
பிச்சனுக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை! வயதாகிப் போய், பார்வையும் குறைந்து போனபிறகு, மகன் மருதனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ‘அக்கடா’ என்று இருந்தாலும், நேற்று தேவர் இறந்த செய்தி கேட்டதிலிருந்து பிச்சனுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை! தேவரைப் பிச்சனால் எப்படி மறக்க முடியும்?
பிச்சனை அந்த ஊர் வெட்டியானாக நியமித்ததே முருகையா தேவர்தான். அப்பொழுது அவர் அந்த ஊரின் பட்டாமணியார். சிறு வயதிலேயே அப்பா-அம்மாவை இழந்து, சித்தப்பா-சித்தியுடன் சிரமப்பட்டுக் கொண்டு கிடந்த அவனுக்கு அவர்தான் அந்த வழியைக் காட்டினார். சுமார் 300 வீடுகளைக் கொண்ட அந்தச் சிறிய கிராமத்தில், மூன்று வெட்டியான்களில் அவனும் ஒருவன் ஆனான்.
இறப்புச் செய்திகளை உறவினர்களுக்கு அறிவிப்பது, மரணமடைந்தவர்களுக்குச் சிதை தயாரிப்பது, இறந்த உடல்கள் முழுதும் வேகும் வரை உடனிருந்து பார்த்துக் கொள்வதென வெட்டியான்களின் பொறுப்பு அதிகம்! அதோடு மட்டுமா?