
கிழவருக்கு அங்கேயிருந்து போகும் எண்ணம் இல்லை. தனக்கு உருவம் ஏதும் இல்லாமல் இருப்பது எப்படி என்பது பிடிபடாமல், ஏதோ ஒரு பலூன் போல ஆகாயத்தில் மிதந்தவாறே, நடப்பதையெல்லாம் காணவும் கேட்கவும் முடிவது ஒரு ஆச்சரியமான அனுபவம் அவருக்கு.
கீழே ஹாலில் வெறும் தரையில் அவர் உடலைக் கிடத்தியிருந்தார்கள். இன்னும் ஐஸ் பெட்டி வரவில்லை. நாளை காலைதான் உடம்பை எடுக்க இருப்பதாகப் பேச்சு. மனைவி சிவகாமியே கரூரிலிருந்து இன்னும் வந்தபாடில்லை. பின் கொல்லத்தில் இருக்கும் பிள்ளை வரவேண்டும்; கோயமுத்தூரிலிருந்து மூத்த பெண் வந்தாக வேண்டும்.
கிழவருக்கு, தம் உடம்பைப் பார்க்கவே பிடிக்கவில்லை. தாவாங்கட்டையைத் துணியால் இழுத்துத் தலையோடு கட்டியிருந்தாலும் அவர் வாய் பாதி திறந்துதான் இருந்தது. மூக்கு ஓட்டைகளில் சுருட்டி அடைத்த பஞ்சு. ஒற்றைக் கீற்றாய் விபூதியை ஒன்றரை அங்குல நீளத்துக்கு நறுக்கென்று இட்டுக்கொண்டால்தான் அவருக்குப் பிடிக்கும். யாரோ, நன்றாக மூன்று பட்டை வீபூதியை நெற்றி நிறையக் குழைத்துத் தீட்டியிருந்தார்கள். கண்றாவி! நரைத்த தலை முடி பரட்டையாய்க் கலைந்திருந்தது. ஒரு சீப்பு வைத்துக் கொஞ்சம் வாரி விடப்படாதா?