

அண்ணன் பிரபுவுக்கு அன்று அஃபிஷியலாக டிவோர்ஸ் பேப்பர்ஸ் வந்து விட்டது. மூன்று வருஷங்களுக்கு முன் மெஹந்தி, சங்கீத், நலங்கு என்று படு விமரிசையாக நடந்த கல்யாணத்தை, இருவரும் ஒரு சேர நிராகரித்து, நிரந்தரமாகப் பிரிந்து வாழ்வதற்கான ஒப்புதல் கைக்கு வந்துவிட்டது.
“பிருந்தா வேறு காரணங்கள் ஏதுமின்றி ‘மனமொத்துப் பிரிகிறோம்‘ என்று வழக்கை ஃபைல் பண்ணியிருக்கிறாள். காம்பன்சேஷனும் தேவையில்லையாம்! பேசாமல் தலை முழுகி விடு“, என்றார் வக்கீல். வீட்டில் கல்யாண வயதில் உடன் பிறந்தவள் இருக்கும் போது, அவசரமாகக் காதல் கல்யாணம் ஆகி, பின் அதி அவசரமாக விவாகரத்தும் ஆகிவிட்டது. ஆன கையோடு "பிரபு இனிமேல் கல்யாணம் என்கிற பேச்சே என் லைஃப்ல கிடையாது", என்று டில்லிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போயேவிட்டான்.
“நீயாவது….“, என்று ஆரம்பித்த அப்பா - அம்மாவின் புலம்பல் காரணமாக, வேலையில் சேர்ந்து மூன்று வருடம் கழித்துத் தான் கல்யாணம் என்ற அவள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.