
வைதேஹிக்கு அழுகையாய் வந்தது.
தனிமை சுடும்னு கேள்விப்பட்டது தான். ஆனால் அனுபவிக்கும் போது தான் அதன் சூடும், வீரியமும், விஷமும் மூரச்சையடைய வைக்கிறது. கல்யாணமாகி எத்தனை வருடங்கள்?
பெண் பார்க்கும் போதே சொன்னான் ரமணி...
“நான் ஜெர்மனியில் வேலை பாக்கறேன். கல்யாணம் முடிஞ்சதும் உன்னை கூட்டிப்போக முடியாது. கொஞ்சம் டயம் கொடு. உன்னையும் அழைச்சுக்கறேன்.”
அன்பாய், உண்மையாய் பேசியபோது, அப்போது சரியாய் பட்டது.
“நானும் டாக்டரேட் பண்ணிடறேன் அதுக்குள்ளே,” என்றாள் வைதேஹி.
எவ்வளவு பெரிய தவறு?
மூன்று வருடம் மூனு மாசமாச்சு.
இன்னும் அழைச்சுக்க நேரம் வரவில்லை.
மாதத்திற்கு ஒரு முறை ஆள் மூலம் வரும் அழகிய விலை உயர்ந்த புடவையும் தங்கச்செயினும் 18 புடவைகள் 24 பவுன் நகைகள்... பீரோ நிறைய புடவைளும், லாக்கர் நிறைய நகைகளும், மனம் நிறைய தனிமைச்சூடும் அதன் சோகமும், பால்காரன் முதல், ராப்பிச்சை வரை எத்தனை பேர் கேட்பார்கள் தினம்!
“ஐயா எப்ப வருவார்?”
எப்ப வருவாரோ? தெரியாது...