
ராகவன் ஒரு சிறந்த எழுத்தாளர். சாகித்திய அகாடமி விருது பெற்றவர். அவர் எழுத்தில் யதார்த்தம் மிஞ்சி இருக்கும். எளிய நடை. இனிய தமிழ். பல நாவல்கள் எழுதி உள்ளார். பல சிறுகதை தொகுப்பு நூல்களும் வெளியிட்டு உள்ளார். ஊட்டி மலைவாழ் மக்கள் பற்றி எழுதிய நாவலுக்குச் சாகித்திய அகாடமி பரிசு, விருதும் கிடைத்தது.
இரண்டு வருடங்களுக்கு முன் அவர் ‘ரௌடி’ என ஒரு கதை எழுதினார். அதில் ஐ.ஐ.டி (சென்னை) வனபகுதியில் ரௌடிகள் பதுங்கி இருப்பதாகக் கதையை ஆரம்பித்தார்... போலீஸுக்குத் தகவல் கிடைத்து அங்கு சென்று, மோதலில் ஈடுபட்டு மூன்று ரௌடிகளையும் சுட்டு பிடிக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர்.
இதுதான் அவர் எழுதிய கதையின் சாராம்சம். ஆனால், அவரது கதை பிரசுரம் ஆன நாள், உண்மையிலே அந்தச் சம்பவம் நடந்தது. ஆம் மூன்று ரௌடிகள் பிடிபட்டனர்.
மறுநாள் எழுத்தாளர் ராகவன் கதையில் எழுதியது அப்படியே நடக்கிறது; அமானுஷிய சக்தி பெற்றவர் என்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் தலைப்பு செய்திகள் வந்திருந்தன. இது தற்செயலாக நடந்தது என்று ஊடகங்களுக்குப் பதில் அளித்தார் ராகவன். திரும்பத் திரும்ப அதே கேள்விகளைக் கேட்பதால் ராகவன் மனச்சோர்வு அடைந்தார். எழுதுவதை சற்று நிறுத்தி வைத்தார்.