
"யார் ஆரம்பிச்சுவெச்ச கெட்ட வழக்கமோ தெரியலை. கல்யாணத்துக்கு மொத நாளே ரிஸப்ஷன் வெக்கறதுக்கெல்லாம் என் மனசு இடம் குடுக்கலை. அஞ்சு வேளை சாப்பாடு. கட்டுசாதத்தோட கிளம்பறதும்தான் வழக்கம். ரிஸப்ஷனை மொத நாளே வெச்சுட்டு, மறுநாள் தாலி கட்டின கையோட கிளம்புடா பிராமணாங்கறா, இப்ப எல்லாரும் கேட்டா காலம் மாறிடுத்தாம். காலம் மாறிடுத்துன்னு மூக்கால சாப்பிடறோமோ? பேண்ட்டுக்கு மேல அண்டர்வேர் போட்டுக்கறோமா?"
ஜானவாசம் முடிந்த இரவு, மண்டபத்தின் காலியான மூலைகளில் கொத்துக்கொத்தாக உறவினர்கள் கூடியிருந்தார்கள். காசில்லாத சீட்டாட்டத்தில் விருப்பமுள்ள மாப்பிள்ளையின் தகப்பனார், உப்பரிகை போலிருந்த மாடி பால்கனியில் துண்டு விரித்து, தோழர்களுடன் அமர்ந்திருந்தார். வழியில் வானம் பார்த்து உருண்டு கிடந்த தேகங்களின் மேல் உரசாமல் நர்த்தனமாடியபடி அனுவின் அப்பா அவரை நெருங்கி விசாரிக்கத் தொடங்கினார்.