

இளம்பாரதி அலுவலகத்திலிருந்து வெளியே வந்து கார் பார்கிங்ல் நுழைந்தான்.
செக்யூரிட்டி சல்யூட் ஒன்று போட்டான்.
இளம்பாரதி பதிலுக்கு கையை நெற்றி அருகே கொண்டு சென்று 'குட் ஈவினிங்' சொல்லி விட்டு திரும்பியபோது தான் அவளை கவனித்தான்.
செக்யூரிட்டி தங்கும் அறையினுள் ஒரு கையில் துடைப்பமும் மறுகையில் பிளாஸ்டிக் பக்கெட் சகிதமாக நுழைந்தாள் அவள்.
அவளா? இருக்காது…!
'சதா அவளையே நினைத்திருப்பதால் அவளைப் போன்றே எல்லோரும் தெரிகின்றனர் போலும்?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்து யூடேர்ன் அடித்து திரும்பிய போது செக்யூரிட்டி அறையிலிருந்து அவள் முந்தானை தலைப்பால் நெற்றியை துடைத்தவாறு வெளியே வந்தாள்.
இப்போது இளம்பாரதியால் அவளை நன்றாக அருகில் பார்க்க முடிந்தது.
'அவளேதான்! ஏன் அவளுக்கு இந்த வேலை? அவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாளா?'
இளம்பாரதியால் 'அவள்' என்று விளிக்கும் அந்த பெண்ணுக்கு நாற்பது வயது இருக்கும்.
முன் வகிடு பகுதியில் குங்குமம் இழுத்திருந்தாள். வகிடின் இருபுறமும் இருந்த ஒரு கற்றை முடி நரைத்துப் போயிருந்தது.
சாதாரண காட்டன் புடவையில், இளைத்த படி தெரிந்தாள்.
கழுத்தில் மஞ்சள் கயிறு கறுத்துப் போயிருந்தது.
"காஞ்சனா!" ஒரு முறை உச்சரித்துப் பார்த்தான்.
இனிக்கவில்லை... 'ஏன் நான் அவளை நினைக்க வேண்டும்?'
ஆனால் நித்தம் அவள் தன்னை நினைப்பாள் என்று மட்டும் உறுதியாக நம்பினான்.
பழைய நினைவுகள் சுமையாகிப் போனது.
மீண்டும் நினைவுபடுத்த மனசு தயாராக இல்லை.
குழப்பமான மனநிலையில் காரை நிதானமாக ஓட்டத் தொடங்கினான்.
பதினேழு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்க மறுத்தாலும் அதுவாகவே நினைவுக்கு வந்தது.