

வாசுதேவனுக்கு அன்று காலை முதலே மனம் அமைதியில்லை.
வாசலுக்கும் சமையலறைக்கும் இடையே நடந்தபடியே இருந்தார்.
இந்த வீட்டின் செங்கற்கள் போலவே, அவரின் நெஞ்சமும் பல ஆண்டுகளாக அமைதியாகத் தாங்கிக் கொண்டிருந்தது.
சமையலறையில் கோமளா கேசரியை கிண்டிக் கொண்டிருந்தாள்.
“இன்னும் வரலையா?”
அவர் கேட்டார். பதில் சொல்லாமல், அவள் கேசரியை ஹாட் பேக்கில் மூடி வைத்தாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை.
வாசுதேவன் சிறுபிள்ளை போல ஓடினார். மகன் விஸ்வநாதன், மருமகள் சம்யுக்தா,
பேரன்கள் கௌதம், கௌசிக்...
ஒவ்வொருவராக இறங்கினர்.
“தாத்தா!”
கௌதம் கட்டி அணைத்தான்.
“பாட்டி எங்கே?”
அவன் கேள்வி முடிவதற்குள்,
கோமளா அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
வாசுதேவனும், கோமளாவும் தனியார் வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பணம் சேர்த்தார்கள். ஆனால் அதைவிட மனிதர்களைச் சேர்த்தார்கள்.
வீட்டின் கீழ்பகுதியில் ஒரு சிறிய நூலகம். காலனி குழந்தைகளும் மாணவர்களும் அங்கு வந்து படிப்பது வழக்கம்.
முன்வாசலில் காய்கறித் தோட்டம்.
மல்லி, முல்லை, ரோஜா.
மீதமான பூக்களும் காய்கறிகளும் அருகிலுள்ளவர்களுக்கே.
சனிக்கிழமை தோறும் பிள்ளையார் கோயிலில் பிரசாதமும், வாசுதேவன் செய்த காகிதப் பொம்மைகளும், அந்தக் காலனியில் உள்ள குழந்தைகளுக்கே!
அந்தக் காலனியில்அவர்கள் “பேங்க் தாத்தா – பாட்டி.”
மருமகள் சம்யுக்தா கும்பகோணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவள். அமெரிக்க வாழ்க்கை அவளுக்குள் வேறு கனவுகளை விதைத்திருந்தது.
“இந்த வீட்டை இடிச்சு ஒரு அப்பார்ட்மென்ட்… அல்லது ஒரு வில்லா…” இந்த எண்ணம் ஒவ்வொரு அழைப்பிலும் வலுப்பெற்றது.
இந்த முறை இந்தியா வந்ததே ஒரு முடிவுக்காக.
ஒரு வாரம் கழிந்த மாலை.
முன் அறையில் நாளிதழ் படித்துக் கொண்டிருந்த வாசுதேவனின் முன் அமர்ந்தனர் விஸ்வாவும் சம்யுக்தாவும்.
“அப்பா… வீட்டைப் பற்றி ஒரு முடிவு எடுக்கணும்.” பேச்சு நீண்டது.
இறுதியில் ஒரே வார்த்தை விழுந்தது. “முதியோர் இல்லம்.”
கோமளா பேசவில்லை. வாசுதேவனும்...
அருகிலிருந்த சோபாவில் கௌதம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு—
“அப்பா… உங்களிடம் பேசணும்.”
கௌதம் மெதுவாகச் சொன்னான்.
“பாட்டி தாத்தா இப்ப தான் இங்க நிம்மதியா இருக்காங்க. என் படிப்பு, என் வளர்ப்பு எல்லாத்துக்கும் இவர்கள் தான் காரணம். தாத்தா கோவிலுக்கு அருகில் 25 சென்ட் நிலத்தை என் பெயர்ல பதிவு பண்ணியிருக்காரு. அங்க நானும் கௌசிக்கும் ஒரு சின்ன நூலகம் கட்டப் போறோம். குழந்தைகளுக்கு இலவச டியூஷன். பெரியவர்களுக்கு புத்தகம், உரையாடல், மன ஆறுதல்.”
அவன் குரல் உறுதியானது.
“முதியோர் இல்லம் வசதிகளை தரும். ஆனா மன நிம்மதி பணம் கொடுத்தா கிடைக்காது அப்பா. நாளைக்கு நமக்கும் வயசாகும்.”
அமைதி.
அந்த அமைதி விஸ்வாவின் மனதுக்குள் ஒரு தீர்ப்பை எழுதினது.
சம்யுக்தாவின் கண்கள் நனிந்தன.
விஸ்வா கௌதமைக் கட்டி அணைத்தாள்.
“என் மகனடா நீ…”
வாசுதேவன் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்.
அது..
செங்கல்லால் கட்டிய ஒரு கட்டடம் அல்ல. நெஞ்சங்களால் கட்டிய ஒரு இல்லம். நெஞ்சங்கள் இன்னும் வலுவாக இணைந்தன.