
2025
முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகும் ஒரு மனிதனால் அதே தோற்றத்தில் இருக்க முடியுமா! ஆச்சரியமாகவும் சிறிது அதிர்ச்சியாகவும் இருந்தது முருகேசனுக்கு. அது அவன்தானா இல்லை தனது மனப் பிராந்தியா என்பதை முருகேசனால் அறுதியிட்டு உணரமுடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புகூட அவனது நினைவு வந்து முருகேசனின் நெஞ்சைச் சற்று நெருடி விட்டுச் சென்றது. தான் நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டிய நபர்களில் ஒருவனாக அந்த மனிதனை முருகேசன் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறான். தெரிந்தோ தெரியாமலோ இராஜாராம் எனும் பெயருடைய அந்த மனிதனின் படிப்பு பாதியில் நின்றுபோகக் காரணமாகி விட்டோம் என்ற குற்ற உணர்வுடன் இத்தனை காலமும் வாழ்ந்துகொண்டிருக்கிறான் முருகேசன்.
இராஜாராமைப் போன்றே, வயதுக்கு அதிகமான தடித்த உயரமான உருவம்! பதினாறு வயதிலேயே இருபது வயது இளைஞனுக்கு உண்டான முதிர்ந்த உருவம்! எப்படிப் பார்த்தாலும் இது இராஜாராமாக இருக்க முடியாது. முப்பத்தெட்டு ஆண்டுகள் அவனது உருவத்திலும் தோற்றத்திலும் எத்தனையோ மாற்றங்களை உருவாக்கி இருக்குமே! தன்னைப்போல் அவனும் முதுமையைத் தொட்டிருப்பானே என்றெல்லாம் எண்ணிக்கொண்டான் முருகேசன். வந்து வரிசையில் நின்றிருக்கும் அந்தப் பையன் இராஜாராமின் மகனாக இருக்கக்கூடும். என்னதான் மகன் என்றாலும் அப்படியே அச்சடித்தாற் போன்றா இருப்பது! ஒருநிமிடம் முருகேசனின் கதி கலங்கிவிட்டது.