
மதுரை தமுக்கம் பேருந்து நிறுத்தம், அரைகுறை இருட்டில். பயணிகள் சிலர் அங்கும் இங்குமாய்.
அதன் சாலைச் சந்திப்பில் இருந்த தலைவர் சிலை, தள்ளியிருந்த தெரு விளக்கு வெளிச்சத்தில் கருப்பு வெள்ளையில் காட்சி தந்தது.
ஜீவரேகா.. நிதானமாய் நடந்து.. பேருந்து நிறுத்தத்தை அடைந்தவளை, ஐந்தாறு ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் விரட்டி மடக்க, ஒரு நிமிடம் யோசித்தவள், வரிசையாய் நின்ற ஆட்டோக்களை கடந்து, ‘அன்பு ஆட்டோ’ என்ற தலைமை வாசகத்துடன், கீழே...‘தாய் தந்தை தந்த பரிசு’ வாசகம் தாங்கிய ஆட்டோ அவளைப் பிடித்து நிறுத்தியது.
“வாங்கம்மா. எங்கே போகணும்?” ஆட்டோ டிரைவர் சுதாகரன் வெளியே வந்து அழைக்க, பக்கத்து ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
“பிரச்னை பண்றாங்களே...நீங்க அதிலேயே ஏறுங்க..” என்றவனாய் வண்டியை விட்டு நகர, “இ.. இல்லை. நீ.. நீங்க சவாரி ஆட்டோவா?..அப்படின்னா போகலாம். எனக்கு வாசுகி நகர் வரைக்கும் போகணும். ஆனா, நடுவுல வேற யாரையும் ஏத்தக்கூடாது. ம்., கிளம்புங்க..” என ஜீவரேகா உறுதியாய் வண்டியில் ஏறி அமர,
ஆச்சரியமாய் ஆட்டோவை உசுப்பினான் சுதாகரன்.
“இதோ கிளம்பிடுவோம். வாடகை 120/- தரணும்.... ஆமா.. என் வண்டியைப் பார்த்ததும் ஏன் ஏறினீங்க?..” என கண்ணாடியில் அவள் முகம் பார்த்தவனாய் கேட்க,
“அ.. அது, உங்க வண்டி வாசகம் என்ன ரொம்ப பாதிச்சுது...” பதிலளித்துவிட்டு சிந்தனையில் மூழ்கியவள், ‘சட்’ டென வண்டியை நிறுத்தச் சொல்லிக் கத்தினாள்.