
அந்த கம்பெனியில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சைத்தான் இந்த மதன்புரி மகாதேவன். இவரை நினைத்தாலே பலருக்கு சிம்ம சொப்பனம். அந்த அளவுக்கு பாடு படுத்திவிடுவார். இவர்தான் கம்பெனியின் ஆல் இன் ஆல் அழகிரி. இவரை எதிர்த்தால் எங்குமே வேலை கிடைக்காமல் செய்து விடுவார். அந்த அளவு பெரும் குணம் கொண்ட மாமனிதர் மகாதேவன். யாரும் இவரை எதிர்க்க துணிவதில்லை. அவர் எது சொன்னாலும் வாய் பேசாமல் ஊமையாகவும் எதுவும் கேட்காத செவுடாகவும் இருந்து வேலை முடித்து செல்வார்கள்.
முதலாளி ஒரு ஜாலி பேர்வழி. பல நாட்கள் வெளி நாடுகளில்தான் இருப்பார். அதனால் மதன்புரி வைத்ததுதான் வேதவாக்கும் சட்டமும். ஒரு நாள் அரை மணி தாமதமாக வந்தாலும் சம்பளத்தை குறைக்கும் மகா புண்ணியவான் இந்த மதன்புரி மகாதேவன். பெயருக்கேற்ற குணம் கிடையாது. எப்பவுமே மூக்கு பொடி போட்டது போல் மூக்கும் கண்களும் சிவந்தே இருக்கும். சிடு சிடு மேன் என்றுதான் இவருக்கு நெருங்கிய பெரிய மனிதர்களே அழைப்பார்கள்.