
விஜய் ஒரு உற்சாகமான மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ். சில நேரங்களில் அதீத உற்சாக உணர்வும் தன்னம்பிக்கையும் ஒருவனை வீழ்த்திவிடும் என்பதை அறியாத கிராமத்துக் காளை அவன்.
எழுபதுகளில் நிலவிய கடும் வேலை இல்லா சுனாமியிலிருந்து ஒருவாறு உயிர் பிழைத்து கரையேறி திருநெல்வேலியில் ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியாக நானூறு ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கினான் விஜய். அப்போதெல்லாம் ஒரு பவுன் தங்கம் விலை நானூறு ரூபாய்.
எழுபதுகளில் திருநெல்வேலி வாழ்க்கை அந்தக்கால மனிதர்க்கு ஒரு இருட்டுக் கடை அல்வா.
இருபத்தி ஐந்து பைசா பஸ்சில் ஜங்ஷனிலிருந்து 'டவுன்' செல்லும் வழியில் பூர்ணகலா (உத்தமன் சினிமா), சிவசக்தி (கவிக்குயில்), ரத்னா (மயிலு, சப்பாணி, பரட்டையின் பதினாறு வயதினிலே), பார்வதி (தீபம்) என்று வரிசையாக மலிவு-விலை திரையரங்குகள்; இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் 'பேட்டை'யில் வேலையில்லாப் பட்டதாரியாகப் பார்க்கப் பணமில்லாமல் தவித்து தவிர்த்த 'அன்னக்கிளி'யை லக்ஷ்மி டாக்கீஸ்ஸில் பழைய பிரிண்ட்டில் பார்த்து விடலாம்.