
மெல்லிசைக் களேபரங்கள் இல்லாத ரிசப்ஷனுக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸின் கேஸட் அழகு சேர்த்துக்கொண்டிருந்தது. நாகரிக ஆடைகளில் மைதிலியும் மாப்பிள்ளையும், களைப்பு மறைத்து கைகுலுக்கிக்கொண்டிருந்தார்கள். வண்ணக்காகிதப் பரிசுப் பொருட்களைச் சில வாண்டுகள் வாங்கி இரு தரப்பிலும் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். வீடியோ வெளிச்சம். ஜிகினாத் தோரணம். ஆரத் தழுவிய அன்பு வாழ்த்துகள்.
ஓடிக் களைத்த அனுவின் அப்பா, கூட்டுப் பெருங்காயப் பையுடன் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார். அம்மாவுக்கு இன்னும் களைப்பு முற்றவில்லை.
தன் சிறந்த பட்டுப்புடைவையில், போட்டோகிராபரின் எல்லா ஃப்ரேம்களிலும் அவளும் இருந்தாள்.
சந்தேகமென்ன? பெண்ணின் திருமணம், சாதனைதான். லட்சம் ஒரு பொருட்டல்ல. தூக்கமற்ற இரவுகளில் திட்டமிட்டு, மஞ்சள் தடவிய ரூல்ட் பேப்பரில் நினைவுக்கு வந்ததையெல்லாம் பிள்ளையார் சுழிப் பாதுகாப்பில் எழுதிவைத்து, ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கோத்ததில், இதோ மைதிலி மாலையுடன் புன்னகைக்கிறாள்.