பெட் கட்டினான், சத்யன். ஒரே வீச்சில் வெட்டி சாய்த்து விடுவதாக.
"உன்னால் முடியாது..!" என்றான் குமார். அவன்தான் ஆரம்பித்து வைத்தவன்.
மணியும், சந்துருவும் உன்னால் முடியும் என்று ஒருவனும், முடியாது என்று மற்றவனும் உசுப்பேத்தி விட்டனர்.
அந்த நால்வரும் ஒரே கிராமத்தில் வசிக்கும் இளம் வட்டங்கள். ஒன்றாக பயின்ற இளம் வயது நண்பர்கள். எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள். துடி துடுப்பானவர்கள். கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.
கூடி பேசினர். அக்கம் பக்கம் பார்த்து விட்டு ரகசியமாக திட்டம் தீட்டினர். பக் பக்கென்றது. யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமே, என்று.
மோட்டார் சைக்கிள் வரும் ஓசை கேட்டதும் உஷாரானார்கள். பேச்சை வேறு டாபிக்கிற்கு மாற்றினார்கள்.
வந்தது அடுத்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பூமிநாதன். இவர்கள் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தி, சிறிது நேரம பேசி விட்டு சென்றார். செல்லும் பொழுது 'பத்திரம்' என்று சொல்லி விட்டு சென்றார்.
குறிப்பிட்ட தினத்தில் திட்டமிட்டப் படி, நால்வரும், சப்தம் இடாமல் ஸ்பாட்டுக்கு வந்தனர். அந்த இடம் ஊருக்கு தள்ளியே இருந்தது சவுரியமாக போயிற்று அந்த நால்வருக்கும். இவர்கள் நால்வரையும், டார்க்கெட்டையும்' தவிர அந்த இடத்திலும் சுற்று வட்டராத்திலும் யாரும் இல்லை.
டார்கெட்டும் சுமந்து கொண்டிருந்த பாரம் தாங்காமல் தலையை சாய்துக் கொண்டு சலனமில்லாமல் நின்று கொண்டு இருந்தாள், நடக்கப் போவது என்ன வென்று அறியாமல்.
நால்வரும் மவுன மொழியில் பேசிக் கொண்டனர், சைகைகளின் உதவியால். மற்ற மூவரின் எதிரில் தனது சவாலை ஒரே வீச்சில் நிறைவேற்றினான், சத்யன், தன் கையில் வைத்து இருந்த நீளமான நன்கு தீட்டப்பட்ட கத்தியின் உதவியால்.
அவன் வெட்டியவுடன், சிதறியது. சப்தம் வெகு தூரம் கேட்கவில்லை.
அடுத்து, ஆக வேண்டிய காரியங்களை நால்வரும் சேர்ந்து விரைவாக செய்துவிட்டு, அந்த கொலை விழுந்த இடத்தில் தடயங்கள் ஏதும் வைக்காமல் நன்றாக சுத்தம் செய்தனர். பிறகு சப்தம் செய்யாமல் அந்த இடத்தை விட்டு நழுவினர்.
இரண்டு நாட்கள் கழித்து கிராமத்தின் விழா மேடையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கைகளினால் பரிசு பெற்றான் சத்யன். நண்பர்களிடையே ஆன சவாலின் படி பந்தயத்தில் வென்றதற்காக.
எல்லோரும் வாழ்த்தினார்கள். வென்றால், இன்ஸ்பெக்டர் கைகளினால் பரிசு அளிக்கப்படும் என்பதுதான் பந்தயம்.
அப்படி யாரைத்தான் ஒரே வீச்சில் வெட்டினான் சத்யன்? யாரையும் அல்ல. மணியின் தோட்டத்து வாழை மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வாழை கொலையைத் தான்.