

இரவு நேரத்து திருப்தியான சாப்பாடு முடித்தவுடன், மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு கொஞ்ச நேரம் உற்சாகமாக ஏதாவது கதை பேசிக் கொண்டிருப்பது சந்தானம் – பாக்கியலட்சுமி குடும்பத்தினரின் வழக்கம்.
குடும்பத்தினர் என்றால் இருவரையும் தவிர்த்து பதினேழு வயது அட்சயா, அவளது தம்பி கண்ணபிரானும் அதில் அடக்கம்!
அன்றைக்கும் பேச்சு ஆர்வமாகத் துவங்கி சந்தானத்தின் அலுவலகத்தில் நடந்த சுவாரசிய சம்பவம், கண்ணபிரான் நண்பனின் வகுப்பு சேட்டை, பாக்கியலட்சுமியின் அக்கம்பக்கத்து மக்களின் வாழ்வியல் நடைமுறை என்றெல்லாம் திசைமாறிக் கொண்டிருந்தது.
அமைதியாக ஏதோ யோசனையில் இருந்த அட்சயா திடீரென அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டாள். அவளது தலையை அன்புடன் தடவிக் கொடுத்தார் அவர்.
“அப்பா உங்களை ஒண்ணு கேட்கணும். சின்ன வயசுல, நீங்க பள்ளியில படிக்கும்போது… வளர்ந்து பெரிய ஆளா ஆனப்புறம் என்னவாக வரணும்ன்னு ஆசைப்பட்டீங்க..?”