அரக்குக் கலர் மடிசாரும், ஆண்டாள் கொண்டையுமாக, மைதிலி முற்றிலும் மாறுபட்ட வேறொரு தோற்றத்துக்கு மாறியிருந்தாள். முகூர்த்த நேரம். முன்னதாக மேடைக்கு எடுத்து வரப்பட்ட நாற்காலியில் நரசிம்மன் அமர்ந்திருந்தார். அந்தக் கணத்துக்குக் காத்திருந்த நெருங்கிய உறவு வட்டம் மேடையில் ஏறி, சக்கர வியூகமாகச் சுற்றி வளைத்துக்கொண்டது.
மந்திரங்களால் மேடை நிறைந்திருந்தது. நாகஸ்வர ஒலியில் மண்டபம் சப்த ரூபம் அடைந்தது. சுமார் பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு மைதிலி மீண்டும் சிறுமி ஆனாள். நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் மடி மீது ஏறி உட்கார்ந்தாள். கன்னிகாதானம்.
'ஏ கம்பீர புருஷனே, கட்டுமான வித்தகனே. கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டாலும் இந்த க்ஷணம் வரை இவள் என் குழந்தை, உலகம் தெரியாத இந்தக் குழந்தையை இதோ இனி உன் பொறுப்பில் விடுகிறேன். இவள் வயிறு வாடாமலும், மனம் குலையாமலும் கண்கள் நனையாமலும் பார்த்துக்கொள்ள இனி நீயாச்சு, இனி உன் சகல சுக துக்கங்களிலும் இவளும், இவள் மூலம் நீ பெறப் போகும் வாரிசுகளும் உடன் இருப்பார்கள்.'