந்தாலும்
அதுதரும் ஆனந்தத்திற்கு அளவேதும் இல்லை!
பாரம்பரியம் பண்பாடு என்றே ஓடுவதிலேதான்
உண்மையான சுகத்தை நாமும் காணலாம்
நாள்தோறும் அதனை அசைபோட்டு மகிழலாம்!
இதற்கு மட்டுமேன் இவ்வளவு மவுசு
என்றே எண்ணி காரணம் தேடினால்
‘உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’
என்ற வாசகம் இதயத்தை நிறைக்கும்!
ஏரும் உழவும் எழில்சார் காளையும்
எலும்பும் தோலுமாய் இருக்கும் விவசாயியும்
நினைவில் என்றும் நிறுத்தத் தக்கோர்!
அவர்தம் வாழ்வில் ஆனந்தம் மிகப்பொங்க
இந்த நன்னாளில் இறைவனை வேண்டுவோம்!
அடுத்த பொங்கல் அருகில் வரும்வரை
அமைதியாய் அவர்கள் அன்பில் மகிழட்டும்!