
இரண்டு கார்கள், ஒரு வேன். கதவுகள் திறந்து, கால்கள் தரையைத் தொட்டதும் மண்டபம் பரபரப்படைந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஆரத்தி எங்கே! அப்பா எங்கே' ஓடிப்போய் மைதிலிக்கு விஷயத்தைச் சொல்லு அவன் ஜானவாச ரவிக்கை கொஞ்சம் பிடிப்பதாகச் சொன்னாளே, பிரித்துக் கொடுத்தாயிற்றா? காப்பி, காப்பி ரெடியா என்று சமையல்காரரைக் கேள். அவர்கள் பக்கத்தில் பல பேருக்கு ஷுகர் கம்ப்ளைண்ட் விசாரித்து, கவனிக்கச் சொல்லு வாங்கோ, வாங்கோ.
போட்டோகிராபர் முதல் படத்துக்கு ஃபோகஸ் செய்து முடிப்பதற்குள் மாப்பிள்ளை நகர்ந்து உள்ளே வர, கட்டி வைத்த வாழையைக் காதலுடன் பார்த்துக்கொண்டிருந்த மாடு மங்களகரமாக முதலில் பதிவானது. அதனாலென்ன, பசு மாடு. பரம விசேஷம்.
கூட்டம் உள்ளே நுழைந்ததும் ஆரத்திச் சிவப்பில் கோலம், வேறு கோலம் கொண்டது. எல்லாமே அழகுதான். எல்லாமே மங்கலம்தான். மனசு அல்லவா தீர்மானிக்கிறது?