
ரஞ்சனி - சுந்தரம் தம்பதிகளின் தவப்புதல்வன் பாரதி. ஒரு 25 – 30 வருடங்களுக்குப் பின், இவனைப் பெற அவனது பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ என்று அனைவரும் வியக்கப் போகின்றனர். அது அப்புறம்… இப்பொழுது அவர்கள் தவமேதும் மேற்கொள்ளாமல் திருமணமாகி 2 வருடங்களில் ஜனித்தவன்தான் பாரதி.
ரஞ்சனி, சுந்தரம் இருவருக்கும் தெரிந்ததெல்லாம் ஆபீஸ், வீடு, சம்பாத்யம், வரவு செலவை சமாளித்துக் பணத்தை சேமிப்பது… இவ்வளவே. வீடு, நிலம் கொஞ்சம் பணம் என்று பெற்றோர் விட்டுச் சென்ற பூர்வீக சொத்து, கணவன் மனைவி இருவரும் சென்ட்ரல் கவர்மென்ட் உத்யோகம், என்று பொருளாதார ரீதியாக வெல் செட்டில்ட். பிள்ளையைப் பிரமாதமாகப் படிக்க வைக்க வேண்டுமென்று முடிவெடுத்து, டாப் ராங்கிங் பள்ளியில் சேர்த்தனர்.
பாரதி நன்கு படித்தான். ஒரு சம்மர் ஹாலிடேயில், பொழுது போவதற்காகப் பெற்றோர் பாட்டுக் கிளாஸில் சேர்த்து விட்டனர். ஒரே மாதத்தில், பாட்டு வாத்தியார் சுந்தரத்துக்கு ஃபோன் செய்து, “சார்! இத்தனை இனிய குரல் வளமும், ஞானமும் என் வயதில் நான் கண்டதில்லை. ஹீ வில் பீ எ கிரேட் ம்யூஸிஷியன் சம் டே!”, என்றார்.