

"தம்பி! அரிசி உப்புமா சாப்பிடுங்க" என்றார் எங்களது பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்த வயதான பாட்டி.
நல்லெண்ணெய் அங்கங்கு பளபளக்க, கடலைப் பருப்பு அங்கங்கு கண்சிமிட்ட, கடுகு அங்கங்கு கொட்டைக் கண்ணால் எட்டிப் பார்க்க, மண மணக்கும் அரிசி உப்புமாவை, எனது கைகளில் அப்போது கழுவிய எவர் சில்வர் தட்டில் வைத்து, என் கண் முன்பு நீட்டினார்.
"பாட்டி! அரிசி உப்புமா தூள். கலக்குறீங்க!" என்றேன் நான்.
"இது என்ன தம்பி பெரிய விஷயம்! என் புள்ள கமலநாதன் அரிசி உப்புமா சுவையில இது பாதி கூட வராது. அவன் ஒம்பதாம் கிளாஸ் படிச்ச போதே, நான் விலக்கு ஆகி இருந்தா எனக்காக அரசி உப்புமா பண்ணி கொடுத்து தூள் கிளப்புவான். கடலைப் பருப்பு மட்டும் இல்லாம தனியா முந்திரிப்பருப்பை நெய்யில வறுத்து அதையும் கூட சேர்த்து, அந்த அரிசி உப்புமாவை சாப்பிடும்போது கிடைக்கிற சுவையே தனி தம்பி!" என்றார் பாட்டி.