

கத்தார் நாட்டு தலைநகரான தோஹாவில் ஐம்பது வயது அக்கவுண்டன்ட் அப்துல்லா வழக்கம்போல் அன்று அலுவலகம் நுழைந்தார்.
லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கேரளாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மனித வெள்ளத்தின் ஒரு துளியாக, வருடக்கணக்கில் குடும்பம் மறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்துல்லா, ஒரே ஒரு நிமிடத்தில் அன்று லட்சக்கணக்கில் கடனாளியாவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
குடும்பத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தரப்படும் ஒரு மாத விடுமுறைக்காக, முதலாளியின் அனுமதி கடைசி நாளில் கிடைத்து, அவசர கதியில் ஏர்போர்ட் வந்து, 'டியூட்டி ஃப்ரீ'யில் சாக்லேட், பெர்ஃப்யூம், நெருங்கிய சினேகிதர்களுக்கு ஒரு 'ரெட் லேபிள் ஜானி வாக்கர்' வாங்கிக்கொண்டு, பட்டணம்திட்டா வந்து குடும்பத்துடன் ஒரு மாத தேனிலவு லௌகீக வாழ்க்கையை வாழ்ந்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து அயலக வாழ்க்கையை ஆரம்பிக்கும் அப்பாவி மனிதர் அப்துல்லா.
இன்றிரவு கேரளா செல்ல வேண்டும் என்பதால் காலையிலிருந்தே அரக்கப் பரக்க அலைந்துகொண்டிருந்தார் அப்துல்லா. விடுமுறையில் அவருடைய பணியை செய்யப் போகும் பிஜூவையும் பாங்க்கிற்கு அழைத்து சென்றார்.