

சென்னையில் ஒரு மருத்துவமனையின் இரவு எப்போதும் சத்தமில்லாத சோகத்தைக் கொண்டு இருக்கும். சுவர்களே வலியை நினைவூட்டுவது போல இருந்தது. அந்த வெண்மையான அறையில், படுக்கையில் சாய்ந்து கிடந்தாள் ஜானகி. முகத்தில் களைப்பு, ஆனால் கண்களில் மட்டும் ஒரு எதிர்பார்ப்பு — “என் பையன் எப்போ வருவான்?”
அரவிந்த்க்கு வெளியூரில் வேலை புதிய நகரம், தொடர் வேலைகள், அம்மாவை அடிக்கடி சென்று பார்க்கமுடியாத வருத்தம் எப்போதும் உண்டு.
நேரம் கிடக்கும்போதெல்லாம் அம்மாவை பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலை. அந்த இரவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தான். ஜன்னல் வெளியே இருள் ஓடிக்கொண்டிருந்தது. அவன் மனமும் அதே போல அமைதியின்றி அலைந்தது. “அம்மா இப்போ என்ன பண்ணிக்கிட்டிருப்பாளோ… வீட்டில் நம்ம கவனிப்பதை போல ஹாஸ்பிடலில் அம்மாவை கவனிப்பார்களா? …” அந்த எண்ணங்கள் அவன் உள்ளத்தை கிழித்துக்கொண்டே இருந்தது.
அவன் மொபைலை எடுத்தான். அம்மாவிடம் இருந்து வந்திருந்த ஒரு மிஸ்ட் கால். உடனே அவன் அழைத்தான்.