
-எஸ்.ஐ.ஆர்.
தீப்பொறி மத்தாப்பு அணைந்து அணைந்து பூத்தது. கண்ணாடிப் பாதுகாப்புக்குள்ளிருந்தபடி ராஜாராமனின் பார்வை அதை வெறித்தது.
கார்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலகம், வெல்டிங் பிரிவில் சேர்ந்து இண்டு வருடங்களாகிறது. ஆசையாசையாய்ப் படித்த ஐ.டி.ஐ. படிப்புக்குப் பின் ஆன்டி கிளைமாக்ஸ் போல வேலை. ஊர்ந்து வரும் உதிரி பாகங்கள் வெல்டிங் பிரிவில் தானியங்கி முறையில் இணைக்கப்படுவதை மேற்பார்வையிட வேண்டும்.
மர நிழலில் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தபடி மாடு மேய்வதை மேற்பார்வையிடுவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, ராஜாராமனுக்கு....
'துளியூண்டு சுயசிந்தனை, தன்னார்வம், கற்பனை... எதற்காவது இடமுண்டா இந்தப் பணியில்...? சம்பளமும் குறைச்சல். இன்னும் பத்து வருஷம் குப்பை கொட்டினாலும் கல்யாணம், குடும்பம் என்று நினைத்துப் பார்க்கமுடியாது.
ராஜாராமன் ஃப்ளோர் சூபர்வைஸரிடம் போய் பொய் சொன்னான்:
"ஸார், காலைலேர்ந்து ஒரே வயிறு அப்செட்... முடியலை.. போகணும்..."
வீடு வந்தவன் இழுத்துப் போர்த்திக்கொண்டு மூலையில் சுருண்டு கிடந்தான். சில மாதங்களாகவே அவனைத் துரத்திக்கொண்டிருந்த கேள்வி சில்வண்டு ரீங்காரம்போல் மண்டையைக் குடைந்தது. 'இன்னும் எத்தனை நாள்...? எத்தனை காலம் இதே வேலையில்...? இப்படியே போனால்...? நாளையும், மறுநாளும், அதன் பின்னரும் இதே பணி, இதே சோர்வு, இதே தேக்கம்தானா...?