சிறுகதை: "வேலையை மாத்தாதீங்க!"

Tamil Short Story - Don't Change Jobs!
Husband and Wife talking
Published on

“என்னத்தே! விவசாயம் பண்ணி, பயிர் விளைஞ்சு, பணம் பாக்கறதெல்லாம் இப்ப முடியலை.” - விவசாயி ராமன் நொந்து போய் சொன்னார்.

“அதனாலே..?” மனைவி பூமா கவலையாய் கேட்க,

“நிலத்தை வித்துட்டு அந்தக் காசிலே ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சா என்னனு தோணுது.”

“ஸ்கூல் ஆரம்பிக்கறது நல்ல விஷயம்தான். அதற்கெதற்கு நிலத்தை விக்கனும்?” 

“என்ன உளறுறே! விவசாயத்திலே இப்ப லாபமில்லை. நஷ்டத்திலே எதுக்கு விவசாயம் பண்ணனும்? இப்பவெல்லாம் ஸ்கூல் தான் நல்ல பிஸினஸ்”

“அப்ப நீங்க படிப்பு சொல்லித்தர ஸ்கூல் ஆரம்பிக்கலை. பணம் பாக்கப்போறீங்க. ஏங்க உங்களுக்கு புத்தி இப்படி போகுது? நம்ம குடும்பம். பத்து தலைமுறையா விவசாயம் பண்ற குடும்பம். நாலு தலைமுறைக்கு பணமிருக்கு. இந்த வெள்ளாமை இல்லைனா அடுத்த வெள்ளாமையில் பணம் வரப்போகுது.” ஆறுதலாய் பேசினாள் பூமா.

“உலகம் புரியாத பேசாதே அவனவன் நிலத்தை ப்ளாட் போட்டுட்டான். நம்ம சகலை நிலத்தை ஃபேக்டரிக்கு லீஸுக்கு விட்டு பெரும் பணம் பாத்துட்டான். நாம மட்டும் என்ன முட்டாளா?” வீராவேசமாய் பேசினார் ராமன்.

“பணத்தை  சாப்பிட முடியுமாங்க?”

“முடியாது. ஆனால் பணத்தைக்கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிட முடியும். எப்படி மடக்கினேன் பாத்தியா?”

“ஐயே! சாப்பாடு வாங்க சாப்பாடு இருக்கனுமில்லே? “

“அப்படியா பஞ்சம் வந்துடிச்சு?”

“பஞ்சம் வரலை. வந்துடும். ஏங்க இப்ப நம்ம ஊரில் ஏறக்குறைய நாம மட்டும் தான் விவசாயம் பண்றோம். நாமும் கடையை சாத்திட்டா ஊரிலே விவசாயமே இல்லை. விளைச்சலே இல்லை.” ஆதங்கப்பட்டாள்.

“அதுக்காக நாம நஷ்டப்பட முடியுமா?”

“இப்ப என்ன பணம்தானே உங்களுக்கு பிரச்சனை? நான் படிச்சிருக்கேன். நாளையிலிருந்து எங்கண்ணன் கம்பெனிக்கு வேலைக்கு போறேன்.”

“ஐய்யய்யே! நீ வேலைக்கு போனால், நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது?” பதறினார் ராமன்.

“ஏங்க ஒரு குடும்பத்துக்கு சாப்பாடு போடற நானே வேலையை மாத்தினால் சாப்பாடு திண்டாட்டமா இருக்கே, ஊருக்கே சாப்பாடு போடற நீங்க வேலையை மாத்தினால் என்னாகும்?”

விவசாயி ராமன் சிந்திக்க ஆரம்பித்தார்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com