
சோழன் எக்ஸ்பிரஸ் சரியாக காலை எட்டு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விட்டது. ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரில் உள்ள இரண்டாவது பெண் வீட்டுக்கு செல்கிறார்கள். லக்கேஜ் அதிகம் இல்லை.
பார்வதி மாமிக்கு எழும்பூரிலேயே ஆனந்த விகடன், மங்கையர் மலர் இரண்டும் வாங்கிக் கொடுத்து விட்டார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாமி அதில் மூழ்கி விட்டாள். மாமாவுக்கு அதில் இன்டெரெஸ்ட் இல்லை. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு, யூட்யூபில் இருந்து டவுன்லோடு செய்த எம்.எஸ்.ஜி வயலின் கச்சேரியை கேட்க ஆரம்பித்தார்.
செங்கல்பட்டு தாண்டியதும் வீட்டிலிருந்து கொண்டு வந்த மிளகாய்ப்பொடி தடவிய இட்லியையும் சாப்பிட்டாகி விட்டது. மாமிக்கு டிபனுக்கு அடுத்தது காபி குடித்தால் தான் டிபன் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.
"காபி வந்தா வாங்குங்கோ… நான் விகடன் பாத்துண்டிருக்கேன்."
"இந்த பேண்ட்ரி கார் காபி நன்னா இருக்காது. திண்டிவனம் ஸ்டேஷன்ல வாங்கித் தரேன்.."
"சரி".
வண்டி திண்டிவனத்தை அடையும்போது மணி 9.50. வண்டி பிளாட்பாரத்தை அடையும் போதே தயாராக வாசலுக்கு போனார். நல்ல வேளை ரெடியாக காபி வெண்டார் ஓர் ஆள் இருந்தான்.
"ரெண்டு காபி குடுப்பா".
முதலில் ஒரு காபியை மாமியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் இரண்டாவது காபியை சீட்டில் வைத்து விட்டு, அவனுக்கு பணம் கொடுக்க பர்ஸை எடுத்தார். ஒரு 200 ரூபாய் நோட்டுதான் இருந்தது. அதை அவனிடம் கொடுத்தார்.
"சார் 20 ரூபாயா இல்லையா சார்.."
"இல்லையேப்பா"
அவன் பாக்கியை கொடுக்க, தன் பாக்கெட்டை துழாவினான். அதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது. பாக்கெட்டை துழாவிக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்தான். அதற்குள் வண்டி பிளாட்பாரம் எல்லையை கடந்து விட்டது. அதற்கு மேல் அவனால் ஓடிவர முடியவில்லை.