

காலை ஏழு மணிக்கு அடிக்கும் காலிங்பெல் சத்தம் ரத்தினத்தின் வீட்டில் ஒரு பழக்கமான இசை. அந்த ஒலி கேட்டவுடன் பூஜை அறையில் தீபம் ஏற்ற தயாராகிக் கொண்டிருக்கும் ரத்தினம், “அப்பாடி புவனா வந்துட்டா…” என்று மனதில் சொல்லிக்கொள்வாள்.
ஆனால் அன்று…
ஏழு மணி கடந்தது. எட்டு ஆனது. ஒன்பது ஆனது... பத்து மணி அடித்தும் காலிங்பெல் அடிக்கவே இல்லை. மூர்த்தியும் வரவில்லை. ஒரு ஃபோன்கூட இல்லை.
“என்னவாயிற்று புவனாவுக்கு?” என்று ரத்தினத்தின் மனம் கலங்கியது. புவனா இங்கு வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவள் லேட்டாக வந்ததே இல்லை. ஒரு சில நேரங்களில் தவிர்க்கமுடியாமல் தாமதமானாலும், முன்பே ஃபோன் செய்துவிடுவாள். இல்லை என்றால் மூர்த்தியை உதவிக்கு அனுப்பிவிடுவாள்.
‘வீட்டு வேலைதானே’ என்ற அலட்சியமோ, கவனக்குறைவோ என்றுமே அவளிடம் பார்த்தது இல்லை. அழகாய் குளித்து, ஈரத் தலைமுடியில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, பூஜைக்குத் தேவையான பூக்களுடன் ஏழு மணிக்கு ஆஜராகிவிடுவாள். வந்தவுடன் படபடவென பேசிக்கொண்டே மடமடவென வேலைகளை முடித்துவிடுவாள்.
அவள் பேச்சின் இடையில் தன் மகன் முரளியைப் பற்றி “அவன் நல்லா படிக்கணும் அம்மா. எப்பவும் அவனோட வாழ்க்கை எங்கள மாதிரி இருக்கக்கூடாது…” என்பாள். அவள் கஷ்டப்பட்டாலும், ஒருநாளும் மகனை வேலை பார்க்கும் வீடுகளுக்கு அழைத்து வரமாட்டாள்.